தமிழ் வழியே சீனம்!
உலகின் பழமையான மொழிகளுள் சீன மொழியும் ஒன்று. தமிழ், ஆங்கிலம் போன்ற மொழிகளை எப்படிக் கற்றுக்கொண்டோம்? எழுத்துகளை முதலில் கற்றுக்கொண்டோம். அதன்பின் சொற்களை வாசித்தோம். சீன மொழியை இந்த முறையில் கற்க முடியாது. ஆம், சீன மொழியில் எழுத்துகளே கிடையாது; சொற்கள்தான் உண்டு. சொற்களின் வடிவங்கள், சித்திரங்களாக இருக்கும். எப்படி அந்த மொழியைக் கற்பது? 'மாண்டரின் ஸ்கூல் ஆஃப் சென்னை' நிறுவனத்தின் தலைவர் ஷிவ்சங்கரிடம் கேட்டோம்:சீன மொழியைக் கற்றுக்கொள்வது அவ்வளவு கஷ்டமா? மற்ற மொழிகளைக் காட்டிலும் மாண்டரின் (சீன மொழி) கடினம்தான். நிறையச் சொற்கள் இருக்கின்றன. அவற்றை மனப்பாடம் செய்து, மனத்தில் பதியவைத்துக் கொள்ள வேண்டும். எழுத்துகள் கிடையாது என்பதால், சொற்களைக் கற்றுக்கொள்ள முயற்சி செய்ய வேண்டும். மற்ற மொழிகளைக் கற்றுக்கொள்ள 50 சதவீதம் முயற்சி எடுத்தால், இதற்கு 70 சதவீதம் முயற்சி எடுக்க வேண்டும். வராது என்று எதுவும் இல்லை; முயற்சி செய்தால் நிச்சயம் முடியும்.இதில் எத்தனை நிலைகள் உள்ளன? நான்கு நிலைகள் உள்ளன. முதல் நிலையில், பேச்சு மொழி சொல்லித் தரப்படும். அதையடுத்து இரண்டாம் நிலையில், எழுத்தும் வாசிப்பும் அறிமுகம் செய்யப்படும். இந்த இரண்டையும் நல்ல முறையில் கற்றுத் தேர்ச்சி பெற்றாலே, ஓரளவுக்கு மாண்டரின் மொழியைப் பேசவும், வாசிக்கவும், எழுதவும் தெரிந்துவிடும். மூன்று, நான்கு நிலைகளிலும் தேர்ந்துவிட்டால், மாண்டரின் மொழியைக் கரைத்துக் குடித்ததாக எடுத்துக்கொள்ளலாம்.யாரெல்லாம் மாண்டரின் கற்க வருகிறார்கள்?சீனாவில் மருத்துவம் பயில விரும்புவோர் அதிகம் வருகிறார்கள். கடந்த சில ஆண்டுகளாக, பொறியியல் முடித்த மாணவர்களும், வேலையில் சேர்வதற்காக, மாண்டரின் கற்க வருகிறார்கள். பெரியபெரிய நிறுவனங்கள், அவர்களுடைய பணியாளர்களை மாண்டரின் மொழி கற்க அனுப்பி வைக்கின்றன. சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் அவர்களுக்குச் சொல்லித் தருகிறோம்.சிறுவர், சிறுமியருக்குச் சொல்லித் தரப்படுகிறதா?ஏராளமான சிறார்களைச் சீனத் திரைப்படங்கள் கவர்ந்திருக்கின்றன. அவர்களுக்கு இந்த மொழி மீது ஆர்வம் உள்ளது. அதுபோன்ற சிறுவர்கள் கற்றுக்கொள்ள வருகிறார்கள்.எப்படிச் சொல்லிக் கொடுக்கிறீர்கள்?அந்தந்த மொழியை, அந்தந்த மொழி வாயிலாகவே சொல்லித் தரவேண்டும் என்பதுதான் முறை. ஆனால், மாணவர்கள் எளிமையாகப் புரிந்துகொள்ள வேண்டும் என்பதற்காக, தமிழ் வழியாக மாண்டரின் கற்றுக் கொடுக்கிறோம். அடிப்படைகளைப் புரிந்துகொண்டபின், மாண்டரின் கற்றுக்கொள்வது சுலபமாக இருக்கும்.பாடங்களைத் தாண்டி வகுப்பை சுவாரசியமாக்க என்ன செய்கிறீர்கள்?சீனத் திரைப்படங்கள் காட்டுவோம். ப்ளே கார்டு விளையாட்டுகள் மூலம் 'சொல் விளையாட்டு' விளையாடுவோம். அரசியல் உரைகள், புகழ்பெற்றவர்களின் பேட்டிகள் என பல விதங்களில் சோர்வு ஏற்படாமல் கற்றுத் தருகிறோம். கோடையில் சிறப்பு கோர்ஸ் ஏதேனும் உண்டா?மே மாதம் புதிய வகுப்புகளைத் தொடங்க இருக்கிறோம். ஐந்து வயது முதல் பதினைந்து வயது வரை உள்ளவர்கள் இதில் சேரலாம். இதில் மாண்டரின் மொழியின் அடிப்படை கற்றுக் கொடுக்கப்படும். அடிப்படையில் பிடிப்பு ஏற்பட்டுவிட்டால், அதற்குப் பின்னர் மொழியைக் கற்றுக்கொள்ள சனி, ஞாயிற்றுக்கிழமைகளில் வரலாம். சிறுவயதிலேயே கற்றுக் கொள்வதால், எளிதில் புரிந்துகொள்ள முடியும். வேலைவாய்ப்புகள் எப்படி?இப்போது சீனர்கள், பல நாடுகளிலும் ஏராளமான நிறுவனங்களை நிறுவி இருக்கிறார்கள். மருத்துவத் துறை, எண்ணெய் நிறுவனங்கள், மின்துறை என, பல உற்பத்தித் துறைகளில் சீனர்கள் முன்னணியில் உள்ளனர். அவர்களோடு இணைந்து வேலைசெய்ய, மாண்டரின் மொழி தெரிந்திருப்பது அவசியம். அது நம் வளர்ச்சிக்கு உதவுகிறது. மாண்டரின் தெரிந்திருந்தால், வேலைவாய்ப்பில் உங்களுக்கு நிச்சயம் முன்னுரிமை உண்டு.