உள்ளூர் செய்திகள்

வாசனையால் குண்டாகிறோமா?

அமெரிக்க பெர்க்லியிலுள்ள கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சி முடிவொன்று, நம் மூக்கின் முக்கியத்துவத்தை உணர்த்துவதாக அமைந்துள்ளது. பொதுவாக, உணவை நாவால் ருசி பார்ப்பதற்கு முன்னரே நம் கண்கள் அதன் அழகை ரசிக்கின்றன. எல்லாவற்றுக்கும் முன்னால், நம் நாசியே உணவை முதலில் கண்டு கொள்கிறது. மணம் பார்த்தே உப்பு அளவு வரை கண்டுபிடிக்கக் கூடிய நிபுணர்களும்கூட உண்டு. உண்மையில், நாம் உணவின் வாசனையை உணர்வதன் மூலமே குண்டாகிறோம் என்ற அதிர்ச்சித் தகவலை, சமீபத்திய ஆய்வொன்று வெளிப்படுத்துகிறது.இரண்டு எலிகளுக்கு ஒரே அளவான உணவைக் கொடுத்து வந்தனர் விஞ்ஞானிகள். இரண்டில் ஒரு எலிக்கு முகரும் திறன் இல்லை. முகரும் திறனில்லாத எலி ஒல்லியாகவே இருக்க, அதே அளவு உணவை உண்ட அதன் சகாவோ இருமடங்கு பெருத்து விட்டது. இதிலிருந்து, உணவின் அளவு மட்டுமல்ல; அதன் வாசனையும் எடை மாற்றத்தில் முக்கிய பங்கு வகிப்பது உறுதியாகியுள்ளது.ஆராய்ச்சியில் ஈடுபட்ட விஞ்ஞானிகளில் ஒருவரான ஆண்ட்ரூ (Andrew Dillin) ”உடலின் எடை என்பது உட்கொள்ளும் உணவின் கலோரி அளவைப் பொறுத்து மட்டுமே மாறுவதில்லை. மூளை பல்வேறு உணர்வுகளையும் கொண்டு அந்த உணவை எப்படி பயன்படுத்துவது என்று முடிவு செய்கிறது. அவற்றில் முகரும் திறன் முதன்மையானது என்பது, இந்த ஆய்வில் தெரிய வந்துள்ளது. இதைப் பயன்படுத்தி, மனித உடலின் வளர்சிதை மாற்றத்தைக் கட்டுப்படுத்தும் மருந்துகளைத் தயாரிக்க முடியும்” என்று நம்பிக்கை தெரிவிக்கிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !