தீவிர இருமல், சளித் தொல்லை...
எனது வயது 31. ஓராண்டுக்கு முன் மாரடைப்பு ஏற்பட்டது. நான் திருமணம் செய்து கொள்ளலாமா?எஸ்.முத்துப்பாண்டியன், மதுரை
இருதய ரத்தநாளங்களில், ரத்த ஓட்டம் தடைபட்டு அதனால் இருதய தசை பாதிக்கப்படுவதே மாரடைப்பு. இதன் தீவிரம் எந்த ரத்தநாளத்தில், எந்த இடத்தில் ரத்த ஓட்டம் தடைபட்டது என்பதைப் பொறுத்தே அமையும். பெரிய ரத்தநாளங்களில் ரத்த ஓட்டம் தடை ஏற்பட்டால், அதன் பாதிப்பு தீவிரமாக, உடனடி மரணம்கூட ஏற்படலாம். ஆனால், சிறிய ரத்தநாளங்களில் ரத்த ஓட்டம் தடைபட்டால், பாதிப்பு குறைவாகவே இருக்கும். உங்களுக்கு 31 வயதில் மாரடைப்பு ஏற்பட்டதால் எக்கோ பரிசோதனை, டிரெட் மில் பரிசோதனை மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை அவசியம். இவை அனைத்தின் முடிவுகளும், சீராக இருந்தால் தாராளமாக நீங்கள் திருமணம் செய்து கொள்ளலாம். ஆனால் தொடர்ந்து மருந்து, மாத்திரைகளை நீங்கள் எடுத்தாக வேண்டும்.
எனக்கு 6 ஆண்டுகளாக ரத்தக் கொதிப்பு உள்ளது. இதற்காக, 'Enalapril - 5 மி.கி.,' என்ற மாத்திரையை தினமும் 2 வேளை எடுத்து வருகிறேன். ரத்தஅழுத்தமும் கட்டுப்பாட்டில் உள்ளது. கடந்த 2 மாதங்களாக தீவிர இருமல், சளி, உள்ளது. பல மருந்து, மாத்திரைகள், சி.டி., ஸ்கேன் எடுத்தும் குறையவில்லை. நான் என்ன செய்வது?ஜெ.ராமன், கோவை
உங்கள் இருமலுக்கு காரணம் நீங்கள் எடுத்து வரும் Enalapril மாத்திரைதான். இது, 'Aceinhibitor' என்ற மருந்து வகையை சேர்ந்தது. இம்மருந்து எடுக்கும் சிலருக்கு, தீவிர இருமல் வரவாய்ப்பு உள்ளது. எனவே உங்கள் டாக்டரிடம் கலந்து பேசி, 'என லாப்ரில்' மாத்திரையை நிறுத்திவிட்டு, அதற்கு பதிலாக வேறு மாத்திரையை எடுப்பது நல்லது.
எனக்கு 12 ஆண்டுகளாக சர்க்கரை நோய் உள்ளது. இதற்காக மூன்றுவகை மாத்திரைகளும், ஆஸ்பிரின் மாத்திரைகளும் எடுத்து வருகிறேன். ஆனால் தற்போது ஆஸ்பிரின் மாத்திரை எடுக்கும்போது வயிறு வலிக்கிறது. எனவே அதை நிறுத்தி விடலாமா?கே.சங்கரபாண்டி, ராமநாதபுரம்
ஆஸ்பிரின் மாத்திரை இருதயத்தின் ரத்தநாளங்களில் ரத்தக்கட்டிகள் ஏற்படாமல் தடுக்கும் மாத்திரை. இது எடுக்கும் சிலருக்கு வயிற்று வலி ஏற்படும் வாய்ப்பு உள்ளது. தற்போதைய நவீன மருத்துவ வழிகாட்டுதல்படி, ரத்தக்குழாய் நோய்கள் இல்லாத சர்க்கரை நோயாளிகள் ஆஸ்பிரின் மாத்திரை எடுக்க வேண்டிய அவசியமில்லை. உங்கள் டாக்டரிடம் சென்று, எக்கோ, டிரெட் மில் பரிசோதனைகளை செய்து, அதன் முடிவு நார்மலாக இருந்தால், ஆஸ்பிரின் மாத்திரையை தாராளமாக நிறுத்தலாம். உங்களுக்கு ஸ்டேட்டின் வகை மாத்திரைகளும் அவசியம் தேவைப்படும்.
எனது 9 வயது மகளுக்கு எக்கோ பரிசோதனை செய்ததில், 'P.D.A.,'என்ற வியாதி இருப்பதாக வந்துள்ளது. இது என்ன வியாதி?எஸ்.பூங்கோதை, மதுரை
பி.டி.ஏ., என்பது PATENT DUCTUS ARTERIOS க்கு என்பதின் சுருக்கம். இது இருதயத்தின் 2 பெரிய ரத்தநாளங்களின் நடுவில் உள்ள ஒரு ஓட்டையை குறிக்கும். இதற்கு தற்போது நவீன முறையில் அறுவை சிகிச்சை இன்றி, கதீட்டர் மூலம் இந்த ஓட்டையை சரிசெய்ய முடியும். இதற்கு இரண்டு நாட்கள் மட்டும் மருத்துவமனையில் தங்கியிருந்தால் போதுமானது. இதில் நெஞ்சில் எவ்வித தழும்பும் வராது. இச்சிகிச்சைக்கு 20 ஆயிரம் ரூபாய் வரை செலவாகலாம்.
டாக்டர் சி.விவேக்போஸ், மதுரை.