வெங்கியைக் கேளுங்க
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி.வெங்கடேஸ்வரன் மத்திய அரசு விஞ்ஞானிஊர்ந்து செல்லும் (Reptiles) உயிரிகளுக்கு ஏன் முதுகெலும்பு இருப்பதில்லை?என்.சிவா, 8ஆம் வகுப்பு, ஸ்ரீ வள்ளி வரதராஜ் மெட்ரிகுலேஷன் பள்ளி, தேனி.தவளை போன்ற நில நீர் வாழ்வன, முதலை போன்ற ஊர்வன விலங்குகளுக்கு முதுகெலும்பு உண்டு. அதனால் இவை முதுகெலும்புயிரிகள் (Vertebrates) ஆகும். பாம்புக்கு முதுகெலும்பு இல்லை என்பது போல் தோன்றலாம். ஆனால், அதன் விலா எலும்புடன் முதுகெலும்பு முள்ளெலும்புகள் பிணைந்துள்ளன. பாம்புக்கு சுமார் 180 முதல் 400 முதுகெலும்பு முள்ளெலும்புகள் இருக்கும். புழு போன்ற உயிரிகள் பரிணாமத்தின் தொடக்க காலத்தில் உருவானவை. அவற்றுக்கு முதுகெலும்பு கிடையாது. தொடக்க காலத்தில் மூளை கொண்ட உயிரிகள் உருவாயின. அந்த உயிரியில் இருந்து பரிணமித்த எல்லா உயிரிகளுக்கும் மூளை இருந்தது. அதுபோல், முதுகெலும்பு என்பது புழு உருவான பின்னர் வளர்ச்சியுற்ற ஓர் உடலுறுப்பு. எனவே, அதற்கு முன்னர் உருவான விலங்குகளுக்கு முதுகெலும்பு இல்லை. முதுகெலும்புடன் உருவான விலங்கிலிருந்து, உருவான எல்லா விலங்குகளுக்கும் முதுகெலும்பு உள்ளது.வானை நோக்கிச் சுடப்படும் துப்பாக்கிக் குண்டுகள் எவ்வளவு தூரம் சென்று மீண்டும் கீழே வரும்? அப்படி வரும்போது மனிதர்களைத் தாக்குமா?ஜா.நேஹா டேன்யா, 5ஆம் வகுப்பு, புனித வளனார் பெண்கள் மெட்ரிகுலேஷன் பள்ளி, திண்டுக்கல்.சிறப்பான கேள்வி இது! பீரங்கிகளை இயக்கும்போது எந்தத் திசையில், எந்தக் கோணத்தில் வைக்கவேண்டும் என்ற கேள்வியிலிருந்து எறிபொருள் இயக்கம் (Projectile motion) எனும் துறை உருவானது. முதலில் கடலில் வரும் எதிரிக் கப்பலை நோக்கி நேரடியாகச் சுட்டால், குண்டு இலக்கைத் தாக்கவில்லை. சற்றே கோணத்தில் வைத்துச் சுட்டதால் சரியாக இலக்கைத் தாக்கியது. இத்தாலிய கணிதவியலாளர் டார்டாக்ளியா (Niccolò Tartaglia) மற்றும் கலிலியோ ஆகியோர் இது குறித்துப் பரிசோதனைகள் நடத்தினர். எறியப்படும் குண்டு மீது, கீழ் நோக்கி விசை செலுத்தும்போது, தரைக்கு இணைக்கோட்டுத் திசையில் எறியப்படும் விசை செயற்படுகிறது எனவும், இரண்டின் கூட்டு இயக்கமே குண்டின் பாதை எனவும் கண்டுபிடித்தனர். அந்தப் பாதை எப்போதும் பரவளையமாக (Parabola) இருக்கும் எனவும் கண்டுபிடித்தனர். எவ்வளவு வேகத்தில் மற்றும் எந்தக் கோணத்தில் குண்டு வெளிப்படுகிறது என்பதைப் பொறுத்து, எவ்வளவு தொலைவில் அந்தக் குண்டு விழும் என்பதைத் தீர்மானிக்கலாம்.வானை நோக்கிச் சுடும்போது, குண்டு சுருக்கிய பரவளையப் பாதையில் மேலே செல்லும். அதன் மேல்நோக்கிய உந்தத்தை எதிர்த்து, ஈர்ப்பு விசை ஒவ்வொரு கணமும் வேலை செய்யும். குறிப்பிட்ட உயரம் சென்றதும் குண்டு கூடுதல் முடிவுநிலை திசைவேகத்துடன் கீழே விழும். அப்போது மனிதர்கள் மேல் விழுந்தால் ஆபத்துதான்.