டாக்டரைக் கேளுங்கள்
மணிமேகலை, மதுரை: என் தாய்க்கு (50 வயது) உடலில் நீர்சத்துக்குறைவாக உள்ளது என்று டாக்டர்கள் கூறுகின்றனர். இதனால் ஆபத்தா, தவிர்க்க என்ன வழி?அவரவர் தேவைக்கு ஏற்பத் தான் தண்ணீர் குடிக்க வேண்டும். இடத்தின் தட்பவெப்ப சூழ்நிலை, செய்யும் வேலை, உடல் நோய்கள், உடல் எடை போன்றவற்றால் ஒவ்வொருவரும் குடிக்க வேண்டிய தண்ணீரின் அளவு மாறுபடும்.தேவைக்கு ஏற்றவாறு தண்ணீர் குடிக்காதவர்களுக்குத் தான் தினமும் எட்டு டம்ளர் தண்ணீர் கண்டிப்பாக அருந்த வேண்டும் என்று சொல்லப்படுகிறது.தண்ணீர் தேவை என்பது அனிச்சையாக எழும் தாக உணர்வு தான். மூளையில் இதற்கென பிரத்யேக மையம் செயல்படுகிறது. நமது உடலில் உள்ள நீருக்கும் உப்புக்கும் இடையே சமநிலையை தக்கவைப்பது தான் இதன் வேலை. உடலில் நீர் குறையும் போது உப்பின் அளவு கூடும். அப்போது தாக மையம் உந்தப்பட்டு நீர் அருந்தத் துாண்டப்படுவோம். உடலில் நீர் கூடும் போது சிறுநீரகங்களுக்கு கட்டளை சென்று தேவைக்கு மிகுதியாக உள்ள நீர் வெளியேற்றப்படும்.எனவே தாகத்துக்கு ஏற்றவாறு நீர் அருந்துவது சரியானதும் கூட.சரியான அளவில் தண்ணீர் அருந்துகிறோமா என்பதை இரண்டு வழிகளில் அறியலாம். மூன்று முதல் நான்கு மணி நேரத்துக்கு ஒரு முறை சிறுநீர் கழிக்க வேண்டும். பகலில் விழித்திருக்கும் போது (காலை 6:00 மணி முதல் இரவு 10:00 மணி)ஐந்து முதல் ஆறு தடவை சிறுநீர் கழிப்பது நல்லது. இரவில் ஒரு முறை சிறுநீர் கழிக்க எழுவதும் நார்மல் தான்.ஆறு மணிநேரத்திற்கு மேல் சிறுநீர் கழிக்காமல் இருப்பது நல்லதல்ல.இரவு பல மணி நேரம் நீர் அருந்தாமல் காலை எழுந்ததும் கழிக்கும் சிறுநீர், அடர் மஞ்சள் நிறத்தில் இருந்தால் கவலைப்பட வேண்டாம். நல்ல நிலையில் சிறுநீரகங்கள் இயங்கும் ஒருவர் காலையில் ஒரே நேரத்தில் அரை லிட்டர் முதல் ஒரு லிட்டர் தண்ணீரை குடிக்கலாம். இதனால் நன்மையோ, தீமையோ இல்லை. தேவைக்கு அதிகமாக நீர் சேர்ந்தால் அதை சிறுநீரகம் தானாக வெளியேற்றி விடும்.- டாக்டர் அ.ப. பரூக் அப்துல்லா, பொது மருத்துவ நிபுணர், மதுரை.மயில்வாகனன், சின்னாளபட்டி: சளி பாதிப்பு இருக்கும் போது இரவு நேரங்களில் ஏற்படும் மூச்சுத்திணறலுக்கு உணவு வகைகள் காரணமாக இருக்குமா?இப்பிரச்னைக்கு உணவு மட்டுமே காரணமாக கூற முடியாது. ஒவ்வாமை, உடலின் இயற்கையான மாற்றங்களும் முக்கிய காரணங்கள். மூச்சுத்திணறல் ஏற்பட்டால் பதற்றமின்றி முதலுதவிகளை பின்பற்ற வேண்டும். படுத்திருப்பதை தவிர்த்து உடனடியாக நேராக நிமிர்த்தி அமர வைக்க வேண்டும்.நாற்காலியில் அமர்த்தி சற்று முன்னோக்கி உடலை சாய்ப்பதன் மூலம் நுரையீரலுக்குள் காற்று எளிதாக செல்ல உதவும். துாங்கும்போது சற்று உயரமான தலையணைகள் பயன்படுத்தலாம்.