சிறுவர்களிடமிருந்து குறும்படங்களுக்கு அழைப்பு
குழந்தைகளுக்கான திரைப்படங்களைப் பிரபலப்படுத்தும் மத்திய அரசு அமைப்பு, 'சில்ரன்ஸ் ஃபிலிம் சொசைட்டி ஆஃப் இந்தியா' (Children's Film Society of India'). குழந்தைகளுக்கான திரைப்படங்கள் தயாரிப்பதை ஊக்குவிக்கும் நோக்கில், இந்த அமைப்பு இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை, சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழாவை நடத்தி வருகிறது. 20வது சர்வதேச குழந்தைகள் திரைப்பட விழா, ஹைதராபாத்தில் வரும் நவம்பர் 14ம் தேதி தொடங்குகிறது. ஒருவாரம் நடைபெறவிருக்கும் இத்திரைப்படவிழாவில், இன்டர்நேஷனல் லைவ் ஆக் ஷன் படங்கள் (அனிமேஷன் கதாபாத்திரங்கள் இல்லாமல், நடிகர்கள் நடித்த படங்கள்), அனிமேஷன் படங்கள், ஏசியன் பனோரமா (ஆசியப் படங்கள்), லிட்டில் டைரக்டர்ஸ் (குழந்தைகள் இயக்கிய படங்கள்) என, மொத்தம் நான்கு பிரிவுகளில் திரைப்படங்கள் திரையிடப்பட உள்ளன. ஒவ்வொரு பிரிவிலும் சிறந்த படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட உள்ளன.லிட்டில் டைரக்டர்கள் பிரிவில், 6 வயதில் இருந்து 16 வயதுக்குட்பட்ட சிறுவர்கள், தனியாகவோ, குழுவாகவோ, திரைக்கதை அமைத்து குறும்படங்களை இயக்கி, போட்டிக்கு அனுப்பலாம். இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள விரும்பும் சிறுவர்கள், http://cfsindia.org/20icffi/ என்ற சுட்டியில், விவரங்களைப் பெறலாம். குறும்படங்களை அனுப்புவதற்கு கடைசி நாள் ஆகஸ்ட் 31.