டாக்டரை கேளுங்கள்...
காயத்ரி, மதுரை: எனக்கு 30 வயது. 26வது வயதில் கர்ப்பமான போது ரத்தப் பரிசோதனையில் தைராய்டு குறைபாடு கண்டறியப்பட்டு தைராக்ஸின் மாத்திரை எடுத்து வருகின்றேன். தற்போது தைராய்டு லெவல் டி.எஸ்.எச்.0.25 - 5.0 நார்மல் என உள்ளது. தைராய்டு அளவு நார்மல் என்று இருந்தாலும் மாத்திரை தொடர்ந்து எடுக்க வேண்டுமா? தைராய்டு பரிசோதனை எவ்வளவு நாட்களுக்கு ஒருமுறை செய்ய வேண்டும்?தைராய்டு பரிசோதனையை வெறும் வயிற்றில் எடுப்பது நல்லது. தைராய்டு மாத்திரைகளை சாப்பிட்டு தைராய்டு அளவு கட்டுப்பாட்டில் இருப்பவர்களுக்கு 3 முதல் 6 மாதங்களுக்கு ஒருமுறை பரிசோதனை செய்ய வேண்டும். தைராய்டு பரிசோதனை செய்து 75 எம்.ஜி., 100, 150 எம்.ஜி., மாத்திரை சாப்பிடுபவர்களின் தைராய்டு அளவு, கட்டுப்பாட்டில் இருந்தாலும் மாத்திரைகளை தானாக நிறுத்தக்கூடாது. டாக்டர் ஆலோசனையின் பேரில் தான் மாத்திரைகளை நிறுத்த வேண்டும். ரத்தஅழுத்தம், சர்க்கரை நோய் மாத்திரைகளை சாப்பிட்டு அதை கட்டுக்குள் வைத்திருந்தாலும் மாத்திரைகளை நிறுத்தக்கூடாது. அதைப்போலவே தைராய்டு மாத்திரைகளையும் தொடர்ந்து உட்கொள்ள வேண்டும்.- டாக்டர் ஸ்ரீதர், அகச்சுரப்பியல் துறைத்தலைவர், மதுரை அரசு மருத்துவமனைதமிழரசி, பாச்சலுார்: சீதோஷ்ண மாற்றத்தால் ஏற்படும் தொண்டை வலிக்கு தீர்வு என்ன?தற்போது மழை, வெயில் என மாறுபட்ட சீதோஷ்ண நிலை நிலவுகிறது. குளிர்ச்சியான பானங்களை அருந்துவது, தண்ணீரை காய்ச்சாமல் குடிப்பது, ஒவ்வாமை பிரச்னையால் தொண்டை வலி ஏற்படலாம். தற்காலிக தொண்டை வலிக்கு காலை, மாலையில் வெது வெதுப்பான தண்ணீரில் உப்பை சேர்த்து வாய் கொப்பளிக்க வேண்டும். காய்கறி சூப், அசைவ உணவுகளை எடுத்துக்கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து இது கட்டுப்படுத்தப்படும். வலி தொடரும் பட்சத்தில் டாக்டரை அணுகி பரிந்துரைக்கும் மருந்துகளை எடுத்துக்கொள்வது நல்லது.- பொன்ரதி, தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை கொடைக்கானல்பால்பாண்டி, தேனி: வயதாகும் போது மூட்டு வலி, மூட்டு வீக்கம் ஏற்படுகிறது. இந்த வலியில் இருந்து விடுபட மூட்டு மாற்று அறுவை சிகிச்சை அவசியமா?பொதுவாக 60 வயது கடந்தவர்களுக்கு மூட்டு வலி, வீக்கம் ஏற்படும். அதற்கு எலும்பு சத்துக்குறைபாடு காரணமாகும். 60 வயதுக்கும் குறைவான ஆண்கள், தொடர்ந்து மது குடிப்பது, டாக்டர் பரிந்துரை செய்யாத மருந்துகளை பயன்படுத்துவதால் பந்து கிண்ண மூட்டு அழுகிவிடுகிறது. வலி நிவாரணி மாத்திரைகளுடன் ஸ்டீராய்டு மாத்திரைகள் சேர்த்து தான் மருந்துகடைகளில் கொடுப்பார்கள்.