பெண்மையைக் கொண்டாடிய ஓவியர்!
வண்ணங்களுடன் அழகியல் குழைத்து மிக எதார்த்தமாக வரைந்தார். கோவில்களில் இருக்கும் சிலைகளை அப்படியே வரையாமல் தனக்கென ஒரு பாணியை உருவாக்கிக்கொண்டார். தென்னிந்தியப் பெண்களின் இயல்பான முகங்களை மாதிரியாகக் கொண்டு, இந்திய தெய்வங்களை அவர் வரைந்த ஓவியங்கள் பலரைக் கவர்ந்தன. புராணங்களிலும் இதிகாசங்களிலும் வருகிற பெண் பாத்திரங்களுக்கு உயிர் கொடுத்த மகத்தான ஓவியர்தான் ரவி வர்மா!சிறுவயதில் இருந்தே ஓவியம் வரைவதில் அவருக்கு ஆர்வம் இருந்தது. கரித் துண்டுகளைப் பயன்படுத்தி அரண்மனை சுவரில் கிறுக்கத் தொடங்கினார். அவரது ஓவிய ஆர்வத்தைப் பார்த்த அவரது மாமா, ஆரம்பப் பாடங்களைக் கற்றுக் கொடுத்தார். அதன்பிறகு, அரண்மனை ஓவியரிடம் தைல வண்ண ஓவியங்களையும், ஆங்கிலேய ஓவியரிடம் எண்ணெய் கலந்த ஓவியங்களையும் கற்றுக் கொண்டார்.உருவச் சித்திரம், உருவம் சார்ந்த படைப்புகள், புராணம் சார்ந்த காட்சிகளைப் பின்பற்றி இவரது படைப்புகள் அமைந்தன. பழைய ஓவிய மரபுகளைத் தவிர்த்து, மேற்கத்திய பாணி கலந்து இந்திய ஓவியங்களில் புதுமையைப் புகுத்தி வியக்க வைத்தார்.அவரது ஓவியங்கள் இந்தியாவில் மட்டுமன்றி உலகம் முழுவதும் பெரும் வரவேற்பைப் பெற்றன. சர்வதேச அளவில் பல பரிசுகளையும் பதக்கங்களையும் பெற்றார். தனது ஓவியத்தை அச்சு அசலாக வரைந்ததற்காக 'வீரஸ்ருங்கலா' என்னும் உயரிய விருதை ரவி வர்மாவுக்கு திருவாங்கூர் மகாராஜா கொடுத்தார். இவரது கலைப் பணியைச் சிறப்பிக்க 'ராஜா ரவி வர்மா புரஸ்காரம்' எனும் விருதை கலை மற்றும் பண்பாட்டுத் துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு கேரள அரசு வழங்கி வருகிறது.காலத்தால் அழியாத ஓவியங்களைத் தந்து, கலையின் மகனாக விளங்கும் ரவி வர்மா என்றும் போற்றுதலுக்கு உரியவர்.புகழ்பெற்ற ஓவியங்கள்சரஸ்வதி ஓவியம்தமயந்தி அன்னப்பட்சியுடன் உரையாடுதல்இசைக்குழு ஓவியம்ஒரு பெண் பழத் தட்டுடன் நிற்பதுசகுந்தலா ஓவியம்யசோதா கண்ணனை அலங்கரிப்பதுராஜா ரவி வர்மா29.4.1848 - 2.10.1906கிளிமானூர், கேரளம்.