UPDATED : மே 29, 2024 06:08 PM | ADDED : மே 29, 2024 06:06 PM
பொதுவாக மாணவர்கள் மத்தியில் பேசுவதற்கு மதிப்பெண் அடிப்படையில் வெற்றி பெற்ற வெற்றியாளரையே கூப்பிடுவார்கள் ஆனால் வெற்றி என்பது மதிப்பெண்ணில் இல்லை தேர்ந்து எடுத்து வாழும் வாழ்க்கையில் இருக்கிறது என்பதை சொல்வதற்காக பேச்சாளரும்,இயக்குனருமான ராஜ்மோகனுக்கு அந்த வாய்ப்பை ஒரு விழாவில் வழங்கியிருந்தனர்.சீரியசான விஷயங்களைக்கூட யார் ஒருவர் சிரிக்க சிரிக்கக் கொடுக்கிறாரோ அவரே பார்வையாளர்கள் மனதில் பச்சக் என்று ஒட்டிக்கொள்வார்.இவரும் அப்படித்தான்...அவர் பேச்சில் இருந்து..இங்கே பேசிய எனக்கு அறிமுகப்படுத்திய மாணவர்கள் எல்லோரும் தங்கள் மதிப்பெண்ணை சொன்ன போது எனக்கு பிரமிப்பாக இருந்தது காரணம் நான் தட்டுத்தடுமாறி பாசானவன்.
எனக்கு படிப்பு வராது என்றாலும் என் அம்மா கேட்கவில்லை என்னை கல்லுாரியில் சேர்த்துவிட்டனர் ஒவ்வொரு தேர்விலும் கிடைத்த மோசமான மார்க்குகளை பார்த்துவிட்டு என் அம்மா என்னைத்திட்ட மாட்டார்,மாறாக எனக்கு மார்க் போடத்தெரியாத மக்கு வாத்தியார் என்று வாத்தியாரைத்தான் திட்டுவார்.அந்த அம்மாவின் மனதை சந்தோஷப்படுத்துவதற்காகவே ஏதாவது செய்யவேண்டும் என்று வைராக்கியம் பூண்டேன்எதற்காகவும் அழுது வடியாமல் எப்போதும் கலகலப்பாக பேசிக்கொண்டே இருப்பேன் இந்த பேச்சையை ஏன் எனது மூலதனமாக மாற்றிக் கொள்ளக்கூடாது என்று சிந்தித்தேன்.வசமாக வந்தது கல்லுாரி ஆண்டு விழா எனது பெயரைக் கொடுத்து நானும் சேர்ந்து கொண்டேன், அப்போது டிரெண்டிங்கில் இருந்தவர் அப்துல்கலாம் ஐயாதான். ஆகவே அவரைப்பற்றி நிறைய படித்துப் போயிருந்தேன் ஆனால் எனக்கு முன் பேசிய அத்துணை பேரும் அப்துல்கலாம் பற்றியே பேசினர்.இது வேலைக்ககாது என்று முடிவு செய்து மனதில் இருப்பதை பேசுவது என முடிவு செய்து காந்தியை எடுத்துக் கொண்டேன், அவர் மக்களுக்காக ரயில் பெட்டியில் இருந்து தள்ளி விடப்பட்டது முதல் சுடப்பட்டது வரை சொல்லி முடித்தேன், கடைசியில் யார் அவரைச் சுட்டது என்று சொல்லவரும் போது பெயர் மறந்துவிட துப்பாக்கி போல நீட்டிய கையோடு சில வினாடிகள் நின்றுபார்த்தும் பெயர் நினைவிற்கு வராததால் கண்ணீர் மல்க மேடையைவிட்டு இறங்கினேன்.நிச்சயம் நமக்கு பரிசு இல்லை என்று முடிவு செய்து, தேர்ந்து எடுத்து இந்த வாழ்க்கையும் வாய்ப்பும் கூட நமக்கு கைகொடுக்கவில்லையே என்ற கவலையோடு கல்லுாரிக்கு பின்னால் இருந்த பாழுங்கிணற்றருகே சென்றவன்..(இந்த இடத்தில் பேச்சை நிறுத்திவிட்டு தண்ணீர் குடித்துவிட்டு பிறகு தொடர்கிறார்) பாழுங்கிணற்றருகே சென்றவன் அந்த கிணற்றுக்கு அருகே இருந்து டீகடையில் ஒரு சமோசாவும் டீயும் வாங்கிக் குடித்தபடி காந்தியை சுட்டது யாராக இருக்கும் என்று யோசனையில் ஆழ்ந்திருந்தேன்.