உள்ளூர் செய்திகள்

உயிரியல் உலகம்: நாற்பதடி நகங்கள்!

* நகங்கள் இறந்த செல்களால் ஆனவை. இதனால்தான் கை, கால் நகங்களை வெட்டும்போது வலிப்பதில்லை. எப்படி முடியை வெட்டும்போது வலிப்பதில்லையோ, அதுபோலத்தான் இதுவும்.* தோலுக்கு அடியில் இருக்கும் நகத்தின் பகுதி மட்டுமே உயிருள்ளது. நகத்தின் வேரான இந்தப் பகுதிக்கு ரத்தம் பாய்ந்து வளர்வதற்கு உதவுகிறது. * கைவிரல் நகங்கள் கெரட்டின் (Keratin) எனப்படும் மூன்று அடுக்கு திசுக்களால் ஆனது. இது முடி, நகங்களில் உள்ள ஒரு புரதமாகும். விலங்குகளிலும் காணப்படுகிறது. * கைவிரல் நகங்கள் மாதத்திற்குச் சராசரியாக 3.5 மில்லிமீட்டர் வளர்கின்றன. கால்விரல் நகங்களோ கிட்டத்தட்ட இதில் பாதி அளவே வளர்கின்றன. அதிகமாகப் பயன்படுத்தும் கையின் நகங்களே வேகமாக வளர்கின்றன. ஆண்களின் கைவிரல் நகங்கள், பெண்களின் நகங்களை விட வேகமாக வளரும். * கோடைக்காலத்தில் நகங்கள் வேகமாக வளர்கின்றன. கோடையில் மனித உடல் அதிக வைட்டமின் டி யை உட்கொள்கிறது. இதன் விளைவாக நக வளர்ச்சி அதிகமாகிறது.* கட்டை விரல் நகம் மிக மெதுவாக வளரும், நடுவிரல் நகம் மிக வேகமாக வளரும்.* வயதாகும்போது கைவிரல் நகங்களின் வளர்ச்சி குறைகிறது. * கின்னஸ் உலக சாதனை பட்டியலின் படி, உலகின் மிக நீளமான கைவிரல் நகங்கள் டயானா ஆம்ஸ்ட்ராங் (Diana Armstrong) என்பவருடையதாகும். இரண்டு கை விரல்களும் சேர்த்து அதன் நீளம் 42 அடி 10.4 அங்குலம்!* நகப்பூச்சு (Nail Polish) பொ. யு. மு 3000இல் சீனாவில் இருந்ததாகப் பதிவு இருக்கிறது. அவர்கள் தேன் மெழுகு, முட்டையின் வெள்ளைக்கரு, காய்கறி சாயங்கள் உள்ளிட்ட பொருட்களைப் பயன்படுத்தி நகப்பூச்சுகளை உருவாக்கினர். ஆரம்பத்தில் கறுப்பு, சிவப்பு போன்ற அடிப்படை வண்ணங்கள் பயன்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !