உள்ளூர் செய்திகள்

அளவுக்கு அதிகமான பால் குழந்தைகளுக்கு ரத்த சோகை வரலாம்

குழந்தைகளுக்கு ரத்த சோகை ஏற்பட காரணம்?ஒன்று - மூன்று வயது வரை உள்ள குழந்தைகள், வளர் இளம் பருவ குழந்தைகளே, ரத்த சோகையால் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இரும்புச்சத்து குறைபாடு இருப்பதே, இதற்கு முக்கிய காரணம். குழந்தைகள் என்றாலே, பால், பால் சார்ந்த பொருட்களையே பிரதானமாக தருகிறோம்.பாலில், அதிகளவில் புரதம் மட்டுமே உள்ளது; இரும்புச்சத்து கிடையாது. ரத்த சோகை வருவதற்கு இன்னொரு முக்கிய காரணம், வைட்டமின் பி 12 குறைபாடு.பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு, குடல் புழு, கொக்கி புழுக்களின் பாதிப்பு குடலில் இருந்தாலும், ரத்த சோகை வரலாம். அளவுக்கு அதிகமாக பால் குடிக்கும் குழந்தைகள், தாய்ப்பாலுக்கு பதிலாக, புட்டிப்பால் குடிக்கும் குழந்தைகள், சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு, ரத்த சோகை வரும் அபாயம் அதிகம்.மரபியல் காரணிகளால் ரத்த சோகை வருமா?சில குழந்தைகளுக்கு, பிறவியிலேயே, ரத்த சிவப்பணுக்களின் வடிவம், வழக்கத்தை விட மாறுபட்டதாக இருக்கும். இந்த நிலையில், ரத்த சிவப்பணுக்கள் தொடர்ந்து அழிந்து கொண்டே இருப்பதால், ரத்த சோகை வரலாம்.புரதச்சத்தும், இரும்புச்சத்தும் சேர்ந்த, 'ஹீமோகுளோபின்' குறைபாடு, பிறக்கும் போதே இருந்தால், ரத்த சிவப்பணுக்கள் அழியும்.இதனாலும், பிரச்னை வரும். எலும்பு மஜ்ஜை உற்பத்தி செய்யும் அனைத்து செல்களுமே, காரணம் இல்லாமல் அழிவதாலும், தீவிர ரத்த சோகை வரலாம்.குழந்தையின் உடலில் உள்ள எதிர்பணுக்கள், எதிர்பாராத விதமாக, ரத்த சிவப்பணுக்களை அழிப்பது, ரத்த கேன்சர் பாதிப்பு, வளர் இளம் பருவத்தில் உள்ள பெண் குழந்தைகளுக்கு, மாதவிடாயின் போது ஏற்படும் அதிக ரத்த போக்கு போன்றவற்றாலும், இப்பிரச்னை வரலாம்.எப்படி கண்டுபிடிப்பது?ரத்த பரிசோதனையில் தெரிந்து கொள்ளலாம். வெளிர் நிறத்தோல், கன்னங்கள், உதடுகள், கண் இமைகளின் உட்புறம், விரல் நகங்கள் வெளுத்து இருப்பது, மூச்சு திணறல் போன்றவை, இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கான, ரத்த சோகை அறிகுறிகள்.அதிக பசி உணர்வு, மண், சிமென்ட் போன்றவற்றை சாப்பிடும் ஆர்வம், படிப்பு, விளையாட்டில் ஆர்வம் குறைவது, வளர்ந்த குழந்தைகளிடம் உள்ள அறிகுறிகள்.சிகிச்சை முறைகள்?இரண்டு வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் என்றால், இரும்புச்சத்து நிறைந்த, ஊட்டசசத்து மிகுந்த உணவின் வழியே சரி செய்யலாம். தினமும், 400 மில்லி மட்டுமே, பால் தர வேண்டும். பால் அளவை ஈடு செய்யும் விதமாக, இரும்புச்சத்து நிறைந்த காய்கறிகள், கேழ்வரகு போன்ற உணவுகளை, ஆறு மாதத்திலேயே தர வேண்டும். ஓராண்டிற்கு பின், அவித்த மீன், சிக்கன், முட்டை தரலாம். இரும்பு சத்து டானிக், மூன்று மாதங்களுக்கு தினமும் தர வேண்டும்.குடல் புழுக்களை நீக்க தேவையான மாத்திரையை, இரண்டு வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு தர வேண்டும்.பாதிப்புகள் என்ன?ரத்த சோகை என்பது, குழந்தைகளுக்கு பொதுவான பிரச்னையாக உள்ளது. இது, மூளையின் செயல்பாட்டை பாதிக்கும்; கவனக்குறைவு வரும். தீவிர ரத்த சோகையால், இதய செயலிழப்பு ஏற்படும். ரத்த சோகை அறிகுறிகள் தெரிந்தால் அல்லது இருக்கலாம் என்ற சந்தேகம் இருந்தால், உடனே குழந்தைகள் நல மருத்துவரிடம் ஆலோசனை பெற வேண்டும்.- டாக்டர் ஜனனி சங்கர்குழந்தைகள் நல சிறப்பு மருத்துவர்,காஞ்சி காமகோடி சைலட் டிரஸ்ட் மருத்துவமனை,சென்னை044 - 4200 1800


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !