உள்ளூர் செய்திகள்

"வயதானவருக்குத்தான் மாரடைப்பு வருமா

வி.கணேஷ், மதுரை: எனது வயது 64. காலையில் 4 இட்லி சாப்பிட்ட உடன், நடக்க முடியவில்லை. எக்கோ, ரத்தம், சிறுநீர் பரிசோதனைகளை செய்ததில் முடிவுகள் நார்மல். இது எதனால் ஏற்படுகிறது?சாப்பிட்ட உடன் நடக்க முடியாமல் இருப்பதோ அல்லது சாப்பிட்டு நடக்கும்போது நெஞ்சில் அழுத்தமாக, மூச்சுத் திணறலுடன் இருப்பது, இருதய நோயாக இருக்க வாய்ப்புகள் அதிகம். இருதய நோய் உள்ள பலருக்கு, வெறும் வயிற்றில் எவ்வளவு தூரம் வேண்டுமானாலும் நடக்க இயலும். ஆனால் சாப்பிட்டபின், நடக்க இயலாது. உங்களுக்கு டிரெட் மில் மற்றும் ஆஞ்சியோகிராம் பரிசோதனை தேவைப்படும்.டி.ராஜன், மதுரை: மாரடைப்பு வயதானவர்களுக்குத்தான் வருமா?மிகத்தவறான கருத்து. பிற நாடுகளைவிட, நம் நாட்டில்தான், இளம் வயதினருக்கும் மாரடைப்பு வருகிறது என்பது, உண்மை. தற்போது 30 வயதுக்கு கீழே உள்ளவர்களுக்கும் சர்வசாதாரணமாக மாரடைப்பு வருவது உண்மை. இதற்கு காரணமாக நமது மரபணு, புகைபிடித்தல், தவறான உணவுப் பழக்கம், உடற்பயிற்சி இன்மை, மன அழுத்தம், ரத்தத்தில் சர்க்கரை அளவு அதிகம், ரத்தக்கொதிப்பு, ரத்தத்தில் கொழுப்பு அதிகமிருத்தல் போன்றவை முக்கிய காரணம். புகைபழக்கத்தை நிறுத்தி, ரத்தத்தில் சர்க்கரை, கொழுப்பு அளவை சரியாக வைத்து, ரத்தஅழுத்தத்தையும் சரியாக பராமரித்து, தினமும் உடற்பயிற்சி செய்து, மனஅழுத்தம் இன்றி பார்த்துக் கொண்டால், மாரடைப்பு என்ற கொடூரநோயை பெருமளவு கட்டுப்படுத்தலாம்.வி.பாப்புச்சாமி, திண்டுக்கல்: தினசரி உடற்பயிற்சி செய்வதால் இருதயத்திற்கு எவ்வாறு பலன் கிடைக்கிறது?இருதயம் என்பது ஒரு தசையாலான உறுப்பு. இதன் ஒரே வேலை, ரத்தத்தை உடலின் அனைத்து பாகங்களுக்கும் அனுப்புவதுதான். உடற்பயிற்சி செய்வதால், இருதய தசை பலமடைகிறது. அத்துடன் அதன் பம்பிங் திறனும் அதிகரிக்கிறது. இதுதவிர ரத்தத்தில் கெட்ட கொழுப்பின் அளவை குறைத்து, நல்ல கொழுப்பை அதிகரிக்கச் செய்கிறது. ரத்தநாளத்தின் உட்புறச் சுவரை ஆரோக்கியமாக வைக்கிறது. உடல் எடையை குறைக்கிறது. உடலின் ரத்த அழுத்தத்தை சரியாக பராமரிக்கிறது. மேலும் சர்க்கரை அளவையும் சரியாக வைக்க உதவுகிறது. தினமும் உடற்பயிற்சி செய்பவருக்கு, மாரடைப்பு வரும் தன்மையும் பலமடங்கு குறைகிறது. அவர்களுக்கு மாரடைப்பு ஏற்பட்டாலும் அதன் தீவிரம் நன்கு குறைவதுடன், எளிதில் குணமடையும் வாய்ப்பும் உள்ளது.ஆர். சுப்ரமணியன், ராமநாதபுரம்: எனக்கு ஆஞ்சியோ பரிசோதனை செய்ததில் 3 ரத்தநாளங்களிலும் அடைப்பு ஏற்பட்டு, பைபாஸ் சர்ஜரி செய்ய வேண்டும் என்கின்றனர். நான் எத்தனை நாட்கள் ஆஸ்பத்திரியில் தங்க வேண்டியிருக்கும்?பைபாஸ் சர்ஜரி என்பது இருதயத்தின் ரத்தநாளத்தில் உள்ள அடைப்பை, சரிசெய்ய, நெஞ்சில் இருந்தோ, கால் அல்லது கையில் இருந்தோ, ரத்தநாளத்தை எடுத்து, அறுவை சிகிச்சை மூலம் பொறுத்துவதாகும். பொதுவாக இந்த அறுவை சிகிச்சைக்கு 2 நாட்கள் முன்பே ஆஸ்பத்திரியில் தங்க வேண்டும். ரத்தம், சிறுநீர், எக்கோ, மார்பக எக்ஸ்ரே மற்றும் சில பரிசோதனைகள் செய்யப்படும்.பின், ஆப்பரேஷன் முடிந்தபின், 3 நாட்கள் போஸ்ட் ஆப்பரேட்டிவ் வார்டில் தங்க வேண்டி வரும். பிறகு சாதாரண வார்டில் 4 நாட்கள் தங்க வேண்டும். வீட்டில், ஒருமாதம் நல்ல ஓய்வில் இருக்க வேண்டும். வழக்கமான பணிகளை மெதுவாக துவங்கலாம்.- டாக்டர் சி.விவேக்போஸ்,மதுரை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்