அதை அதிகம் சாப்பிடுவதால் கால் வீக்கம் அடைந்து ரத்த ஓட்டம் பாதிக்கும். இவர்களுக்கு 'கோர் டி கம்பிரஷன்' சிகிச்சை அளிக்கப்பட்டு ரத்த ஓட்டம் சீர் செய்யப்படும். இதில் குணமடையாதவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்து கொள்ளலாம். பின்னர் அவர்களுக்கு 15 ஆண்டுகளுக்கு ஒருமுறை மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும். ஒருமுறை வயதானவர்கள் மூட்டு மாற்று அறுவை சிகிச்சை செய்தால் 20 ஆண்டுகள் வரை பலன்கொடுக்கும். சத்தான உணவுகள் சாப்பிட்டால் மூட்டு பிரச்னைகள் குணமாகும்.-டாக்டர் பிரேம்குமார், எலும்பியல் துறை தலைவர், அரசு மருத்துவ கல்லுாரி மருத்துவமனை, தேனிபாலமுருகன், சாத்துார்: எனது மகனுக்கு 16 வயது ஆகிறது. அலைபேசியை பயன்படுத்தும் போது ஹெட்போனையும் பயன்படுத்துகிறார். தற்போது அவர் படிப்பில் போதிய கவனம் செலுத்தவில்லை. பள்ளியில் ஆசிரியர் ஒரு முறைக்கு இருமுறை அழைத்தால் மட்டுமே திரும்பி பார்ப்பதாகவும், கற்கும் திறன் குறைந்து விட்டதாகவும் ஆசிரியர்கள் கூறுகிறார்கள். ஹியர் போன் பயன் படுத்துவதால் காதில் பாதிப்பு ஏற்படுமா? சிகிச்சை முறை என்ன?அலைபேசியை பயன்படுத்தும் பலரும் தற்போது ஹெட் போன் பயன்படுத்துகின்றனர். தற்போது நாய்ஸ் கேன்ஸ்லேஷன் ஹெட்போன்கள் அதிகளவில் வருகின்றன. இவை காதில் பிற சத்தங்களை நுழைய விடாமல் 60 முதல் 80 டிசிபில் ஒலியை காதுக்குள் பாய்ச்சுகிறது. காதில் உள்ள ஜவ்வு அதிர்ந்து குருத்து எலும்புகள் வழியாக நரம்புகளுக்கு சமிக்ஞை அனுப்பி அதை மூளை உணர்ந்து நமக்கு ஒலியாக கேட்கிறது.தொடர்ந்து மூன்று ஆண்டுகள் ஹெட்போன் பயன்படுத்தினால் காதின் ஜவ்வு குருத்து எலும்புகள், நரம்புகள் பாதிக்கப்படும். ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து ஹெட் போன் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. காதில் கேட்கும் திறன் குறைவதால் பள்ளிகளில் ஆசிரியர்கள் பாடம் நடத்தும் போது மாணவர்களுக்கு கேட்காது. இதனால் அவர்களது கற்றல் திறன் பாதிக்கப்படும்.காது, மூக்கு, தொண்டை நிபுணரிடம் உடனடியாக சென்று காதின் கேட்கும் திறனை பரிசோதனை செய்து கொள்வது நல்லது. காதின் நரம்பு மண்டலம் பாதிக்கப்பட்டால் குணப்படுத்த முடியாது நிரந்தரமான ஊனம் ஏற்படும். காது கேட்கும் கருவியை பயன்படுத்த வேண்டிய நிலை ஏற்படும். சிறியதாக பாதிப்பு இருக்கும் போதே கண்டறிந்து ஹெட் போன் பயன்படுத்துவதை தவிர்த்தால் காலப்போக்கில் தானாக சரியாகவும் வாய்ப்பு உள்ளது.- டாக்டர் முனி சாயி கேசவன், தலைமை மருத்துவர், அரசு மருத்துவமனை, சாத்துார்