"பல்வரிசைக்கும் குறட்டைக்கும் என்ன சம்பந்தம்?
என் கணவரின் குறட்டை தொல்லை அதிகமாக உள்ளது. அவரது பல்வரிசை சீராக இல்லை. இரண்டுக்கும் ஏதேனும் சம்பந்தம் உள்ளதா?குறட்டை என்பது தூங்கும் போது, சுவாசிக்கும் காற்று, சுவாசக் குழாயில் உள்ள திசுக்களில் பட்டு, அவை அதிரும் போது ஏற்படும் சத்தம். இதில் பல்வரிசை, வாய், கன்னம், தாடை எலும்பு இவற்றின் பங்கு உண்டு. குறட்டை விடுவது சில சமயங்களில் தூக்கத்தில் சுவாசம் தடைபடுவதற்கான அறிகுறியாகும். இதை சரியாக பரிசோதனை செய்து, பின்னாளில் வேறு எந்த பாதிப்பும் வராமல் காக்க வேண்டும். குறட்டையை குறைக்க பல், முகசீரமைப்பு மருத்துவரின் சிகிச்சை அவசியம். முதலில் வாய், தாடை, பற்கள், நாக்கு ஆகியவற்றை முழுமையாக பரிசோதனை செய்ய வேண்டும்.பின் பல்சீரமைப்பு சாதனம் போல உங்கள் வாய் அளவிற்கு ஏற்ப குறட்டையை நிறுத்துவதற்கு பிரத்யோகமாக ஒரு சாதனத்தை செய்ய வேண்டும். இதனை கழட்டி மாட்டுவது போலவும் பொருத்தலாம். நிலையாக பற்களில் ஒட்டிக் கொள்வது போலவும் பொருத்தலாம். இதை உறங்கும் நேரத்தில் அணிந்து கொள்ள வேண்டும். இது கீழ்த்தாடையையும், நாக்கையும் முன்னால் கொண்டு வந்து சுவாசக் குழாயில் எந்த தடங்கலும் இல்லாமல் செய்து விடும். இச்சாதனத்தை அணிந்து கொள்வதன் மூலம் 95 சதவீதம் குறட்டை தொல்லை குறைந்து விடும் என, ஆய்வுகள் கூறுகின்றன. இதை அணிவதால் தூக்கமும் எந்த வகையிலும் தடைபடாது, நிம்மதியாக தூங்கலாம்.இருபத்தேழு வயதான எனக்கு ஈறுகள் இறங்கியுள்ளன. பல பற்கள் ஆடுகின்றன. சில விழுந்து விட்டன. இதனை எவ்வாறு சரிசெய்யலாம்?உங்களுக்கு வந்துள்ளது தாடை எலும்புவரை பாதிக்கும் ஒரு வகை ஈறுநோயாகும். ஈறுகள் இறங்கி பல் ஆடுவது, பொதுவாக வயதானவர்களுக்கு வரும் பிரச்னை. இவ்வகை ஈறுநோய் 20 - 40 வயதில் உள்ளவர்களை அதிகம் தாக்கும். இந்நோய்க்கு தனி ஒரு காரணம் இருக்காது. உடலில் சர்க்கரை நோய், ரத்தக்கொதிப்பு போன்ற எந்த நோயும் இருக்காது. ஆனால் ஈறுகள் மட்டும் பாதிக்கப்பட்டிருக்கும்.இது பரம்பரை நோயாக வர வாய்ப்புள்ளது என பல் மருத்துவ ஆய்வு தெரிவிக்கிறது. இதற்கு உடனடி சிகிச்சை அளிக்க வேண்டும். முதலில் வாயில் உள்ள கிருமிகளை, இந்நோய்க்குரியவைதானா என உறுதிப்படுத்த வேண்டும். அடுத்து இந்நோய்க்கு காரணமான கிருமிகளை முற்றிலும் நீக்க வேண்டும். பின், பற்களை வேர்வரை சுத்தம் செய்ய வேண்டும். ஈறுகளுக்குள் சீழ் இருந்தால், சிறிய அறுவை சிகிச்சை மூலம் அகற்றிவிட வேண்டும். ஈறுகள் கீழே இறங்கி உள்ள இடங்களில் பலப்படுத்த வேண்டும். காப்பாற்ற முடியாத பற்களை அகற்றிவிட்டு உடனடியாக நிலையான செயற்கை பற்கள் கட்ட வேண்டும். நோய் முற்றிலும் குணமாகும் வரை கண்டிப்பாக வாரத்திற்கு ஒரு முறை பல் டாக்டரிடம் சோதனை செய்ய வேண்டும். அணுகுமுறையால் இந்நோயின் பாதிப்பை குறைத்து ஆரோக்கியமான ஈறுகளை பெறலாம்.- டாக்டர் ஜெ.கண்ணபெருமான்,மதுரை. 94441-54551