போர் விமானத்தை ஓட்டி வியக்க வைத்த பெண்
'நம்முடைய கனவுகளைத் துரத்திச் செல்லத் துணிவு இருந்தால், நாம் காணும் கனவு நிஜமாகும்” -- வால்டர் டிஸ்னிஇந்த வரிகளுக்கு உயிர் கொடுத்திருக்கிறார் அவானி சதுர்வேதி. இந்தியாவில் எட்டு அதி நவீன போர் விமானங்கள் உள்ளன. அதில் ஒன்றான எம்.ஐ.ஜி. 21 என்ற அதிவேக போர் விமானத்தை ஓட்டிய முதல் பெண்மணி என்ற சாதனையைப் படைத்திருக்கிறார் 24 வயது அவானி சதுர்வேதி. கடந்த 2016இல் பாதுகாப்புத் துறை, இந்திய ராணுவத்தில் உள்ள விமானப் படையில் பெண்களுக்குப் பணி நியமனம் வழங்கவேண்டும் என தீர்மானம் கொண்டு வந்தது. அதையடுத்து, பவானா காந்த், மோகனா சிங் மற்றும் அவானி சதுர்வேதி ஆகிய மூன்று பெண்களும் பணியில் சேர்ந்தார்கள்.ஆண்களுக்கு அளிக்கப்பட்ட பயிற்சிகள் அனைத்தும் இவர்களுக்கும் அளிக்கப்பட்டது. இந்திய ராணுவப் படையிலுள்ள விமானப் படையில் சேர்ந்த முதல் மூன்று பெண்கள் என்பதால், கிடைத்த நல்ல வாய்ப்பை நல்லமுறையில் பயன்படுத்தி, அடுத்துவரும் பெண்களுக்கு நம்பிக்கை அளித்தனர்.அவானியின் அண்ணன் ராணுவத்தில் வேலை செய்கிறார். அவரைப் பார்த்துத்தான் இவருக்கு இந்த ஆசை வந்ததாம். அதேபோல் அவருடைய நண்பர்கள் பலர் விமான ஓட்டுநர் பயிற்சிக்குச் செல்வார்கள். அவர்களோடு இவரும் பறப்பார். போர் விமானங்கள் ஓட்ட வேண்டும் என்பதுதான் அவருடைய லட்சியம். விமானங்களை ஓட்டுவதற்கான பயிற்சியை ராஜஸ்தான், ஹைதராபாத் ஆகிய மாநிலங்களில் முறையாகக் கற்றுக்கொண்டார். போர் விமானம் ஓட்டுவது என்பது, அவ்வளவு சாதாரண விஷயம் அல்ல. அதனுடைய எடை, தொழில்நுட்பம், வேகம் என அனைத்துமே முற்றிலும் வித்தியாசமானது. இந்தியாவில் முதல்முறையாகப் போர் விமானங்களைப் பெண்கள் ஓட்ட வாய்ப்பு வழங்கப்பட்டது. போர் விமானி ஆக வேண்டும் என்பதால், கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டார். உடலும், மனமும் ஒத்துழைப்புக் கொடுக்க வேண்டும். ஏனெனில் மற்ற விமானங்கள் ஓட்ட தொழில்நுட்ப அறிவு போதுமானதாக இருக்கும். ஆனால் போர் விமானங்கள் ஓட்ட வலிமையான உடல்வாகு தேவை. அதற்காக கடுமையாக உழைத்திருக்கிறார். எம்.ஐ.ஜி. 21 பைசன் விமானத்தை ஓட்டுவதற்குப் பயிற்சி எடுத்தார்.பிப்ரவரி 19ஆம் தேதி, தனி ஒருவராக குஜராத் மாநிலத்திலுள்ள ஜாம்நகர் பகுதியில் இந்த அதிவேக போர் விமானத்தை எடுத்து, சுமார் அரை மணிநேரம் ஓட்டி உள்ளார். வேறு யாருடைய துணையும் இல்லாமல், அரை மணிநேரம் வானில் பறந்து அனைவரையும் அசர வைத்திருக்கிறார் அவானி. எம்.ஐ.ஜி. 21 அதிவேக போர் விமானத்தில் என்ன சிறப்பு?* 1956-இல் சோவியத் யூனியன் உருவாக்கியது.* 1959இல் முதல் முறையாகப் போருக்குப் பயன்படுத்தப்பட்டது.* வான்வழித் தாக்குதலில் அதிக அளவில் போருக்குப் பயன்படுத்தப்பட்ட விமானம், ரஷ்யா நாட்டைச் சேர்ந்த எம்.ஐ.ஜி. 21 அதிவேக போர் விமானம் தான்.* இந்த விமானம் 60 நாடுகளில் பயன்படுத்தப்படுகிறது.* தற்போது 13 நாடுகளில் மட்டுமே உபயோகத்தில் உள்ளது.* இதை எப்போதும் இரண்டு விமானிகள் சேர்ந்துதான் ஓட்டுவார்கள்.* மணிக்கு 2200 கி.மீ. வேகம் செல்லக் கூடியது.* 1961-இல் ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, ரஷ்யா நாட்டைச் சேர்ந்த எம்.ஐ.ஜி. 21 ரக போர் விமானம் விலைக்கு வாங்கப்பட்டது.* அதன் பின் இந்த விமானத்தை மேம்படுத்தும் உரிமையைப் பெற்றது. அதைத் தொடர்ந்து, எம்.ஐ.ஜி. 21 பைசன் என்று பெயரோடு புத்துயிர் பெற்றது.* 1965, 1971, 1999 ஆகிய காலகட்டத்தில் இந்தியப் போரின்போது, இந்த விமானம் பயன்படுத்தப்பட்டது. * இந்தியாவில் தற்போது 300 விமானங்கள் ஓடுகின்றன.அவானி அடுத்து என்ன செய்யப்போகிறார்?எம்.ஐ.ஜி. 21 பைசனை அடுத்து, அவருக்கு மற்ற போர் விமானங்கள் ஓட்டுவதற்கான பயிற்சி வழங்கப்பட உள்ளது. வான்வெளித் தாக்குதல் செய்ய, வானிலிருந்து தரைவழி தாக்குதல் செய்ய என இன்னும் பல பயிற்சிகளும், சாதனைகளும் காத்திருக்கின்றன. பெண்களால் எதுவும் முடியும் என்பதை நாட்டிற்கு உணர்த்திய அவானி போல், இன்னும் பல பெண்கள் உயரே பறக்கட்டும்!