வெங்கியைக் கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிதலையில் அடிபட்டு எல்லாம் மறந்தாலும், கற்ற மொழி, நீச்சல் போன்ற விஷயங்கள் மறப்பதில்லையே ஏன்?எம். சச்சின் குமார், 11ம் வகுப்பு, ஜெய்கோபால் கரோடியா வித்யாலயா, சென்னை.அஞ்சறைபெட்டியில் சீரகம், கடுகு, மிளகு என எல்லாம் தனித்தனியே அதனுடைய இடத்தில் இருப்பதுபோல பேசுவது, கேட்பது, நீண்டகால நினைவு, முகங்களின் நினைவு என பல்வேறு விதமான நினைவுகள் மூளையின் பல பகுதிகளில் பிரிந்து பதிந்திருக்கின்றன. எனவே மூளையின் ஒரு பகுதி பழுதடைந்தால் எல்லா ஆற்றலும் நினைவும் அழிந்து போவதில்லை. ஆயினும் சில குறிப்பிட்ட பகுதிகளில் ஏற்படும் பழுது மூளையின் இயக்கத்தைப் பெருமளவு பாதித்து கோமா நிலைக்கு இட்டுச் சென்றுவிடலாம். நினைவுகள் இருவகை1 அறிவிக்கை நினைவுஇந்தியாவின் தலைநகரம் டில்லி என்பது போன்ற பொருள் குறித்த நினைவுகள், எனது இருபதாவது பிறந்தநாளை எங்கே, எப்படிக் கொண்டாடினேன் என்பது போன்ற சம்பவ நினைவுகள் என அறிவிக்கை நினைவில் இரண்டு உள்வகைகள் உள்ளன.2 செய்முறை நினைவுபம்பரம் சுற்றுவது, காற்றாடி விடுவது, ரஷிய மொழியில் எழுதுவது எப்படி என்பன போன்ற செய்முறைகளைக் கற்று பழகி நினைவில் வைப்பது செய்முறை நினைவு. இவையெல்லாம் மூளையின் வெவ்வேறு இடத்தில் மையம் கொண்டுள்ளன.எனவே மூளையின் ஒரு பகுதி பழுதடைந்த நிலையில் இருக்கும் நோயாளி நன்கு தெரிந்த முகத்தைக்கூட மறந்துவிடலாம். ஆனால், அவரது பேச்சுக் குரல் நினைவில் இருக்கலாம். தனது கடந்தகாலம் குறித்து எல்லா சம்பவ நினைவுகளும் மறந்துபோகலாம். ஆனால் சிறுவயதில் சைக்கிள் ஓட்டக் கற்றுக்கொண்டது அப்படியே நினைவில் இருக்கும்.மனிதனின் AB வகை ரத்தத்தில் ஆன்டிபாடி இல்லை. பிறகு, AB ரத்த வகை உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி எவ்வாறு கிடைக்கிறது?அ. முத்துமாரி, மதுரை.எல்லா ரத்த வகைக்கும் நோய் எதிர்ப்பு சக்தி இருக்கும். குறிப்பிட்ட எதிர்ப்புஊக்கியை (ஆன்டிஜென் -- Antigen) எதிர்புரத ரத்தம் சந்திக்கும்போது தயாரிக்கப்படும் புரதம்தான் ரத்தத்தில் உள்ள ஆன்டிபாடி (Antibody). AB வகை ரத்தத்தில் அந்த வகைக்கான சிறப்பு ஆன்டிபாடி புரதங்கள் இல்லை என்றுதான் பொருளே தவிர, கிருமிகளைத் தாக்கி அழிக்கும் ஆன்டிபாடி புரதங்கள் இருக்காது என்று பொருள் அல்ல. நோய்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்திக்கும், ரத்தவகைகளுக்கும் நேரடி சம்பந்தம் இல்லை என்றாலும் ஆய்வுகள் வியப்பான சில செய்திகளை வெளிபடுத்துகின்றன.எல்லா ரத்த வகைகளுக்கும் குணமும் உண்டு, குறைகளும் உண்டு. எந்த வகை சிறந்தது எனக் கூறமுடியாது. காலரா நோயைத் தாங்கும் சக்தி A மற்றும் B வகைக்கு உண்டு. ஆனால் O வகை ரத்தப்பிரிவு கொண்டவர்களைத் தீவிரமாகக் காலரா தாக்கும். ஏனைய வகைகளை விட பிளேக் நோயை தாங்கும் சக்தி B வகைக்கு குறைவு. பிளேக் நோயைத் தாங்கும் சக்தி கொண்ட A வகை இருதய நோய், சின்னம்மைக்கு ஆளாகும் வாய்ப்பு அதிகம். ஆனால் இருதய நோய் மற்றும் காசநோயிலிருந்து O வகைக்கு சற்றே கூடுதல் பாதுகாப்பு உண்டு. எனினும் நோய்கள் ஏற்பட ரத்தப் பிரிவைவிட மற்ற காரணிகளே முன்னிலையில் இருக்கின்றன. யானை, நாய் போன்ற விலங்குகளுக்கு இயற்கைப் பேரிடர்களின் அறிகுறிகளை முன்கூட்டியே அறிந்துகொள்ளும் சக்தி உள்ளது என்கிறார்களே! அது எப்படி?தெ.திரிஷா, 8ம் வகுப்பு, அரசு உயர்நிலைப்பள்ளி, சுந்தரமுடையான்.யானை, நாய் போன்ற சில விலங்குகள் அகஒலியை (இன்ஃப்ரா சவுண்ட் - infra-sound) கேட்கும் திறன் வாய்ந்தவை. திமிங்கிலங்கள் இந்த அகஒலி கொண்டுதான் கடலின் ஒருபுறமிருந்து மறுபுறம் தமக்குள் செய்திப் பரிமாற்றம் செய்துகொள்கின்றன. சுனாமி போன்ற இயற்கைப் பேரிடர்கள் ஏற்படும்போது, பூமியானது முன்கூட்டியே அகஒலி அலைகளில் அதிரும். மனிதனின் கேட்கும் திறனுக்கும் அப்பால் உள்ள இந்த அலைநீளங்களில் வெளிப்படும் அகஒலியை சில விலங்குகள் உணர முடியும். இயற்கைப் பேரிடர் சமயத்தில் இயல்புக்கு மாறாக கூடுதலாக அகஒலி ஏற்படும்போது, அதில் குழம்பி என்ன, ஏது என்று தெரியாமல் பாதுகாப்பு தேடி விலங்குகள் ஓடும். விலங்கின் எதிரி ஏற்படுத்தும் அகஒலி போல, சூறாவளி ஏற்படுத்தும் அகஒலி எல்லாப் பக்கத்திலிருந்தும் வந்து சூழும். அதில் குழம்பும் விலங்கு பெரும் ஆபத்து சூழ்ந்துள்ளது எனக் கருதி ஓட்டம் எடுக்கும் என்கிறார்கள் சில ஆய்வாளர்கள். இந்த ஆய்வுகளைத் தொடர்ந்து இயற்கைப் பேரிடர்கள் ஏற்படுத்தும் அகஒலியை உணரும் கருவிகளை வடிவமைத்து ஆய்வுகளையும் விஞ்ஞானிகள் மேற்கொண்டு வருகின்றனர்.மின்சார இஸ்திரி பெட்டியில் உள்ள கண்ணாடி இழை அதிக சூட்டிலும் எரியாமல் இருக்கிறது. அதன் காரணம் என்ன?எஸ்.தீபிகா, 11ம் வகுப்பு, ஜவஹர் மெட்ரிக் பள்ளி, நெய்வேலி.பைபர் கிளாஸ் எனப்படும் கண்ணாடி இழை நார் சுமார் 1,200°C வெப்பநிலையில் மட்டுமே உருகத் தொடங்கும். இஸ்திரி பெட்டியில் இவ்வளவு வெப்பநிலை ஏற்படாது. எனவே அதிக சூட்டிலும் எரியாமல் இருக்கிறது.