சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்
நண்பர் ஒருவரை நெடுநாளைக்குப் பிறகு பார்க்கிறோம். 'எப்படி இருக்கீங்க? நலம்தானே? வீட்டில் எல்லாரும் நல்லாயிருக்காங்களா?' என்று விசாரிக்கிறோம்.அப்படிச் சந்திக்கும் நண்பர் ஓர் எழுத்தாளராக இருந்தால், இவற்றோடு இன்னொரு கேள்வியும் சேர்ந்துகொள்ளும், 'இப்ப என்ன எழுதிகிட்டிருக்கீங்க?'ஒருவேளை, அவர் எழுத்தாளராக இல்லை; ஆனால், எழுதக்கூடிய திறமையுள்ளவராக, எழுதுவதற்கான விஷயங்களை அறிந்தவராக இருக்கிறார் என்றால், அவரிடம் நாம் என்ன கேள்வி கேட்கவேண்டும்?அ. திருமலை முத்துசுவாமி என்றோர் அறிஞர், தமிழ் விரிவுரையாளர், நூலகத்துறையில் பல முக்கியப் பொறுப்புகளை வகித்தவர்.இவருடைய பேராசிரியரான டாக்டர் மு. வரதராசனாரும், இவருடைய நண்பரான தமிழ்ப் பேராசிரியர் வி.ஐ. சுப்பிரமணியமும் இவரைக் காணும்போதெல்லாம், 'ஏதாவது எழுதினாயா? அல்லது, எழுதுகிறாயா?' என்று கேட்பார்களாம். 'வெறுமனே பேசுவதில் பயனில்லை, ஏதாவது எழுது' என்று ஊக்குவிப்பார்களாம்.இந்தப் பெரியோர்களுடைய சொற்களைக் கேட்டுத் தூண்டப்பட்ட அ. திருமலை முத்துசுவாமிக்கு எழுத்துத் துறையில் ஆர்வம் பிறந்தது. தமிழ், ஆங்கிலம் ஆகிய இரு மொழிகளிலும் நூலகத்துறை, இலக்கியம் உள்ளிட்ட தலைப்புகளில் பல நூல்களை எழுதிக் குவித்தார். வாசகர்கள், அறிஞர்களுடைய பாராட்டுகளைப் பெற்றார்.'சுடர்விளக்காயினும் தூண்டுகோல் வேண்டும்' என்றொரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, அ. திருமலை முத்துசுவாமிக்குள்ளிருந்த எழுத்துத் திறமையை, இந்த எளிய கேள்வி வெளிக்கொண்டுவந்துவிட்டது. ஆங்கிலத்தில் 'Essays of Library Science', 'ABC of Library Science', தமிழில் 'நூல்நிலையம்', 'நூலக நாட்டில் நூற்றிருபது நாட்கள்', 'தமிழ்நாடும் மொழியும்' உள்ளிட்ட பல சிறந்த நூல்களை அவர் எழுதுவதற்குத் துணைபுரிந்தது.உங்களுடைய நண்பர்கள் எழுத்துத்திறமை மிக்கவர்களாக இருந்தால், நீங்களும் அவர்களிடம் இந்தக் கேள்விகளைக் கேட்கலாம். 'இப்போது என்ன எழுதிக்கொண்டிருக்கிறாய்? சமீபத்தில் என்ன எழுதினாய்? அடுத்து என்ன எழுதப்போகிறாய்?'கேட்பதற்கு எளிமையாகத் தோன்றும் இந்தக் கேள்விகள் பல பெரிய மாற்றங்களைத் தூண்டலாம். ஒருவேளை, அவர்கள் வேறு பணி அழுத்தங்களால் எழுதுவதைக் குறைத்துக் கொண்டிருக்கலாம். அல்லது, 'நாம் எழுதுவதை யார் படிக்கப்போகிறார்கள்?' என்ற எண்ணத்தில் இருக்கலாம். இந்த நேரத்தில் நம்மைப் போன்ற ஒருவர் அவர்களுடைய எழுத்தைப்பற்றி விசாரிக்கும்போது, அவர்களுக்குத் தங்கள் மீதே சிறு குற்ற உணர்ச்சி உண்டாகும். புத்துணர்ச்சியுடன் எழுத்தைத் தொடர்வார்கள்.எழுத்தாளர்கள், ஓவியர்கள், புகைப்படக்கலைஞர்கள், பிற படைப்பாளிகள் எல்லோரும் தங்களுடைய மன நிறைவுக்காகத்தான் படைக்கிறார்கள். அதேசமயம், பிறருடைய கவனிப்பும் அங்கீகாரமும் பாராட்டுகளும் அவர்களுக்கு ஊக்கத்தைத் தரும். இன்னும் சிறப்பான படைப்புகளை வழங்குவார்கள்.- என். சொக்கன்