சைபர் பாதுகாப்பு!
இணையதள உலகம் விசித்திரமானது. ஒரு பக்கம் எண்ணற்ற வசதிகள் இருந்தாலும், இன்னொரு பக்கம் தொல்லைகள் தரும் விஷயங்களும் இருக்கின்றன. இணையதளத்தில் நடக்கும் குற்றங்களைப் பற்றியும், பாதுகாப்பு நடவடிக்கைகள் பற்றியும், சென்னையில் அக்டோபர் முதல் வாரத்தில் நடந்த தேசிய சைபர் பாதுகாப்பு மாநாட்டில் விவாதிக்கப்பட்டன. 'நேஷனல் சைபர் சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி ஸ்டாண்டர்ட்ஸ்' (National Cyber Safety and Security Standards) எனும் அமைப்பு, மத்திய, மாநில அரசுகளின் ஆதரவுடன், அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் இந்த மாநாட்டை நடத்தியது.எதிர்காலத்தில் இணையதள ஆபத்துகள் தீவிரமாகாமல் தடுக்கவும், தற்காத்து கொள்ளும் உத்திகளையும் தொழில்நுட்ப வல்லுநர்கள் விளக்கினார்கள். சைபர் தாக்குதலால் நாடுகளுக்கு ஏற்படக்கூடிய பொருளாதார பாதிப்பு குறித்தும் விவாதம் நடந்தது.“சைபர் பாதுகாப்பு என்பது தொழில்நுட்பம் சார்ந்தது மட்டும் அல்ல; இணையதளம் பயன்படுத்தும் நமக்கும் தொடர்பு இருக்கிறது. நம்முடைய தினசரி வாழ்க்கையை எளிமையாக்க எல்லா வகையான நவீன தொழில்நுட்பங்கள் வந்தாலும், அவற்றைப் பயன்படுத்தும் நமக்கு, சரியான புரிதலும் விழிப்புணர்வும் இல்லை என்றால் எந்தப் பயனும் இல்லை,” இவ்வாறு அந்த மாநாட்டில் கலந்துகொண்ட வல்லுனர்கள் கூறினார்கள்.