மாற்று இதயத்துடன் மாரத்தான் ஓடலாம்
இதயத்தில் ஓட்டை இருந்தால் முறையான சிகிச்சை செய்து சரி செய்ய வேண்டும். சீரற்ற இதயத் துடிப்பை சரி செய்ய 'பேஸ் மேக்கர்' பொருத்தலாம்.கோளாறுக்கு தகுந்த சிகிச்சை செய்யாவிட்டால், இதய செயலிழப்பை தவிர்க்க முடியாது. இதய செயலிழப்பு என்பது என்ன?ரத்தத்தை உடல் முழுதும் 'பம்ப்' செய்யும் இதயத்தின் திறன் 68 - 70 சதவீதம் இருக்க வேண்டும். இது, 15 சதவீதத்திற்கும் கீழே சென்றால், இதயம் செயலிழந்து விட்டது என்று பொருள்.இதனால், உடல் முழுதும் உள்ள திசுக்களுக்கு ரத்தம், ஆக்சிஜன் செல்வது குறையும். கை, கால் வீங்கும்; நடக்கவே முடியாது; சிறிது துாரம் நடந்தாலே மயக்கம் வரும்; 'கார்டியாக் ஆஸ்துமா' எனப்படும் வறட்டு இருமல் வரும்; படுத்தவுடன் மூச்சு வாங்கும்; திரவம் அதிகம் சேர்ந்து வயிறு வீங்கும். உடலின் ஒவ்வொரு பகுதியிலும் நீர் சேர ஆரம்பிக்கும். இந்த மாதிரி நோயாளிக்கு இரண்டு விதமான சிகிச்சைகள் உள்ளன. ஒன்று, அறிகுறிகள் ஏற்பட்டவுடன், அதிகப்படியாக சேர்ந்த திரவம் வெளியேற மாத்திரை, இதய செயல்பாட்டை அதிகரிக்க மருந்துகள் கொடுத்து சரி செய்யலாம்.இதில் முன்னேற்றம் கிடைக்காத சூழலில், உயிருக்கு ஆபத்து ஏற்படுவதைத் தவிர்க்க, இதயத்தின் பணியை வெளியில் இருந்து செய்யும் 'எக்மோ' கருவியை தற்காலிக தீர்வாகப் பொருத்த வேண்டும். அடுத்தகட்டமாக 'விஏடி' எனப்படும் 'வென்ட்ரிகுலார் அசிஸ்டிங் டிவைஸ்' என்ற கருவியை, 'திறந்த நிலை' அறுவை சிகிச்சை செய்து, இதயத்தின் அருகில் பொருத்துவோம். இது உள்ளிருந்து இதயத்தின் பணியை செய்யும். மாற்று இதயம் கிடைக்கும் வரை சிலருக்கு தற்காலிகமாகவும், சிலருக்கு நிரந்தரமாகவும் இதை உபயோகிப்போம். பேட்டரியில் இயங்கும் இக்கருவியால் ரத்தம் உறைவது, கருவி பொருத்திய பகுதியில் சீழ் வடிவது போன்ற பிரச்னைகள் வரலாம். இதய செயலிழப்பிற்கு நிரந்தர தீர்வு, இதய மாற்று அறுவை சிகிச்சை மட்டுமே. நோயாளியின் வயது, உயரம், உடல் எடைக்கு தகுந்த மூளைச் சாவு அடைந்தவரின் இதயம் தானமாகக் கிடைத்தால் பொருத்தலாம். ஒரு நாளை தள்ளுவதே போராட்டமாக இருந்த வாழ்க்கை, மாற்று இதயம் பொருத்தியவுடன் ஆரோக்கியமாக உணரச் செய்யும். மாற்று இதயம் பொருத்திய பலர், மாரத்தான் ஓடுவது, சைக்கிளிங் போட்டிகளில் பங்கேற்கின்றனர்.ஐ.டி., துறையில் இருப்பவர்கள் இயல்பாக வேலைக்கு செல்கின்றனர். ஐம்பது வயதிற்கு மேல் அனைவருக்கும் 500 கிராம், 600 கிராம் எடையில் ஒரே மாதிரி தான் இதயம் இருக்கும். ஒரு வயது குழந்தைக்கு மாற்று இதயம் தேவைப்பட்டால், அதே வயதில் உள்ளவரின் இதயம் கிடைக்காதபட்சத்தில், 8 வயது வரை உள்ள குழந்தைகளின் இதயம் தானமாகக் கிடைத்தால் பொருத்தலாம்.டாக்டர் டி.செந்தில்குமார், இதய அறுவை சிகிச்சை சிறப்பு மருத்துவர், ரேலா மருத்துவமனை, சென்னை73974 92472devarajanssendhilkumar@gmail.com