கண்களை செதுக்கிய பூ
குயவனின் கைவண்ணத்தில் அழகிய மண் பானை உருவாவதுபோல, பூச்சியின் கண்களை உருவாக்கியதில் பூக்களுக்கும் பங்கிருக்கிறது என்றால் நம்ப முடிகிறதா? ஆம்; பூச்சியின் கண்களின் பல சிறப்புத் தன்மைகளைச் செதுக்கியது பூக்கள்தாம்! பூச்சியின் கண்கள், நமது கண் அமைப்பிலிருந்து பெரிதும் வேறுபட்டது. பூச்சிகளுக்கு கூட்டுக்கண் (Compound Eye - காம்பவுண்ட் ஐ) அமைப்பு உள்ளது. மயிற்பீலி போன்ற கண் தனிக்கூறுகளின் கூட்டிணைவாக பூச்சியின் கூட்டுக்கண் உள்ளது. ஒவ்வொரு கண்கூறும், நமது கண்களைப்போல நிறம் அறியும் தன்மை கொண்டவை. பல ஆயிரம் கண்கூறுகளின் தொகுப்பாக பந்துபோல கூட்டுக் கண் இருப்பதால், தன் தலையைத் திருப்பாமலேயே சுமார் 360 டிகிரி முழுமையையும் பூச்சியால் பார்க்க முடியும். கண் முன்னால் இந்த பேப்பரில் உள்ள எழுத்துகளை உன்னால் படிக்க முடியும். இதே பேப்பரை கண் முன்னே வேகவேகமாக ஆட்டிப்பார். படிக்க இயலாது. ஆனால், கூட்டுக்கண் அமைப்பு உடைய பூச்சிக்கு, சிமிட்டும் நேரத்திலும் கூர்மையாகப் பார்க்கும் திறன் உள்ளது. எனவே தான், காற்றிலே ஆடும் பூவின் மீதும், 'ஜம்' என்று விபத்து எதுவுமில்லாமல் அமர முடிகிறது. பூச்சியின் கண்களில் இவ்வாறு பல சிறப்புகள் இருந்தாலும், அவற்றில் சில பூவால் ஏற்பட்ட படிநிலை பரிணாம வளர்ச்சியும் உண்டு. தேனைத் தேடிப் பூவை பூச்சிகள் அண்டும்போது, பூவின் மகரந்தம் அந்தச் சமயத்தில் பூச்சியின் மயிர்க்கால்களில் ஒட்டிக் கொள்கிறது. இதே மகரந்த தூசு பூச்சியின் கண்களில் படிந்து விடலாம் அல்லவா? பல லட்சம் ஆண்டுகள் இணை பரிணாம வளர்ச்சியின் தொடர்ச்சியாக, பூச்சியின் விழிகள் மேலே தூசு படியாத அமைப்பு உருவாகியுள்ளது. பூச்சிகளின் கண்களில் சுமார் 50 முதல் 10,000 தனித்தனி மயிற்பீலி கண்கூறுகள் உள்ளன. ஒவ்வொன்றிலும் விழி லென்ஸ், ஒளியை உணரும் உணர்வி நரம்பு, நிறத்தைப் பிரித்தறியும் ஒப்சின் (Opsin) புரதச் செல்களும் உள்ளன. நுண்ணோக்கி மூலம் பூச்சியின் கண்கூறுகளைப் பார்த்தால், முதல் பார்வைக்கு வழவழப்பாகத்தான் தென்படும். மேலும் கூடுதலாக நோக்கினால், விழித்திரையின் மேலே, 'நானோ' (Nano) அளவில் கொப்புளம்போல நுண் அமைப்பு தென்படும். முடியின் தடிமனில் இருபது பங்கில் ஒரு பகுதியே இதன் அளவு என்றால், எவ்வளவு சிறியதாக இருக்கும் என்பதை பார்த்துக் கொள்ளுங்கள். தாமரை இலையின் மீதும் இதுபோன்ற நுண் நானோ அமைப்புகள் உண்டு. பூச்சிகளின் கண்விழி மீது ஆயிரக்கணக்கில் சுமார் 50 முதல் 300 நானோமீட்டர் நுண் அளவில் உள்ள புடைப்பு மகரந்தத் துகள் கண்களின் ஒட்டிக் கொள்ளாமல் தடுக்கிறது. நுண்ணியதாக உள்ள பகுதியில் படியும் தூசு, புடைப்பின் சிகரம் மீது மட்டுமே படும். தூசும் கண்ணும் தொட்டுக்கொள்ளும் பரப்பளவு மிகமிகக் குறையும். எனவே, இரண்டுக்கும் இடையே ஏற்படும் ஈர்ப்பு விசைகள் வேகமாகக் குறைந்து போகும். தூசு கண்களின் மீது ஒட்டிக் கொள்ள முடியாது; எளிதில் உருண்டோடிவிடும். மேலும் நுண் அமைப்பைக் கொண்டுள்ள விழியின் மீது ஒளி பட்டு ஒளிரும் தன்மையும் குறையும். விலங்குகளின் கண்கள் இருட்டில் ஒளிர்வதுபோல, பூச்சிகளின் கண்கள் இதனால்தான் ஒளிர்வதில்லை. சூரிய மின் ஆற்றல் பெறுவதற்கு சோலார் செல் தகடுகள் மீது தூசி படிந்து, அதன் திறன் மங்குவது இந்தியா போன்ற வெப்பமண்டல நாடுகளில் மிகப்பெரிய பிரச்னை. அதேபோல, சோலார் செல்களின் மீது உள்ள கண்ணாடியில் சூரிய ஒளிபட்டு தெறிப்பதும் ஒரு சிக்கல். பூச்சியின் கண்கள் அமைப்பைக் கண்டு பாடம் படிக்கும் விஞ்ஞானிகள், இதே இயற்கையின் அமைப்பைப் பயன்படுத்தி சோலார் செல்கள் தயாரித்து தூசு பிரச்னை மற்றும் ஒளி பிரதிபலிக்கும் பிரச்னை இரண்டுக்கும் ஒரே நேரத்தில் தீர்வுகாண முயற்சித்து வருகிறார்கள்.