உள்ளூர் செய்திகள்

புத்திசாலி விலங்கு!

யானை புத்திசாலியான விலங்கு. யானைகள் தங்களை கண்ணாடியில் அடையாளம் கண்டுகொள்ளக் கூடியவை! மனிதக் குரங்குகள், ஓங்கில்கள், காக்கை போன்ற விலங்குகளும் இவ்வாறு அடையாளம் காணக்கூடியவை. இதைக் கண்டுபிடிக்க யானைகளுக்கு ஒரு ஸ்டிக்கர் ஒட்டி அதைக் கண்ணாடியில் காட்டினால், யானை அது தன் மீது இருக்கிறதா என்று தேடும். நாம் கை குலுக்குவதைப் போல அவை துதிக்கை நுனியை, மற்ற யானையின் வாயில் வைத்து உணரும். அதேபோல, யானைகள் மற்ற விலங்குகளுக்கு உதவும் குணம் கொண்டவை. சமீபத்தில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்த ஒரு பாகனை, யானை காப்பாற்ற ஓடிவந்த வீடியோ மிகவும் வியப்பை உண்டாக்கியது. அதேபோல, முதலையிடம் சிக்கிய காட்டு மாட்டை ஒரு யானை காப்பாற்றியதும் எல்லா சமூக வலைத்தளங்களிலும் வலம் வந்தது.யானைகள், மனிதர்களை அடையாளம் காண வல்லவை என்று பல நிகழ்வுகள் மூலம் புரிந்து கொள்ள முடியும். அதேபோல ஊனமுற்றோரை அவை தாக்குவதில்லை என்றும் கூறப்படுகிறது. ஒரு யானையால், மற்ற 1000 யானைகளை அடையாளம் காண இயலும் என்று சமீபத்திய ஆய்வுகள் நிரூபிக்கின்றன.யானைகள் செங்குத்தான பாதைகளிலும் சர்வ சாதாரணமாகச் செல்லும். அதன் பெரிய உடலின் கனத்தை சரியாகக் கணக்கிட்டு அவை சமநிலை இழக்காமல் செல்வது மிக வியப்பான செயல். கடினமான சரிவுகளில் அவை சறுக்கிச் செல்வதும் உண்டு. உதாரணமாக, ஆப்பிரிக்காவின் போட்ஸ்வானாவில் தண்ணீர் தேடி கோடையில் யானைகள் மணல்குன்றுகளில் சறுக்கிச் செல்லும்.அதேபோல், இறந்த யானைகளுக்காக அவை துக்கப்படுவதும் பல இயற்கையாளர்களால் பதிவு செய்யப்பட்டிருக்கின்றன. இந்தியாவில், பிரபல வனவிலங்கு ஆவணப்பட இயக்குநரான சேகர் தத்தாத்ரியின் 'நாகரஹொளே' (Nagarahole) என்ற ஆவணப்படத்தில் இந்தக் குணம் மிக அழகாக வெளிப்பட்டிருக்கும்.யானைகள் அதிசயிக்கத்தக்க உயிரினம் என்பது மேற்சொன்ன பல நிகழ்வுகளில் இருந்து நமக்குத் தெரிகிறது. இவ்வளவு ஆற்றலுள்ள யானைகளை நாம் அழிய விடலாமா? இந்தியாவில்தான் ஆசிய யானைகள் அதிக அளவில் காணப்படுகின்றன. சுமார் 30,000 யானைகள்தான் நம்மிடம் இருக்கின்றன. இதையும் நாம் பாதுகாக்கத் தவறிவிட்டால், உலகின் மிகப்பெரிய பாலூட்டி இருந்தது என்பது வரலாறாகிவிடும். - சந்திரசேகர்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !