உள்ளூர் செய்திகள்

காஜலுடன் தூங்கினால் கண்களுக்கு ஆபத்து!

தங்கள் உடல் நலத்தில் அக்கறையோடு இருந்தால் மட்டுமே, குடும்பம் உட்பட அனைத்து பொறுப்புகளையும், பெண்கள் சிறப்பாக செய்ய முடியும். கண்களின் பராமரிப்பு மிக முக்கியம். தேவைக்கு ஏற்ப, குறிப்பிட்ட இடைவெளியில், கண் பரிசோதனை செய்து கொள்வது அவசியம்.பார்வை கோளாறு இருந்தால், எந்த அளவு உள்ளது என்பதை தெரிந்து, அதற்கு ஏற்ப கண்ணாடியோ, 'கான்டாக்ட் லென்சோ' அணியலாம். சில பெண்களுக்கு, கண்ணாடி அணிவதால், தங்களின் முக அழகு கெடுகிறது என்று தோன்றும். அப்படி ஒரு மனநிலை இருந்தால், 'லேசர்' சிகிச்சை செய்து கொள்ளலாம்; கண்ணாடி தேவைப்படாது.மேக்-அப்கண்களுக்கு, காஜல் - மை தீட்டுவது, மஸ்காரா போடுவது, ஐ லைனர் வரைவது, கண் இமைகளின் மேல் விதவிதமான மேக் - அப் செய்து கொள்வது, பல பெண்களின் தினசரி வாடிக்கை. இதில், குறிப்பாக, கண் மை போடுவது, 80 சதவீதம் பெண்களின் தினசரி வழக்கமாக உள்ளது. கண்களை என்ன மாதிரி அழகுபடுத்துகிறோம் என்பதை விட முக்கியம், தரமான, நம்பகமான கண் மை, ஐ - லைனர் உபயோகிக்கிறோமா என்பதுதான்.எவ்வளவு உயர்வான பொருட்களை வைத்து, கண்களை அழகுபடுத்தியிருந்தாலும், இரவில் துாங்கும் முன், சுத்தமாக கழுவி, துடைத்துவிட வேண்டும். மேக் - அப் கண்களோடு துாங்கினால், கண்களில் ஒவ்வாமையை ஏற்படுத்துவதோடு, கண் இமைகளின் மேல், சிறிய கொப்புளங்கள் வர வாய்ப்பு அதிகம். கான்டாக்ட் லென்ஸ் அணியும் பெண்கள், மேக் - அப் போடுவதற்கு முன், கைகளை சுத்தமாக கழுவி, லென்சையும் அதற்கான லோஷனில் சுத்தம் செய்த பின் அணிய வேண்டும்.

கண் வறட்சி

அதேபோல, மேக் - அப்பை கலைப்பதற்கு முன், கைகளை சுத்தம் செய்து விட்டு, லென்சை முதலில் அகற்றிவிட வேண்டும்.கண்களில் வறட்சி ஏற்படுவது, 'மெனோபாஸ்' எனப்படும் மாதவிடாய் நின்ற பின், பெண்களுக்கு வரும் பொதுவான பிரச்னை. அதிலும், இந்த வயதில், அதிக நேரம் மின் சாதனங்களை பார்ப்பது, கண்களின் வறட்சியை மேலும் அதிகப்படுத்தும். இதற்கு, ஹார்மோன் சுரப்பில் ஏற்படும் சமச்சீரற்ற தன்மை முக்கிய காரணம்.மேலும், அலுவலகம் செல்லும் பெண்கள், கம்ப்யூட்டர், லேப் - டாப்பில் அதிக நேரம் வேலை செய்தால், வீட்டில் இருக்கும் பெண்கள், டிவி, மொபைல் போன் என்று, பெரும்பாலான நேரங்களை மின் சாதனப் பொருட்களை பார்ப்பதிலேயே கழிக்கின்றனர். இதனால், கண்களை இமைக்க மறந்து விடுகின்றனர். ஒரு நிமிடத்திற்கு, 20 முறை, கண்டிப்பாக கண்களை இமைக்க வேண்டும். அப்போது தான், சுரப்பிகள் வேலை செய்து, போதுமான அளவு நீர் சுரந்து, வறட்சி ஏற்படாமல் இருக்கும்.'ஆட்டோ இம்யூன் டிஸ்சாடர்' எனப்படும், நம்முடைய எதிர்ப் பணுக்ளை உடலில் உள்ள செல்களே அழிக்கும் நிலை, ஆண்களை விடவும் பெண்களை அதிகம் பாதிக்கிறது. எதிர்ப்பணுக்களின் வீரியத்தைக் குறைக்க, 'இம்யூனோ சப்பிரசன்ட்' மாத்திரைகள் தரப்படும். இந்த மாத்திரைகள், கண்புரை, விழித்திரையில் உள்ள நரம்புகளை பாதிப்பது போன்ற பக்க விளைவுகளைஏற்படுத்தும்.இந்த மருந்துகளை பயன்படுத்தாமலும் இருக்க முடியாது. ஆட்டோ இம்யூன் டிசாடர் இருந்து, மாத்திரைகள் சாப்பிட்டால், டாக்டரின் ஆலோசனைக்கு ஏற்ப, பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். விழித்திரையில் அல்லது கண்புரை ஏற்பட்டால், அதுவரை சாப்பிட்ட மருந்துகளை நிறுத்தி விட்டு, வேறு மாற்று மருந்து தருவர். எனவே, பரிசோதனை செய்வது அவசியம்.

கர்ப்பிணி கண்கள்

கர்ப்பிணிகளுக்கு, கர்ப்ப காலத்தில், உயர் ரத்த அழுத்தம் இருந்தால், 'ரெடினா' எனப்படும் விழித்திரையில் பாதிப்பை ஏற்படுத்தி, பார்வை இழப்பையும் தரலாம். உயர் ரத்த அழுத்தம் இருக்கும் கர்ப்பிணிகள், கர்ப்ப காலத்தில், மருத்துவரின் ஆலோசனைப் படி, குறிப்பிட்ட இடைவெளியில், ரத்த அழுத்தத்தை பரிசோதனை செய்ய வேண்டும்.ஆரோக்கியமான கர்ப்பிணிக்கும், 'கார்னியா' எனப்படும், கருவிழியின் அடர்த்தி, கர்ப்பத்திற்கு முன் இருந்ததை விடவும், ஹார்மோன் மாறுபாடால், கர்ப்ப காலத்தில் மாறுபடலாம். எனவே, கண்ணாடிக்கு பதிலாக, லேசர் சிகிச்சை செய்வதை, கர்ப்ப காலத்தில் கண்டிப்பாக தவிர்க்க வேண்டும். குழந்தை பெற்ற பின், ஆறு மாதங்கள் கழித்து, லேசர் சிகிச்சை செய்து கொள்ளலாம்.

விழித்திரை

கர்ப்ப காலத்தில் சர்க்கரை கோளாறு இருக்கும் பெண்கள், அடிக்கடி விழித்திரையை பரிசோதிக்க வேண்டியது முக்கியம். அதுபோல, 'பாலிசிஸ்டிக் ஓவேரியன் சின்ட்ரோம்' எனப்படும் கருக்குழாயில், நீர்க்கட்டி இருந்தால், பொதுவாகவே அதிக உடல் பருமனுடன் இருப்பர். இவர்களுக்கு, மூளையில் அழுத்தம் ஏற்படுவதால், கர்ப்ப காலத்தில், பார்வை நரம்புகளில் அழுத்தம் ஏற்படும் வாய்ப்புகள் அதிகம். இதனால், பார்வை நரம்புகளில் வீக்கம் வரலாம். இதை கவனிக்காமல், அதிக நாட்கள், வீக்கத்துடனேயே இருப்பதால், பார்வை இழப்பு ஏற்படும் அபாயம் அதிகம்.இவை தவிர, பொதுவாக ஏற்படும் கண்புரை, கண் அழுத்தம், வயோதிகம் காரணமாக, தசைகளில் ஏற்படும் மாற்றம் போன்றவை, ஆண்களை எந்த அளவு பாதிக்கிறதோ, அதே அளவு பெண்களையும் பாதிக்கும்.டாக்டர் எஸ்.சவுந்தரிதலைவர், மருத்துவ சேவை பிரிவு, அகர்வால் கண் மருத்துவமனை, சென்னை 94453 91190


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !