வலி மிகுதல் பகுதி - 36 : விதிகளும் விதிவிலக்குகளும்
வலி மிகுதலில் எண்ணற்ற விதிகளும் இருக்கின்றன. விதிவிலக்குகளும் இருக்கின்றன. அவற்றில் சிலவற்றைப் பார்க்கலாம்.பல, சில என்னும் பெயர்ச்சொற்கள் பிறசொற்களோடு சேர்கையில் வலி மிகுவதில்லை. பல பழங்கள், சில காட்சிகள் என்று இயல்பாக வரும். அவற்றை அடுக்கிக் கூறுகையில் பலபல என்றும் கூறலாம். பலப்பல என்றும் கூறலாம். இரண்டும் சரியானவையே.வடமொழிச் சொற்கள் வருகையில் பெரும்பாலும் வலி மிகாமல் எழுதுகின்றனர். வடமொழிச் சொற்களைத் தமிழுக்கேற்ப வலி மிகுவித்து எழுதினாலும் தவறில்லை. தேச பக்தி என்பதில் பக்தி வடசொல். தேசம் என்பது தேயம் என்பதிலிருந்து தோன்றிய தமிழ்ச்சொல். இவ்விரண்டும் சேர்கையில் தேசப் பக்தி என்று எழுதுவதில்லை. தேச பக்தி என்றே எழுதுகின்றனர். வடமொழிச் சொற்கள் என்பதால், அவை தனித்து நிற்கின்றன. இத்தகைய இடங்களில் வலி மிகுமா, மிகாதா என்று முடிவெடுப்பதற்கு வடசொல்லறிவு கட்டாயம். படி என்றொரு விகுதி (ஒரு சொல்லின் பிற்பகுதி) இருக்கிறது. சுட்டு மற்றும் வினா எழுத்துகளோடு சேர்ந்து அப்படி, இப்படி, எப்படி என்று வரும். வினையெச்சங்களோடு சேர்ந்து சொன்னபடி, கூறியபடி என்று அமையும்.அப்படி, இப்படி, எப்படி என்னும்போது வருமொழி வல்லினம் என்றால், அங்கே கட்டாயம் வலி மிகும். அப்படிச் செய்தான், இப்படிப் பார்த்தான். வினையெச்சங்களோடு சேர்ந்து 'படி' என்று முடியும் சொற்களுக்கு வலி மிகாது. சொன்னபடி கேள். கூறியபடி செய்தான். கீழ் என்ற சொல் கிழக்கைக் குறிக்கும். அதற்கு வலி மிகுவித்தும் எழுதலாம். மிகு விக்காமலும் எழுதலாம். பதினெண்கீழ்க்கணக்கு, கீழ்கடல்.ஊர்ப்பெயரை அடுத்து வருமொழி வல்லினம் என்றால் கட்டாயம் ஒற்றெழுத்துப் போடவேண்டும். மதுரைத் தமிழ்ச் சங்கம், சென்னைக் கல்லூரி.அன்றி, இன்றி போன்ற சொற்களுக்கு கட்டாயம் வலி மிகும். அதுவன்றிக் கிடையாது, நானின்றிச் செல்லாதே. ஓரெழுத்து ஒருமொழி எனப்படுகிற பெயர்ச்சொற்களை அடுத்து கட்டாயம் வலி மிகும். பூப் பந்து, தீப் பிடித்தது. திரு, நடு, முழு, விழு, பொது, அணு ஆகிய முற்றியலுகரச் சொற்களை அடுத்து கட்டாயம் வலி மிகும். திருத்தேரில், நடுப்பகல், முழுப்பூசணி, விழுப்புரம், பொதுக்குழு, அணுக்குண்டு. நாம் அணுகுண்டு என்று எழுதுகிறோம். அது தவறு, அணுக்குண்டு என்றே எழுத வேண்டும். முன்னர், பின்னர் என்பதை அடுத்து கட்டாயம் வலி மிகும். முன்னர்க் கண்டான், பின்னர்க் கூறினான். முன்பு, பின்பு என்பதை அடுத்து வலி மிகாது. முன்பு செய்தது, பின்பு கேட்டது. ஏனென்றால், முன்பும் பின்பும் மென் தொடர்க் குற்றியலுகரங்கள். - மகுடேசுவரன்