சூரிய மண்டலத்தில் உள்ள கிரகங்கள், சூரியனின் ஈர்ப்பு சக்தி காரணமாக சூரியனுக்குள் செல்லாமல், அதைச் சுற்றி வருவது ஏன்?ஆ.சுஜித், 12ஆம் வகுப்பு, வேலம்மாள் பள்ளி, சூரப்பட்டு, சென்னை.பேருந்து ஓட்டுநர் திடீரென பிரேக் பிடிக்கும்போது உள்ளே பயணிக்கும் நாமும் சடாரென முன்னே சாய்வோம். அதாவது, பேருந்தின் இயக்கத்தால் உந்தப்பட்டு நாமும் நகர்ந்து கொண்டே இருக்கிறோம். எனவே, பிரேக் பிடிக்கும் முன்னரே நம் மீது அந்த விசை செயற்படுகிறது. அதுபோல பூமியின் மீது இரண்டு விசைகள் செயற்படுகின்றன. 1. சூரியனின் ஈர்ப்பு விசை2. தொடுகோடு (Tangent) திசையில் செயற்படும் சடத்துவ விசை.அதாவது ஈர்ப்பு விசை மையத்தை நோக்கி இழுக்க, சடத்துவ விசை அதன் செங்குத்துத் தொடுகோடு திசையில் செயற்படும்.பூமி, சூரியன் எல்லாம் உருவாகும் முன்னர் வெறும் வாயுப் பந்துதான் இருந்தது. எந்த ஒரு வாயுப் பந்தும் விண்வெளியில் மிதந்தால் அது தன்னைத்தானே சுற்றிச் சுழலும் என எளிய இயற்பியல் கொண்டு நிறுவலாம். அவ்வாறே மையத்தில் உள்ள பொருட்கள் எல்லாம் சுருங்கி சூரியனாகப் பரிணமித்தன. சுழலும் வாயுப் பந்தில் இருந்து உருவானதால் சூரியன் தன்னைத்தானே சுற்றுகிறது. அதுபோல பல்வேறு இடங்களிலுள்ள பொருட்கள் திரண்டு கோள்கள் உருவாயின. அவை தன்னைத்தானே சுற்றி சூரியனையும் சுற்றத் தொடங்கின. அறிவியல் விஞ்ஞானிகள் போல் வித்தியாசமாகச் சிந்திக்க என்ன செய்ய வேண்டும்?பி.ரூஃபக்ஸ் ரெனோ, 10ஆம் வகுப்பு, சக்தி மெட்ரிகுலேஷன் பள்ளி, சின்னசேலம்.'முன்னோர்கள் கூறினார்கள், அந்தக் காலத்திலேயே எழுதி வைத்துள்ளார்கள்' என யார் கூறுவதையும் ஏற்காமல் அதனுடைய மெய்ப்பொருளைக் காண்பதுதான் அறிவியல் மனப்பான்மையின் முதல் தேவை. ஒரு காலத்தில் பூமி தட்டை என்றே அனைவரும் நம்பினர். அதைக் கேள்வி கேட்ட ஆரியபட்டர், அரிஸ்டாட்டில் போன்றவர்கள்தான் பூமி கோளவடிவமானது என கண்டுபிடித்தனர்.கோளவடிவமான பூமியில் இருப்பவை எல்லாம் கீழே விழாமல் எப்படி இருக்கின்றன என்ற சிந்தனையின் விளைவாகவே பூமிக்கு ஈர்ப்பு விசை இருக்கிறது என்ற கருதுகோள் உருவானது. ஈர்ப்பு விசை எப்படிச் செயற்படுகிறது, அதன் தன்மை என்ன, சமன்பாடு என்ன என முழுமையான விளக்கம் தேடி நியூட்டன் அலைந்தபோதுதான் அதற்கான விதிகள் பிறந்தன. தேவையான மூன்று முக்கிய மனப்பான்மைகள் 1. முன்முடிவுகளை ஒதுக்கித் தள்ளி மெய்யைத் தேடும் அறிவியல் சிந்தனை2. முழுமையான விளக்கம் பெறும் வரை தேடலைத் தொடரும் அறிவுலகப் பயணம்3. இதுவரை நாம் அறிந்துள்ள அறிவினைப் புரிந்து கொள்வது; புதிதாக எழும் கேள்விகள் என்னென்ன என்பதை அறிந்து கொள்வது.