உள்ளூர் செய்திகள்

சாகச விளையாட்டுகள் ஆட்டிசத்தின் தீவிரத்தை குறைக்கும்

ஆட்டிசம் எனும் வளர்ச்சிக் குறைபாடு, உலக அளவில் அதிகரித்து வருகிறது. எனவே, ஆட்டிச நிலைக் குழந்தைகளின் திறன்களை மேம்படுத்துவது தொடர்பான ஆராய்ச்சிகளும் உலகெங்கும் நடைபெற்று வருகின்றன. இஸ்ரேலின் டெல் அவிவ் நகரில் நடைபெற்ற ஆய்வு ஒன்றில், வெளிப்புற சாகச விளையாட்டுகள் ஆட்டிசக் குழந்தைகளின் சமூகத் தொடர்புத் திறன்களில் குறிப்பிடத்தகுந்த அளவு முன்னேற்றத்தை தந்துள்ளதாகத் தெரியவந்துள்ளது.ஏ.எல்.யூ.டி. (ALUT) எனும் அமைப்பு நடத்திய ஆய்வொன்று, இத்தகவலை உறுதிப்படுத்தியுள்ளது. மூன்று முதல் 7 வயதுக்கு உட்பட்ட 51 குழந்தைகள் இந்த ஆய்வுக்கு எடுத்துக்கொள்ளப்பட்டனர். அவர்களில் 30 பேர் மட்டும், வாரந்தோறும் பூங்காக்களுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒவ்வொரு அமர்விலும் முதலில் பாடலுடன் நிகழ்ச்சி தொடங்கும். பிறகு பூங்காக்களில் உள்ள வெவ்வேறு சாகச விளையாட்டு உபகரணங்களில் இவர்கள் விளையாட வைக்கப்பட்டனர். 13 வாரங்கள் தொடர்ந்த இந்த ஆய்வின் முடிவில், இக்குழந்தைகளின் சமூகத் தொடர்புத் திறன் நன்கு முன்னேறி இருந்தது.ஆய்வு தொடங்குவதற்கு முன்னர், குழந்தைகளின் அறிவுத் திறன், தகவல் தொடர்புத் திறன் போன்றவை குறித்து வைக்கப்பட்டிருந்தன. 13 வார ஆய்வுக்குப் பிறகு, மீண்டும் இதே திறன்களை அளவிட்டபோது, நல்ல முன்னேற்றம் இருந்ததாக, ஆய்வில் ஈடுபட்ட பேராசிரியர் டிட்ஸா (Professor Ditza Antebi-Zachor) தெரிவிக்கிறார். எனவே, சிறப்புப் பள்ளிகள் மரபான சிகிச்சை முறைகளோடு, இவ்வகை விளையாட்டுகளையும் ஆட்டிசக் குழந்தைகளுக்கு பழக்கப்படுத்த வேண்டும் என்று அவர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !