ஒளியை மறைக்கும் வானியல் நிகழ்வு
சூரியக்கதிர் பூமிக்கு வரும் நேர்கோட்டில், அதன் ஒளியை தடுக்கும் நிகழ்வு, கிரகணம் (Eclipse) எனப்படும். விண்வெளியில் உள்ள ஒரு பொருள், வேறொரு பொருளின் நிழலினாலோ அல்லது வேறொரு பொருள் இடையில் செல்வதாலோ, தற்காலிகமாக ஒளி மறைப்பு நிகழ்கிறது. இந்த வானியல் நிகழ்வு, நிலாவின் நிழல் பூமியின் மேற்பரப்பைத் தாண்டும்போது ஏற்படும், சூரிய கிரகணத்தையும், நிலா பூமியின் நிழலின் உள் செல்லும்போது ஏற்படும் சந்திர கிரகணத்தையும் குறிப்பிடப் பயன்படுத்தப்படுகிறது. பூமி, சந்திரன் தவிர, விண்வெளியில் உள்ள வேறு கோள்களிலும் கிரகணம் ஏற்படுகிறது.சூரிய கிரகணம்சூரியனுக்கும் பூமிக்கும் இடையில் நிலா செல்லும்போது, சூரியனும், நிலாவும் இணையான பாதையில் இருக்கும்போது, சூரிய கிரகணம் ஏற்படுகிறது. இதனால் சூரியன் முழுவதுமோ அல்லது ஒரு பகுதியோ மறைக்கப்படும். சூரியன் முழுவதும் மறைவது முழு சூரிய கிரகணம்; ஒரு பகுதி மட்டும் மறைவது பகுதி சூரிய கிரகணம். ஓராண்டில் இரண்டு முதல் ஐந்து சூரிய கிரகணங்கள் வரை ஏற்படலாம். இப்படி நிகழும்போது, சூரியனின் மையப்பகுதி முழுதும் மறைக்கப்பட்டு, விளிம்பு வட்டம், ஒளி வளையம்போல வெளிச்சத்துடன் காணப்படும். சில நிமிடங்கள் மட்டுமே நிகழும் இந்த வானியல் நிகழ்வை, உலகின் குறிப்பிட்ட சில பகுதிகளில் இருந்து பார்க்க முடியும்.சந்திர கிரகணம்நிலா பூமிக்குப் பின்னால் கடந்து செல்லும்போது, பூமி, சூரியக் கதிர்களை நிலாவின் மீது படுவதில் இருந்து மறைக்கிறது. இது சந்திர கிரகணம் எனப்படும். சூரியன், பூமி, நிலா ஆகியவை ஒரே வரிசையில் வரும்போது, சந்திர கிரகணம் ஏற்படும். சந்திர கிரகணத்தை இரவு நேரத்தில் காண முடியும். இது சில மணி நேரம் வரை நீடிக்கும். உலகின் எல்லா பகுதிகளிலும் இருந்து இதைப் பார்க்க முடியும்.- ப.கோபாலகிருஷ்ணன்