சூடான நீரின் ஆவியை சுவாசிக்க செய்வது மூச்சுக்குழாயில் சளியை தளர்த்தி காற்று பாதையை திறக்கும். ஒரு வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு வெதுவெதுப்பான நீரில் அரை ஸ்பூன் தேன் கலந்து கொடுக்கலாம். பெரியவர்களாக இருந்தால் பதற்றமின்றி மூக்கு வழியே மூச்சை உள்ளே இழுத்து விசில் ஊதுவது போன்று உதடுகளை குவித்து வாய் வழியாக மெதுவாக வெளியேற்ற வேண்டும். இது சுவாசத்தை சீராக்க உதவும். ஆஸ்துமா ஒவ்வாமை பிரச்னை உள்ளவர்களுக்கு ஏற்கனவே டாக்டர் பரிந்துரைத்த இன்ஹேலர், நெபுலைசர் பயன்படுத்தலாம்.உதடுகள், நகங்கள், முகம் நீல நிறமாக மாறுதல், மூச்சு விடும் போது மார்பு விலா எலும்புகள் உள்நோக்கி இழுக்கப்படுதல், பேசவோ அழவோ முடியாத அளவிற்கோ, இன்ஹேலர் பயன்படுத்தியும் 15 நிமிடங்களுக்கு மேலாக சுவாசம் சீராகாத சூழலில் தாமதமின்றி மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல வேண்டியது அவசியம்.- டாக்டர் காமராஜ், பேராசிரியர், திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லுாரி.ஆர்.கோமதி, போடி: எனது கணவருக்கு 55 வயது ஆகிறது. சிறுநீரில் ரத்தக்கசிவு வருகிறது. இதனை குணப்படுத்த என்ன செய்ய வேண்டும்?சிறுநீரக கல், சிறுநீரில் கிருமி தொற்று, சிறுநீர் பாதையில் அடைப்பு, சிறுநீர் புற்று நோய், புராஸ்டேட் சுரப்பி வீக்கம் போன்ற காரணங்களால் சிறுநீரில் ரத்தம் வரலாம். முதலில் சிறுநீர் பரிசோதனை, ரத்த பரிசோதனை, ஸ்கேன் செய்து பார்க்க வேண்டும். சிறுநீர் கல்லாக இருந்தால் எண்டோஸ் கோபி அறுவை சிகிச்சை, மருந்து மூலம் சரி செய்யலாம். சிறுநீர் பாதை புற்றுநோயாக இருந்தால் நோயின் தன்மையை பொறுத்து எண்டோஸ்கோபி அறுவை சிகிச்சை, நுண் துளை அறுவை சிகிச்சை, ரோபாட்டிக் அறுவை சிகிச்சை, கதிரியக்க சிகிச்சை மற்றும் கீமோதெரபி சிகிச்சை மூலம் குணப் படுத்தலாம். நீர்கடுப்பு என சாதாரணமாக இருந்து விடக்கூடாது.சிறுநீரக கல் பாதிப்பு உள்ளவர்கள் கட்டி தயிர், பாலாடை, தக்காளி, வெள்ளரிக் காய் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். சிறுநீரக நோய்வராமல் தடுக்க தினமும் 3 லிட்டர் தண்ணீர் குடிக்க வேண்டும். இளநீர், பார்லி, அன்னாசிப்பழம், வாழைப்பழம், எலுமிச்சை, காரட், கொள்ளு பயறு எடுத்து கொள்ள வேண்டும். உப்பின் அளவை குறைத்தல் , உயர் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவை கட்டுக்குள் வைத்துக் கொள்ள வேண்டும்.- டாக்டர் பி.சண்முக அரவிந்த், சிறுநீரகம், பொது அறுவை சிகிச்சை, சிறப்பு மருத்துவர், போடி.கவிதா, ராமநாதபுரம்: எனது 5 வயது மகனுக்கு அடிக்கடி அஜீரணக் கோளாறு ஏற்படுகிறது. இரவில் வயிறு வலியால் நீண்ட நேரம் துாங்க முடியாமல் அவதியடைகிறான். இதற்கு நிரந்தர தீர்வு கூறவும்?குழந்தைகளுக்கு உணவை சரியான முறையில் வழங்கினால் அஜீரணக் கோளாறு ஏற்படாது. 3 வயதுக்கு மேல் குழந்தைகள் தானாக எடுத்து சாப்பிடத் துவங்கி விடுவர். அப்போது நார்சத்து உணவு எடுத்துக் கொள்வதை குறைத்துக் கொள்கின்றனர். பிஸ்கட், சாக்லெட் போன்றவற்றை அதிகம் உண்பதால் செரிமானத் தன்மை குறைந்து விடும். குறிப்பிட்ட வயதில் வயிற்றுப் பூச்சி நீக்கும் மாத்திரை வழங்க வேண்டும். அந்த மாத்திரை கொடுக்காமல் விடுவதாலும் அஜீரணக் கோளாறு ஏற்பட வாய்ப்பு உள்ளது.