மனசே மனசே குழப்பம் என்ன! - படிப்பதற்காக, மூட்டை சுமக்கும் குழந்தைகள்!
பள்ளிக்குச் செல்லும், 8 வயது குழந்தை, 3 கிலோ எடையுள்ள புத்தகப் பையை, தினமும் சுமந்து செல்கிறது. வயது ஏற ஏற, துாக்கிச் செல்லும் புத்தகப் பையின் எடையும் அதிகரிக்கிறது. இப்படி சிறிய வயதில், தினமும் எடை சுமப்பதால், பல பாதிப்புகள் ஏற்படுகின்றன.குழந்தையின் எடையில், 10 சதவீதம் மட்டுமே, அவர்கள் சுமக்கும் பையின் எடை இருக்க வேண்டும். அதிகப்படியான எடையை முதுகில் சுமந்து, பஸ்சில் ஏறும் போது, பல விதங்களிலும் சிரமப்படுவர்; சமயங்களில் எடை தாங்காமல், தவறி விழவும் வாய்ப்புகள் அதிகம். கழுத்தில் இறுக்கம், தோள்பட்டை, முதுகுத் தண்டு, கீழ் முதுகில் வலி வரலாம்; நீண்ட நாட்களாக இருக்கும் இது போன்ற வலியால், கூனல் முதுகு ஏற்படலாம். எலும்புகள் வலுவிழக்கலாம்; நுரையீரலை அழுத்துவதால், சுவாசிக்க சிரமம் ஏற்படலாம். இவை பொதுவான உடல் பிரச்னை என நினைத்து, குழந்தையை டாக்டரிடம் அழைத்து வரும்போது, புத்தக மூட்டையால் தான் வந்த பிரச்னை என்று தெரியும். வீட்டுப் பாடங்கள் செய்ய தேவையான புத்தகங்கள் தவிர, மற்றவற்றை பள்ளியிலேயே வைத்துச் செல்ல வசதி, 'இ - புக்ஸ்' அதிகம் பயன்படுத்தப் பழக்குவது போன்றவற்றை பள்ளிகள் செய்யலாம்.வாரத்தில், ஒரு நாள் மட்டுமாவது, குழந்தைகளின் விளையாட்டுத் திறனை மேம்படுத்த வேண்டும் என்பதற்காக, சனிக்கிழமைகளில் புத்தகங்கள் எதுவும் இல்லாமல், குழந்தைகள் பள்ளிக்கு வர வேண்டும் என்ற புதிய விதியை, ஆந்திர முதல்வர், ஜெகன் மோகன் ரெட்டி அமல்படுத்தி இருக்கிறார்.தமிழக அரசும் இதை செயல்படுத்தலாமே...!டாக்டர் பி.சேகர், குழந்தைகள் நல மருத்துவர்,சென்னை. 94440 03896