நீண்ட மூக்கு உள்ள பறவை
'சிகோனிடே' (Ciconiidae) குடும்பத்தைச் சேர்ந்த நீர்ப் பறவை. நாரை இனங்களில் ஒன்று. சதுப்பு நிலம், நீர்நிலை அருகில் உள்ள திறந்தவெளிப் பகுதிகளில் காணப்படும். தடித்த, நீண்ட அலகும், நீண்ட கால்களையும் உடையது. அலகு மஞ்சள் நிறத்தில் உள்ளதால், இதற்கு 'மஞ்சள் மூக்கு நாரை' என்று பெயர். சாம்பல் நிற உடலையும், செந்நிறத்தில் நீண்ட கால்களையும் கொண்டது. பறக்கும்போது, கழுத்தை வளைத்தபடி, நீளமான இறக்கைகளை வேகமாக அடித்துக் கொள்ளாமல், விரித்தபடி பறக்கும். மீன், நண்டு, தவளை, சிப்பி, பூச்சிகள் போன்றவற்றை உண்ணும். கூட்டமாகப் பறந்து சென்று இரைதேடும்.நீர் நிலை அருகில் உள்ள மரங்களில் சிறு குச்சிகள், சருகு போன்றவற்றால் கூடு கட்டும். இனப்பெருக்கத்துக்காக, நீண்ட தொலைவு பறந்து செல்லவும் தயங்காது. செப்டம்பர் முதல் மார்ச் வரை, இனப்பெருக்க காலம். நான்கு முட்டைகள் வரை இடும். ஆணும், பெண்ணும் சேர்ந்தே முட்டைகளை அடைகாக்கும்; 25 நாட்களில் குஞ்சுகள் பொரிக்கும்; அவை 60 நாட்களில் பறக்கத் துவங்கும். இரு பறவைகளும் சேர்ந்தே குஞ்சுகளுக்கு இரை ஊட்டுவதோடு, இறக்கைகளால் போர்த்திப் பாதுகாக்கும். இந்தியா, பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, வங்கதேசம், சீனா, வியட்நாம் ஆகிய நாடுகளில் இவை உள்ளன.இறக்கை நீளம்: 200 செ.மீ.உயரம்: 100 செ.மீ.ஆயுள்: 20 ஆண்டுகள்எடை: 3 கிலோ- கி.சாந்தா