உள்ளூர் செய்திகள்

"எத்தனை நாளுக்கு ஒருமுறை பரிசோதனை தேவை

* எஸ்.பிரபாதேவன், மதுரை: எனது வயது 42. ரத்தஅழுத்தம் 150/100 என இருந்ததால், டாக்டர் 2 மருந்துகள் தந்தார். தற்போது கட்டுப்பாட்டில் உள்ளது. ஆனால் எனது நண்பருக்கோ ரத்தஅழுத்தம் 180/100 என உள்ளது. அவர் மருந்து எடுக்காத நிலையில் எந்த பாதிப்பும் இல்லை. நான் அவசியம் மருந்து எடுக்க வேண்டுமா?ரத்த அழுத்தம் நார்மலாக 120/80 என்றளவில் இருந்தாக வேண்டும். ரத்தஅழுத்தம் 140/90க்கு மேல் இருந்தால், அதனை உயர் ரத்த அழுத்தம் என்கிறோம். ரத்தஅழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைக்க, உணவில் உப்பை குறைப்பது, தினமும் உடற்பயிற்சி, மனதை நிம்மதியாக வைத்துக் கொள்வது போன்றவை அத்தியாவசியமானது. இவைதவிர, உயர் ரத்தஅழுத்தம் உள்ள 90 சதவீதம் பேருக்கு மருந்துகளும் தேவைப்படும். ரத்தஅழுத்தம் 180/100 என்பது மிகஅதிக அளவாகும். இதை உடனடியாக கட்டுப்பாட்டில் கொண்டு வராவிட்டால், மூளை மற்றும் நரம்பு, கண், இருதயம், சிறுநீரகம் போன்ற உள்ளுறுப்புகள் கொடூரமாக பாதிக்கக் கூடும்.உடனடியாக உங்கள் நண்பரிடம், ரத்தஅழுத்தத்தை குறைக்கும் நடவடிக்கையை எடுக்கும்படி கூறுங்கள். ஒருவருக்கு எந்த வயதிலும், எந்தத் தருணத்திலும் 140/90க்கு கீழ், 120/80 என்ற அளவில் இருந்தாக வேண்டும்.* ஆர்.விமலா, திண்டுக்கல்: எனது கணவருக்கு இருதய பாதிப்பு ஏற்பட்டு 6 மாதங்களாகிறது. பல்வேறு காரணங்களால் அவருக்கு தூக்கம் குறைந்துவிட்டது. இதனால் மீண்டும் இருதய பாதிப்பு ஏற்படுமா?தூக்கம் என்பது ஒவ்வொரு மனிதருக்கும் அத்தியாவசியமானது. ஒவ்வொருவரும், தினமும் குறைந்தபட்சம் 7 மணி நேரம் தூங்க வேண்டும். இருதய நோயாளிகள் 8 மணி நேரம் தூங்குவது நல்லது. இருதய நோயாளிகளுக்கு தூக்கம் சரியாக இல்லையெனில், பதட்டம், நாடித்துடிப்பு, ரத்தஅழுத்தம் ஆகியவை அதிகரித்து, அதனால் இருதயம் பாதிக்கக் கூடும். எனவே உங்கள் கணவருக்கு எந்தக் காரணங்களால் தூக்கம் கெடுகிறதோ, அதை சரிசெய்ய நடவடிக்கை தேவை. மருத்துவரிடம் சென்று, இவ்விபரங்களை தெரிவித்து, அதற்கும் மருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். தூக்கம் என்பது இருதயத்துக்கு மட்டுமின்றி, அனைத்து உறுப்புகளுக்கும் 'பேட்டரியை ரீசார்ஜ்' செய்வது போன்றதாகும். யோகா, தியானம் போன்ற பயிற்சிகள் தூக்கத்திற்கு உதவும்.* ப. சந்தானம், ஆண்டிப்பட்டி: எனக்கு 4 ஆண்டுகளாக உயர் ரத்த அழுத்தம் உள்ளது. இதற்கு 'அம்லோடிபின்-5மி.கி.,' என்ற மாத்திரை எடுத்து வருகிறேன். இம்முறை மருத்துவரை சந்தித்தபோது, 'LOSARTAN' என்ற மருந்தையும் தந்துள்ளார். இதையும் தொடர்ந்து எடுக்கலாமா?'லோசார்டான்' என்பது, 'A.R.B' என்ற வகையைச் சேர்ந்த மருந்து. இது பல ஆண்டுகளாக உபயோகத்தில் உள்ளது. இது ரத்தஅழுத்தத்தை நன்கு கட்டுப்பாட்டில் வைக்கிறது. பக்க விளைவுகளும் மிகக்குறைவு. இது அம்லோடிபின் மாத்திரையுடன் சேரும்போது ரத்தஅழுத்தத்திற்கு கூடுதல் பலன் அளிக்கிறது. தொடர்ந்து எடுப்பது நல்லதே.* வி.சண்முகநாதன், சிவகங்கை: எனக்கு பை-பாஸ் சர்ஜரி செய்து இரு ஆண்டுகளாகிறது. தற்போது உடல் நிலை நன்றாக உள்ளது. நான் எத்தனை நாட்களுக்கு ஒரு முறை மருத்துவரை சந்தித்து பரிசோதனை செய்ய வேண்டும்?பைபாஸ் சர்ஜரி முடித்தவர், ஒவ்வொரு ஆண்டும் இருதய மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம். அப்போது ரத்தம், சிறுநீர், மார்பக எக்ஸ்ரே, எக்கோ, டிரெட்மில் பரிசோதனை அவசியம் செய்யப்படும். அந்த பரிசோதனைகளின் முடிவுகளுக்கு ஏற்ப, நீங்கள் எடுத்துக் கொண்டிருக்கும் மருந்துகள் மாற்றி அமைக்கப்படும். எனவே ஒவ்வொரு ஆண்டும் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெறுவது அவசியம்.- டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை. 0452- 233 7344


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !