உள்ளூர் செய்திகள்

மனநலம் - மனமே ரிலாக்ஸ்!

கடந்த வாரத்தில், சுவீடனில், 18 வயதுடைய, 15 லட்சம் இளம் வயதினருக்கு, மருத்துவ ஆய்வு செய்யப்பட்டது. சொல்லிக் கொள்ளும்படியாக, வேறு எந்த உடல் பிரச்னைகளும் இவர்களிடம் இல்லை. ஆனாலும், இவர்களில், 40 சதவீதம் பேருக்கு, அடுத்த சில ஆண்டுகளில், உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான, ஆரம்ப கட்ட அறிகுறிகளும் இருப்பது தெரிய வந்துள்ளது. காரணம், 'ஸ்ட்ரெஸ்' எனப்படும் மன அழுத்தம்.இன்னொரு முக்கியமான மாற்றத்தையும், இளம் வயதினரிடம் பார்க்க முடிகிறது. 20 ஆண்டுகளுக்கு முன், 50 வயதிற்கு மேற்பட்டோருக்கு தான் சர்க்கரை நோய் வரும்; தற்போது, இளைஞர்களை அதிகம் பாதிக்கிறது. இதில் கவனிக்க வேண்டிய விஷயம், சர்க்கரை நோய் வருவதற்கான காரணம், போதுமான உடல் உழைப்பு இல்லாதது, துரித உணவு சாப்பிடுவது, அதிக உடல் பருமன், மரபியல் காரணிகள் போன்ற எந்த காரணங்களும் இல்லாமலேயே, சர்க்கரை நோய் வருகிறது. வேறு என்ன காரணம் என்று பார்த்தால், இவர்களில் பெரும்பாலானோருக்கு மன அழுத்தம் உள்ளது. நம் உடலில், இரண்டு நரம்பு மண்டலங்கள் உள்ளன. ஒன்று, 'ஆட்டோமேடிக்' நரம்பு மண்டலம்; இது தன்னிச்சையாக செயல்படும். அதாவது, உணவு சாப்பிட்டவுடன் அமிலம், வாயு சுரப்பது போன்ற காரியங்கள், இதனால் தான் நடக்கின்றன.மற்றொன்று, 'பேரா சிம்பதடிக்' நரம்பு மண்டலம். முதல் வகை நம்முடைய இதயத் துடிப்பு, சுவாசம் போன்றவற்றை கட்டுப்படுத்தும். 'சிம்பதெடிக்' என்பது, ஆபத்தான நேரங்களில், அதிலிருந்து தப்புவதற்கு தேவையான கூடுதல் சக்திக்காக, 'அட்ரினல்' போன்றவற்றை சுரக்க உதவும். ஏதோ ஒரு பிரச்னை வருகிறது. என்ன செய்வோம், ஒன்று அதை எதிர்த்து போராடுவோம், அல்லது, அந்த சூழலில் இருந்தே விலகிப் போய் விடுவோம். இதை பைட் அல்லது பிளைட் என்று சொல்லுவோம்.இன்றைய சூழல் எப்படி இருக்கிறது? அலுவலகத்திற்கு செல்கிறோம். மேலதிகாரி திட்டுகிறார்; 'ஸ்ட்ரெஸ்' ஆகிறது. எதிர்த்துப் பேசவும் முடியாது; வேலை வேண்டாம் என்று உதறி, வெளியில் வரவும் முடியாது. அதுபோல வீட்டிலும் மாமியாருடன் மனஸ்தாபம். அவரை எதிர்த்து எதுவும் செய்ய முடியாது. இந்த வாழ்க்கையே வேண்டாம் என்று ஓடவும் முடியாது. தினம் தினம் இப்படி எத்தனையோ அனுபவங்கள் வரும்போதெல்லாம், அட்ரினலின் அதிகம் சுரக்கிறது. மன அழுத்தம் வருகிறது. ஆனால், வடிகால் மட்டும் இல்லை.தற்போதைய இளம் தலைமுறையினருக்கு, இன்னொரு சவால் உள்ளது. அதாவது, எந்த புதிய விஷயத்தை கற்றுக் கொள்ளும்போதும், எப்படி செய்யப் போகிறோம் என்ற மன அழுத்தம் வருவது இயல்பானது. ஒரு குறிப்பிட்ட நாள் அல்லது நேரத்திற்குள், அந்த விஷயத்தைக் கற்றுக் கொண்டால், தானாகவே மன அழுத்தம் போய்விடும். 500 ஆண்டுகளில் நடந்த மாற்றங்கள், கடந்த, 50 ஆண்டுகளில் நடந்திருக்கின்றன. அதனால், தினமும் புதிது புதிதாக கற்றுக் கொண்டே இருக்க வேண்டியுள்ளது. ஒரு விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கும், இன்னொரு விஷயத்தைக் கற்றுக் கொள்வதற்கும் இடையில் இடைவெளியே இல்லை. அதனால் ஏற்படும் மன அழுத்தமும் குறையாமல் அப்படியே இருக்கிறது.இதன் தொடர்ச்சியாக, 18 வயதிற்குள் என்னவெல்லாம் கற்றுக் கொள்ள முடியுமோ, பொருளாதார ரீதியாக வெற்றி பெறுவதற்கான தகுதியை வளர்த்துக் கொள்ள வேண்டும். கார்ப்பரேட் நிறுவனத்தில் வேலைக்கு சேர வேண்டும். அங்கே ஒவ்வொரு நாளும் தங்களை நிரூபிக்க போட்டி போட வேண்டும். இப்படி இடைவெளியே இல்லாமல் வேக வேகமாக ஓடுவதால், ஏற்படும் மன அழுத்தம் காரணமாக, உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை நோய் போன்றவை எவ்வளவு வேகமாக வர முடியுமோ அவ்வளவு வேகமாக வந்துவிட்டது.டாக்டர் லட்சுமி விஜயகுமார்மனநல சிறப்பு மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !