வெங்கியைக் கேளுங்க
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி செயற்கை அறிவாற்றல் (Artificial Intelligence) என்றால் என்ன?ஆர்.சஜீவ் கிருஷ்ணா, மகாத்மா சி.பி.எஸ்.இ. பள்ளி, மதுரை.உலக செஸ் சாம்பியனை தோற்கடிக்கும் கணினி, நாம் பேசுவதைப் புரிந்து செயல்படும் அலைபேசி, கை அசைத்தால் புகைப்படம் எடுக்கும் கருவி என, பல கருவிகள் வந்துவிட்டன. இருந்தாலும் செயற்கை அறிவாற்றலை உருவாக்கும் கனவு இன்னமும் கனவாகத்தான் இருக்கிறது.கிடுகிடு என கணினி வளர்ச்சி ஏற்பட்டபோது, 1956ல் ஸ்டான்ஃபோர்டு பல்கலைக்கழக (Stanford University) கணினித்துறை விஞ்ஞானி ஜான் மெக்கார்த் உருவாக்கிய சொல்தான் ARTIFICIAL INTELLIGENCE எனப்படும் 'செயற்கை அறிவாற்றல்'. மனிதனால் மட்டுமே சிந்தித்துச் செய்யக்கூடிய பணிகளைக் கருவிகள் செய்யும் திறத்தோடு படைப்பதுதான், 'செயற்கை அறிவாற்றல்' என, அவர் வரையறை செய்தார்.சிறுநீரகம் (Kidney) செய்யும் வேலையைத்தான் 'டயாலிசிஸ்' (Dialysis) கருவி செய்கிறது. இதயம், நுரையீரல், கணையம் போன்ற மனித உறுப்புகள் போலச் செயல்படும் செயற்கைக் கருவிகள் உள்ளன. மனித மூளையைப்போல செயல்படக்கூடிய கருவி அல்லது மனித மூளை செய்யக்கூடிய குறைந்தபட்ச பணிகளைச் செயற்கையாக செய்யக்கூடிய கருவிதான் 'செயற்கை அறிவாற்றல்' கருவி.இது போன்ற கருவியைப் படைப்பது எளிதல்ல. எடுத்துக்காட்டாக, உங்கள் நண்பர் மதுரையில் இருக்கிறார் என்றால், அவரது கால், கை, விரல்கள், கண் இமை என எல்லாமும் மதுரையில்தான் இருக்கும். இதை நம்மால் எளிதில் உணர முடியும். அதே சமயம், இந்த எளிமையான பொதுப் புத்தியைக் கணினியில் செயற்கையாக படைப்பது அவ்வளவு எளிதல்ல.நண்பர் மதுரையில் இருந்தால், அவருடைய உடலும் மதுரையில்தான் இருக்கும் எனகணினியில் பதிந்தால், நண்பரின் நாற்காலி, வீடு, கார் என அவருடைய எல்லாமும், மதுரையில்தான் இருக்கும் என, கணினி தவறாகப் புரிந்து கொள்ளும். கணினிக்கு வெளிப்படையாக எல்லாம் பதிய வேண்டும். ஆனால், மனிதனுக்குக் குறிப்பால் உணரும் ஆற்றல் உண்டு. இதுபோன்ற சிறப்பு மனித அறிவாற்றல் திறனை, கருவியில் படைப்பதுதான் செயற்கை அறிவாற்றல் ஆய்வுத்துறை.தாவரங்களில், கார்பன் டை ஆக்சைடைப் பெற்று, ஆக்சிஜனை வெளியேற்றும் நிகழ்வு எவ்வாறு நடக்கிறது?மு.பரத்குமார், 8ம் வகுப்பு, சேர்மன் மாணிக்க வாசகம் பள்ளி, தேவகோட்டை.நீர் எனப்படும் H2Oவை, சூரிய ஒளியின் ஆற்றலால், H, O என தாவரங்கள் பிரிக்கும். இதில் தாவரத்துக்கு ஆக்சிஜன் (O) தேவையில்லை என்பதால், அதனை உமிழ்ந்துவிடும். காற்றிலிருந்து கார்பன்டை ஆக்சைடை (CO2) உள்ளிழுத்து அதனுடன் Hஐப் பிணைத்து குளுக்கோஸ் அடங்கிய கார்போஹைட்ரேட் உணவைத் தயாரித்துக் கொள்கிறது தாவரம். இதற்கும் தாவரம் சுவாசிப்பதற்கும் எந்த சம்பந்தமும் இல்லை.தாவரத்தை உணவாகக் கொண்ட விலங்கை நாம் உண்ணும்போது, குளுக்கோஸ் பெறுகிறோம். மனித உடலுக்கு ஆற்றலைத் தரும் குளுக்கோஸ் கார்பன் செறிவானது. மனித செல்லில் குளுக்கோஸும் ஆக்சிஜனும் சேரும்போது, கார்பன்டை ஆக்சைடு, நீர் மற்றும் ஆற்றலால் உருவாகிறது. இப்படித்தான் தாவரங்களில் இருந்து கிடைக்கும் ஆக்சிஜனை உள்வாங்கி, கார்பன் டை ஆக்சைடை நாம் வெளியேற்றுகிறோம்.வியர்வை வழியே அதிக அளவில் கழிவு வெளியேறினால் என்ன நடக்கும்?ஆர்.அழகு மேகலா, 12ம் வகுப்பு, மதுரை.ஒவ்வொருவருக்கும் வியர்வை வெளியேறும் அளவு வேறுபடும். ஒரு சிலருக்கு மற்றவர்களைக் காட்டிலும் கூடுதலாக வியர்க்கும். உலகில் சுமார் இரண்டு அல்லது மூன்று சதவிகிதம் பேருக்கு இவ்வாறு கூடுதல் வியர்வை வெளியேறும். இதனால் எந்தவித சிக்கலும் இல்லை. ஆனால், சிலருக்கு, திடீரென வியர்வை வெளியேறும் அளவு கூடினால், அது சர்க்கரை நோய் போன்ற குறைபாடுகளின் அறிகுறியாக இருக்கலாம்.ரயில் பாதையில், W, W/L, P, C/T போன்ற பலவகை குறியீடுகள் உள்ளன. இவற்றுக்கு என்ன அர்த்தம். இதுபோன்று வேறு ஏதாவது இருக்கிறதா? பகலவன், 7ம் வகுப்பு, எம்.சி.சி. பள்ளி, சேத்துப்பட்டு.வெறும், 'w' (whistle) என்றால் அங்கே கடந்து செல்லும் ரயில், எச்சரிக்கை ஒலி எழுப்ப வேண்டும் என்று அர்த்தம். W/L (whistle level) என்றால் லெவல் கிராஸிங் இருக்கிறது; எச்சரிக்கை ஒலி எழுப்பவும் என அர்த்தம். C/T (Caution Order for Tunnel) என்றால் எச்சரிக்கை; மலை குகை வருவதன் அடையாளமாக எச்சரிக்கை. அந்தப் பகுதியில் ரயில்கள் செல்லக்கூடிய அதிகபட்ச வேகத்தை (Speed Limit) அறிவிக்க, மஞ்சள் முக்கோண போர்டில் 45, 100 போன்ற எண்கள் குறிக்கப்பட்டிருக்கும்.வேகத்தடை நீக்கம் பெறும் இடத்தில் வட்ட போர்டில், T (Termination Indicator) என எழுதப்பட்டு இருக்கும். T/P என்பது பாசஞ்சர் வண்டிகளுக்கும், T/G என்பது வெறும் கூட்ஸ் (Goods) வண்டிகளுக்கும் வேகத்தடை நீக்கம் என்பதைக் குறிக்கும். இதுபோல, ரயில் பாதையில் ஒவ்வொரு துறைக்கும், அது சார்ந்த குறியீடுகள் நிறைய உள்ளன.