உள்ளூர் செய்திகள்

உறவு மேலாண்மை - மயக்கம் தற்கொலையைத் தடுக்கும்!

தொடர்ந்து நான்கு மாதங்களாக, அரவிந்த்தை, அவன் பெற்றோர் என்னிடம் அழைத்து வந்தனர். ஆனால், அவனுடைய பிரச்னை என்ன என்பதை துல்லியமாகக் கண்டுபிடிக்க முடியவில்லை. இது கடந்த ஆண்டு நடந்தது.10வது பொதுத் தேர்விற்கு இன்னும் 3 மாதங்களே உள்ள நிலையில், திடீரென வகுப்பில் ஒருநாள் அரவிந்த் மயங்கி விழுந்தான். பெற்றோருக்குத் தகவல் சொல்ல, அவர்கள் அலறி அடித்து வந்து, அவனை டாக்டரிடம் அழைத்துச் சென்றனர். மயக்கம் தெளிந்தவன், 'தலை பயங்கரமாக வலிக்கிறது' என்று சொல்ல, அதற்கான அனைத்துப் பரிசோதனைகளையும் செய்தபின், எந்தப் பிரச்னையும் இல்லை என்பது தெளிவானது. அடுத்த ஒரு வாரத்தில், வகுப்பில் இன்னொரு முறை மயங்கி விழுந்தான். பழையபடியே எல்லாம் நடந்தது. இந்த முறை வயிற்று வலி என்றதைத் தொடர்ந்து, எண்டோஸ்கோபி, ஸ்கேன் என்று செய்து பார்த்ததில், அதுவும் 'நார்மல்.'மூன்றாவது முறை மயங்கி விழுந்தபோது, வேறு ஏதோ காரணம் சொல்ல, அதற்கும் பரிசோதனை செய்து எல்லாம் சரியாக இருப்பதாக டாக்டர் சொல்ல, ஒரு சந்தேகத்தின் பேரில் வலிப்பாக இருக்கலாம் என்று அதற்கும் மருந்து கொடுத்துப் பார்த்தனர். சரியாகவில்லை. இது தொடர்கதையான நிலையில், 'இவனுக்கு உடம்புக்கு ஒன்றும் இல்லை. தேர்வு எழுத பயந்து, இப்படி செய்கிறான், படிக்கப் பிடிக்கவில்லை; ஏதோ கெட்ட பழக்கம் அவனிடம் இருக்கிறது' என்று ஆளாளுக்கு ஒரு காரணத்தைக் கூறினர். என்னதான் இவனுக்குப் பிரச்னை என்று குழம்பிய நிலையில் தான், என்னிடம் அழைத்து வந்தனர். தொடர்ந்து பலமுறை பெற்றோருடன் வந்தவனுடன் எல்லாவிதங்களிலும் பேசிப் பார்த்தேன். அவன் மனதில் ஏதோ இருக்கிறது என்பது மட்டும் தெரிந்ததே தவிர, என்ன என்று கண்டுபிடிக்க முடியவில்லை. அதன் பிறகு மாமாவுடன் வந்தான், தானாகவே பேச ஆரம்பித்தான்.'டாக்டர், என் அம்மா ரொம்ப நல்லவங்க. ஆனால், அப்பா எப்ப பார்த்தாலும், அம்மாவைத் திட்டுகிறார். கெட்ட வார்த்தை சொல்கிறார். ரெண்டு பேருக்கும் சண்டை நடக்கும் போதெல்லாம், அம்மா நான் சாகப் போறேன்னு சொல்றாங்க. எனக்கு பயமா இருக்கு. நான் வீட்ல இருந்தா, என் அம்மா தற்கொலை பண்ணிக்க மாட்டாங்க. என் உடம்புல ஏதோ பெரிய நோய்னு சொன்னா, அப்பா கவனம் அதுலதான் இருக்கும். அம்மாவைத் திட்ட மாட்டார். அதான் நான் அடிக்கடி மயக்கம் போட்டு வீட்டுக்கு வந்துவிடுவேன்' என்றான்.'இத்தனை நாளா இதை ஏன் நீ சொல்லவில்லை' என்று கேட்டதற்கு, 'அம்மா, அப்பா முன்னாடி சொன்னா, 'நீ பிள்ளையைத் தூண்டிவிட்டு நடிக்கச் சொல்றியான்னு அப்பா அதற்கும் அம்மாவைத் திட்டுவார்' என்றான்.நாம் நேரில் பார்க்கும்போது, எந்த குழந்தையின் மனதில் என்ன இருக்கிறது என்பதை அவ்வளவு சுலபமாகக் கண்டுபிடிக்க முடியாது. பேசிப் பார்த்தால்தான், அவர்கள் மனதை பாதிக்கும் விஷயங்கள் எவை என்பது புரியும்.டாக்டர் ஜெயந்தினி மனநல சிறப்பு மருத்துவர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !