ரத்தத்தில் சர்க்கரை அளவு குறைந்தாலும் அபாயம்
சர்க்கரை அளவு குறைந்தாலும் ஆபத்து என்கிறார், இதயங்கள் அறக்கட்டளை நிறுவனர் டாக்டர் கிருஷ்ணன் சுவாமிநாதன்.அவர் கூறியதாவது:குளூக்கோஸ் (சர்க்கரை) நீங்கள் உட்கொள்ளும் உணவு மற்றும் பானங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகளிலிருந்து கிடைக்கிறது. ரத்தம், குளூக்கோஸை உடலின் அனைத்து செல்களுக்கும் கொண்டு சென்று, ஆற்றலுக்காகப் பயன்படுத்துகிறது.குளூக்கோஸ் மிகவும் முக்கியமானது, ஏனெனில் இது உங்கள்மூளைஆற்றலின் முதன்மை மூலமாகும். சர்க்கரை நோய் உள்ள அனைவரும் திடீரென,சர்க்கரை அளவு குறைந்தால் ஏற்படும் அறிகுறிகளை அறிந்திருப்பது அவசியம்.சர்க்கரை அளவு குறைதல் ஒரு அபாய நிலை. இது, ஹைபோகிளைசீமியா என, ஆங்கிலத்தில் கூறப்படுகிறது. ரத்த சர்க்கரை அளவு 70 மி.கி.,/டி.எல்., க்கு கீழே சென்றால்,மூளையின் செயல் திறன் பாதிக்கப்படும்.சர்க்கரை மிகவும் குறைந்தால், நெஞ்சில் படபடப்பு உண்டாகும், கை, கால்களில் நடுக்கம் அதிகளவில் இருக்கும்., அதிகமாக வியர்த்து கொட்டும், தலை சுற்றும், மயக்கம் வரும், பசி அதிகம் இருக்கும், மனம் குழம்பும், இறுதியில் தொடர் மயக்க நிலைக்கு (கோமா) கொண்டுபோய்விட்டு விடும்.பல நோயாளிகள், இந்த அறிகுறிகளை மாரடைப்பு என,தவறாகப் புரிந்துகொண்டு நள்ளிரவு நேரத்திலும் அவசரம், அவசரமாக மருத்துவமனைக்கு ஓடுவர். நரம்பு வாயிலாக குளூக்கோஸ் ஏற்றிய பிறகு தான், இயல்பு நிலைக்குத் திரும்புவார்கள்.சர்க்கரை குறைந்து விட்டதற்கான அறிகுறிகளைத் தெரிந்து கொண்டால், நான்கு கரண்டி சர்க்கரையை எடுத்துக் கொண்டால் போதுமானது. நிலைமை சீராகிவிடும். சர்க்கரை அளவும் மிகவும் குறைந்துவிட்டால் சிலருக்கு மாரடைப்பு, பக்கவாதம் ஏற்படவும் வாய்ப்பு உண்டு. இதனால் உயிரிழக்கும் அபாயமும் உண்டும். எனவே, 'லோ சுகர்' அறிகுறிகளை தெரிந்து கொள்வது மிகவும் முக்கியம். அலட்சியம் செய்யக்கூடாது.இந்நோயால் பாதிக்கப்பட்ட ஏழைக் குழந்தைகளின் பெற்றோர் தயங்காமல், இதயங்கள் அறக்கட்டளையை, 76393 44466 என்ற எண்ணில் அழைக்கலாம். தமிழகத்தில் எங்கு இருந்தாலும், தொடர்பு கொள்ளலாம். அனைத்து உதவிகளும் வழங்கப்படும்.இவ்வாறு, அவர் கூறினார்.