அந்த நேரம் வெளியே கட்டியிருந்த மைக், 'ராஜ்மோகன் எங்கு இருந்தாலும் உடனே மேடைக்கு வரவும்' என்று அழைத்தது, விழுந்து அடித்து ஒடினால் எனக்குதான் பேச்சுப்போட்டியில் முதல் பரிசு என்றனர்.அந்த பரிசை விட அந்தப் பரிசைக் கொடுத்த நடுவர் சொன்ன வார்த்தைதான் பெரிய பரிசு ...இந்தப் பையன் கடைசியில் காந்தியை சுட்ட அயோக்கியன் பெயரைக்கூட உச்சரிப்பதை தவிர்த்து கண்ணீரை மட்டுமே வெளிப்படுத்தி தனது தேசபக்தியை அவரது நெஞ்சில் மட்டுமல்ல நமது நெஞ்சிலும் ஆழமாக இறக்கிவிட்டார் என்றார். நான் 'அப்படியா' என்று வாய் பிளந்து கேட்டபடி பரிசை வாங்கிக் கொண்டேன், எனக்கு மட்டும்தான் தெரியும் பேச்சின் கிளைமாக்சில் என்ன நடந்தது என்று..அதன்பிறகு கல்லுாரியில் ஹீரோவானேன் எங்கு பேச்சு போட்டி நடந்தாலும் என்னை நிர்வாகம் அனுப்பியது, மதிப்பெண் பற்றி கவலைப்படாதே என்று ஆறுதல் கூறியது நான் என்றைக்கு அது பற்றி கவலைப்பட்டிருக்கிறேன்.அப்படி ஆரம்பித்த பேச்சே எனது மூச்சாகி தொழிலாகிவிட்டது,என் தமிழ் எனக்கு சோறு மட்டுமல்ல கார் வீடு மணைவி மக்கள் நட்பு உறவு வெளிநாட்டு பயணங்கள் என்று வாழ்க்கையை மிகவும் வளமாக்கி வைத்திருக்கிறது.ஆகவே மாணவர்களே உங்களுக்குள் நீங்கள் இப்பிடியிருந்தால் நல்லது என்று ஒரு மின்னல் மின்னும் அதைப்பிடித்துக் கொள்ளுங்கள் நிச்சயம் முன்னேற முடியும் என்றார்.பின்னர் இவரது இன்ஸ்டகிராமில் இவரைப்பற்றி படித்த போது இவர் பதிவிட்டிருந்த சில வார்த்தைகள் நெஞ்சைத் தொட்டன,எப்போதும் செய்யும் வேலையை சில நாட்கள் செய்யாமல் தவிருங்கள். நீங்கள் இல்லாமலும் உலகம் சுழலும். சற்று சும்மா இருங்கள்.மாதம் ஒரு இசை நிகழ்ச்சி என்று சென்று கண் குளிர பாருங்கள் காது குளிர கேளுங்கள்.புதிய உணவு வகையை செல்பேசியில் அல்ல நேரில் தேடி போய் ஆவி பறக்க ருசித்து பாருங்கள்.நண்பர்களுக்கு கடன் வாங்கி தந்து மாட்டிக்கொண்டு எதிரி ஆகிவிடாதீர்கள். நன்றி கடனை தவிர வேறு எந்த கடனிலும் மாட்டி கொள்ள வேண்டாம்.வாரம் ஒரு புத்தகம் படித்து விட்டு அதில் அறிந்த செய்திகளை நண்பர்களிடம் சொல்லுங்கள்.இதுவரை செல்லாத இடத்திற்கு ஒருமுறை சென்று வாருங்கள். செல்பி எடுக்க அல்ல. சிறிது இளைப்பாறி மூச்சு விட.முன்பின் தெரியாத நபருடன் எந்த எதிர்பார்ப்பும் இன்றி பேச முயலுங்கள். அவர்களை பேச விட்டு அமைதியாக கேளுங்கள்.மறக்க முடியும். மன்னிக்க முடியும். வாய் விட்டு சிரிக்க முடியும். இந்த மூன்றும் யாரால் முடியுமோ.. அவர்களால் தான் நிம்மதியாய் வாழ முடியும் மாணவ செல்வங்களே.. தாய், தந்தை, குரு, தெய்வம் என்பது படிநிலை அல்ல. தாயும் தந்தையுமே உங்களை வழி நடத்தும் குரு! தாயும் தந்தையுமே உங்களுக்கு வாழ்வு தந்த தெய்வம்! அவர்களை தொழுது கும்பிடுங்கள்! வாழ்வில் முன்னேறுங்கள் என்று முடித்திருந்தார்..-எல்.முருகராஜ்