அஜீரணக் கோளாறால் வயிற்று வலி ஏற்பட்டால் ஓமம் கலந்த தண்ணீர் கொடுக்கலாம். தொடர்ச்சியாக ஏலக்காய் சூரணம் வழங்கினால் வாயு வெளியேறி பசி எடுக்க துவங்கும். பாக்கெட்களில் அடைக்கப்பட்ட தின்பண்டங்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும். அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். நீர்ச்சத்து அதிகம் உள்ள புடலங்காய், பூசணிக்காய் மற்றும் பழங்களை அதிகம் கொடுக்க வேண்டும்.- டாக்டர் மோகன கிருஷ்ணன், சித்த மருத்துவர், அரசு ஆரம்ப சுகாதார நிலையம், தேவிபட்டினம்.வெ.மாதவன், சிவகங்கை: ஒரு மாதத்திற்கு மேல் சளி தொந்தரவு. காச நோயா என்ற சந்தேகம்?உடலில் நகம் மற்றும் முடி தவிர அனைத்து உறுப்புகளையும் காசநோய் தாக்கக் கூடியது. காசநோய் நுரையீரலை தான் அதிகம் தாக்கும். இது ஒரு வகையான நிமோனியா. நாள்பட்ட இருமல், நாள்பட்ட காய்ச்சல், சளியில் ரத்தம், பசியின்மை, உடல் எடை குறைதல் காசநோயின் அறிகுறிகள். நெஞ்சு எக்ஸ்ரே, சி.டி.ஸ்கேன் மூலம் காசநோயின் தாக்கத்தை கண்டறியலாம். காசநோய் இருப்பதை உறுதி செய்துவிட்டால் அருகில் உள்ள நுரையீரல் நிபுணரை அணுகி அவரின் ஆலோசனை படி மருந்து மாத்திரைகளை எடுத்துக்கொள்ள வேண்டும். ஆரம்பத்தில் காசநோய் இருப்பதை கண்டறிந்து விட்டால் தினசரி மாத்திரை மற்றும் புரத சத்து நிறைந்த உணவுகளை சேர்த்துக்கொண்டாலே காசநோயை குணப்படுத்திவிடலாம்.- டாக்டர் கீர்த்தி பிரகாஷ், நுரையீரல் நிபுணர், அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனை, சிவகங்கை.குமரேசன், ராஜபாளையம்: எனக்கு கல்லீரல் வீக்க பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மது பழக்கம் இல்லை. புரியாத புதிராக உள்ளது. விளக்கம் தாருங்களேன்?கொழுப்பு கல்லீரல்(பேட்டி லிவர்) மது குடிப்பவர்களுக்கே வரும் என்ற தவறான நம்பிக்கை உள்ளது. இது புற்றுநோய் உள்ளிட்ட ஆபத்துகளுக்கு வழி வகுக்கும். புள்ளி விவரப்படி சைவ உணவு உண்போர், மது அருந்தாதவர்களிடமும் அதிகம் காணப்படுகிறது.கொழுப்பு உணவுகளிடம் நமக்கு உள்ள பயம் காரணமாக அரிசி, மைதா, வெள்ளை சர்க்கரை போன்ற கார்போஹைட்ரேட்டுகளை அதிகம் உண்பதால் எரிக்கப்படாமல் கல்லீரல் கொழுப்பாக மாற்றி ஒரு கட்டத்தில் நமக்கு எதிரியாகிறது. செயற்கை இனிப்புகள், பானங்கள், பேக்கரி, பீட்ஸா போன்ற உணவுகள் உடற்பயிற்சியின்றி அதிகமாகும் தொப்பை, கொழுப்பு கல்லீரலுக்கு வழி வகை செய்கிறது.உடல் எடையை சரியாக பேண வேண்டும். மாவுச்சத்து, துரித, பாக்கெட் உணவுகள் குறைத்து புரதச்சத்தை அதிகப்படுத்துவது, பருப்பு, முளைகட்டிய தானியங்கள், விட்டமின் இ கலந்த ஆன்ட்டி ஆக்ஸிடென்டுகள் நிறைந்த காய்கறிகள், பழங்கள் எடுத்துக்கொள்ள வேண்டும். ஒமேகா- 3 சத்துள்ள மீன் உணவுகளை சேர்ப்பதும் நல்லது.மது, புகை, மன அழுத்தம் தவிர்த்து நாள்தோறும் உடற்பயிற்சி, ஆண்டுக்கு ஒரு முறை முழு உடல் பரிசோதனை மூலம் இதை தவிர்க்கலாம்.- டாக்டர் கு.கணேசன், பொதுநல மருத்துவர், ராஜபாளையம்.