உயிரியல் உலகம்: ரீலா? ரியலா?
குதிரைகள், அசை போடாத விலங்குகள்.உண்மை. குதிரைகள் தாவர உண்ணிகள். இவை புல்வகைத் தாவரங்களை நாள் முழுவதும் மேய்கின்றன. இவற்றின் செரிமான மண்டலம் இதற்கேற்ப உள்ளது. மனிதனுடன் ஒப்பிடுகையில் இவற்றின் இரைப்பை சிறிதாகவும் பெருங்குடல் நீண்டதாகவும் உள்ளது. இதனால் சத்துகள் சீராகக் கிடைக்கின்றன. நன்கு வளர்ந்த ஒரு 450 கிலோ எடையுள்ள குதிரை ஒரு நாளில் 7-11 கிலோ உணவைத் தின்னும். மேலும் 38 - 45 லிட்டர் வரை நீர் அருந்தும். இவை அசை போடாத விலங்குகள் (Non-ruminant animals). எனவே ஒரே ஒரு இரைப்பை மட்டுமே உள்ளது. எனினும் இவற்றின் குடலுக்கு முன்னர் உள்ள சீக்கம் (Cecum) என்னும் சிறப்பான அமைப்பினால் இவற்றால் புற்களில் உள்ள செல்லுலோசையும் (Cellulose) செரிக்க இயலும்.குதிரைகளால் வாந்தி எடுக்க இயலாது. இதனால் ஏதேனும் நச்சுப்பொருட்களை உண்டால் அது குதிரையின் இறப்புக்குக் காரணமாகக் கூடும். இவை பெரும்பாலும் நச்சுத்தன்மையுள்ள தாவரங்களை உண்பதில்லை.