தோள் கொடுப்பான் தோழன்
அமெரிக்காவிலுள்ள கலிஃபோர்னியாவில் வசிக்கும் காம்டனுக்கு, இன்றைக்கு வயது 8. பிறக்கும்போதே முதுகெலும்பில் கட்டி இருந்ததால், நடக்க முடியாமல் போனது. சக்கர நாற்காலியின் உதவியுடன் தான் உலவ முடியும். பாலர் பள்ளியில், காம்டனுக்கு அறிமுகமான நண்பன் பால். மாற்றுத்திறனாளிகளுக்கு அமெரிக்க அரசு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறைதான் சக்கர நாற்காலி வழங்கும். காம்டனுக்கு இப்போது தரப்பட்டுள்ள சக்கர நாற்காலி, மிகவும் பெரியதாகவும், கனமானதாகவும் உள்ளது. எனவே, அவனால் அதைச் சுலபமாகக் கையாள முடிவதில்லை. பலமுறை அதிலிருந்து கீழே விழும் தன் நண்பனைக் கண்டு மனம் வருந்தினான் பால். ஒருநாள், இணையதளங்களின் மூலம், நல்ல காரியங்களுக்கு நன்கொடை திரட்ட முடியும் என்பதைக் கேள்விப்பட்டான். உடனே தன் நண்பனுக்காக ஒரு இணையதளத்தின் மூலம் (https://www.gofundme.com/keep-kamden-rollin) உருக்கமான வேண்டுகோள் விடுத்தான். சில நாட்களுக்குள்ளாகவே தேவையான தொகை கிடைத்துவிட்டது. இப்போது காம்டனுக்கு சரியான அளவில் சக்கர நாற்காலி வாங்கப்பட்டுவிட்டது. பாலின் இம்முயற்சியைப் பலரும் பாராட்டுகின்றனர்.