உள்ளூர் செய்திகள்

மலர்களே மலர்களே - 15: பூக்களில் நிகழும் மாயம்!

அயல் மகரந்தச் சேர்க்கை முறை நடக்கும் தாவரங்களில், ஒரு மலரின் மகரந்தம் அதே மலரின் சூல் முடியில் பட்டு தன்கருவூட்டல் (Self Fertilisation) நடைபெறாமல் இருக்க, தாவரங்கள் பல்வேறு சாகசங்களைக் கையாள்கின்றன. தென்னை போன்ற ஒரில்லமுள்ள (Monoecious) தாவரங்களில் ஆண் பூ, பெண் பூ எனத் தனித்தனியாகப் பூக்கும். ஆண் பூவில் ஆணகமும் பெண் பூவில் பெண்ணகமும் மட்டுமே இருக்கும் என்பதால், தன்கருவூட்டல் நடைபெற முடியாது.இந்தத் தாவரங்களில் இயல்பாகவே அயல் மகரந்தச் சேர்க்கை நடைபெற்றுவிடும். ஈரில்லமுள்ள தாவரங்களில் (Dioecious) தாவரமே ஆண், பெண் என பால் பேதம் கொண்டு இருக்கும். பூக்கும் தாவரங்களில் சுமார் 6 சதவீதம் மட்டுமே ஈரில்லமுள்ள தாவரங்கள் உள்ளன. பனை மரத்தில் ஆண், பெண் என்று வேறுபாடு உண்டு. ஆண் பனை மரத்தில் ஆண் பூ, பெண் பனையில் பெண் பூ என தனித்தனியாகப் பூக்கும். தர்ப்பூசணி போன்ற சில தாவரங்களில், ஆண் பூ, பெண் பூ மற்றும் இரு பால் பூக்களும் ஒரே செடியில் இருக்கும். காய்பிடிக்கும் தன்மை இரு பால் அல்லது பெண் பூக்களுக்குத்தான் உண்டு. இருபால் உறுப்புகளும் ஒருங்கமைந்த மலர்கள்தான் (Hermaphrodite) தாவர உலகில் பெரும்பான்மை. சுமார் 80 சதவீத தாவரங்களில் இரு பால் மலர்கள் உள்ளன. இவற்றில் ஆணகமும் பெண்ணகமும் ஒரே பூவில் இருப்பதால், அதே பூவின் மகரந்தம் சூல்முடியில் ஒட்டி தன்கருவூட்டலை ஏற்படுத்தும் வாய்ப்பு கூடுகிறது. செண்பகப்பூ (Michelia Champaca/Magnolia Champaca) இரு பால் மலர்தான். முதலில் இதன் பெண்ணகப் பகுதிகள் முதிர்ச்சி அடையும். ஆணக உறுப்பு முதிர்ந்து மகரந்தம் வெளிப்படாது. குறிப்பிட்ட கால இடைவெளிக்குப் பிறகு, வேறு மலரின் மகரந்தம் வந்து சேர்ந்த பின்னர், மலரின் ஆணகப் பகுதி முதிருவுறும். இதன் தொடர்ச்சியாகத் தனது மகரந்தத்தால் தானே கருவூட்டல் வாய்ப்பு மிகுவாகக் குறைந்து போகிறது. இதற்கு நேர்மாறாக பூவரசு மலரில் முதலில் ஆணக உறுப்பு முதிர்வுறுகிறது. பின்னர் சிறிது காலதாமதமாக பெண்ணக உறுப்பு முதிர்வுறும். இவ்வாறு காலதாமதத்துடன் ஆணக, பெண்ணக பால் உறுப்புகள் முதிர்வதை இருகால முதிர்வு (Dichogamy) என்பார்கள். கம்பு, நெட்டிலிங்கம், மனோரஞ்சிதம் போன்றவற்றில், முதலில் பெண்ணகப் பகுதி முதிரும். ஓமம், சூரியகாந்தி முதலியவற்றில் ஆணகப் பகுதி முன்முதிர்ச்சி கொள்ளும். சில சமயம் ஒரு பூவின் தாது, அதே பூவின் சூல் முடியில் முளைக்காது. சில ஆர்கிடுகளில் அதே பூவின் மகரந்தம் வந்து சேர்ந்தால் சூல் முடி கருகிவிடும். இதுபோன்ற தன்மலட்டு (SelfSterile) தன்மை தாட்பூட்பழம் எனப்படும் பாஷன் பழத் தாவரமான பாசிப்ளோரா (Passiflora) முதலிய தாவரங்களிலும் உண்டு. சங்கம், பீசங்கு என பல பெயர்களில் அழைக்கப்படும் பீக்களாத்தி (Clerodendron Inerme) பூவில் ஐந்து மகரந்தக் கம்பிகளும் ஒரு சூல்தண்டும் உண்டு. ஒரு பூவில் மகரந்தக் கம்பி வளைந்து பூவின் வெளியே தலையை நீட்டினால், அதன் சூல்தண்டு நேராக இருக்கும். மற்ற பூவில் சூல்தண்டு வளைந்து வெளியே நீட்டிக்கொண்டு அமையும்போது, அதன் மகரந்தக் கம்பிகள் நேராக நிற்கும்.இருவேறு மலர்களின் மகரந்தமும் சூல்வித்தும் கலந்து உருவாகும் புதிய விதையில், இரண்டு தாவரங்களின் மரபணு வரிசை ஜோடியாக இருக்கும். ஒரு தாவரத்தின் மரபணு வரிசையில் பிழை இருந்தால் மாற்றத்தை வைத்து தாவரம் பிழைக்க முடியும். தன்கருவூட்டல் மட்டுமே நடைபெற்றால் குறுகிய வட்ட இனக்கலப்பு மட்டுமே நடைபெற்று 'உள்ளினச் சேர்க்கை' (Inbreeding)க்கு இட்டுச் செல்லும். ஒரே தாவரத்திலிருந்து ஜோடி மரபணு பெற்றிருந்தால் இரண்டும் பிழையாக அமைந்துவிடலாம். இதன் காரணமாக உள்ளினச் சேர்க்கை மட்டுமே நடைபெறும்போது, பல சமயம் குன்றிய மரபணுக்கள் தாவர வம்சத்தில் நிலைத்து விட முடியும். பிழைமிகுந்த மரபணுக்கள் காலப்போக்கில் பெருகிப் பெருகி அந்தத் தாவரங்கள் அருகும். தன்கருவூட்டல் பரிணாமத்தில் தாவர வம்சவிருத்திக்கு உகந்தது இல்லை. எனவே, இயற்கைத் தேர்வு தன்கருவூட்டலை தவிர்க்கும் ஏதாவது வழிமுறையை உருவாக்கிவிடுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !