மூத்தோருக்கு உதவும் தொழில்நுட்பம்
முதியோர் நலனைக் கண்காணிக்க கொல்கத்தாவிலுள்ள ஐ.ஐ.டி.யின் ஆராய்ச்சித்துறை, ஒரு புதிய செயலியை அறிமுகப்படுத்த உள்ளது. ஒயாசிஸ் (OASIS -- Old Age Support Integrated Services) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் செயலி, வயது முதிர்ந்தவர்களுக்குத் தேவையான எல்லா வசதிகளையும் ஒரே இடத்தில் அளிக்கவல்லது. இது பல்வேறு சென்சார்களின் மூலம் மூத்தோரின் இதயத்துடிப்பு முதல் அவர்களது நடமாட்டம் வரை எல்லாவிதமான தகவல்களையும் சேகரித்து, ஆண்ட்ராய்ட் செயலி உதவியுடன் அவர்களின் பாதுகாவலருக்கும், குடும்ப உறுப்பினர்களுக்கும். 24 மணிநேரமும் அனுப்பிவிடும். உடலில் அணிந்து கொள்ளக்கூடிய வகையிலான சென்சார்களுடன் கூடிய இச்செயலி, தகவல்களை உரியவர்களுக்கு அனுப்புவதோடு மட்டுமல்லாமல், கிளவுட் தொழில்நுட்பம் மூலம் சேமிக்கவும்வல்லது. எனவே, மருத்துவர்கள் இத்தகவல்களின் அடிப்படையில் அடுத்தகட்ட சிகிச்சைகளைத் திட்டமிட முடியும் என்கிறார் ஆராய்ச்சிக்குழு உறுப்பினர்களில் ஒருவரான அனுஸ்ரீ பாசு. ஐ.ஐ.டி.யின் பேராசிரியரான நாராயண் சந்திரா நாயக் மற்றும் மும்பையைச் சேர்ந்த தொழிலதிபரான சந்திரசேகர் சக்பால் ஆகியோர், இதன் அமைப்பாளர்கள்.வீடுகளில் இருக்கும் முதியவர்களுக்கு மட்டுமன்றி, முதியோர் இல்லங்களில் வசிக்கும் முதியவர்களுக்கும் ஏற்றவாறு இச்செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது. இல்லத்திலிருக்கும் உறவினர்கள் மட்டுமல்லாது அவர்களது பாதுகாப்பாளர்களுக்கும் தகவல்கள் உடனுக்குடன் அனுப்பப்படும் என்பது இதில் உள்ள கூடுதல் வசதியாகும். இப்போது வாரணாசியிலுள்ள சில முதியோர் இல்லங்களில் சோதனை முறையில் இச்செயலி பயன்படுத்தப்பட்டு வருகிறது.