ஓடி ஒளியும் பறவை
உடலில் கருமையான நிறத்தில் கோடுகளை உடைய பறவை. சாதாரண நாட்டுக் கோழிகளைப் போன்ற பருத்த உடல் அமைப்பைக் கொண்டவை. வயல்வெளிகளிலும், புதர் மண்டிய இடங்களிலும் காணப்படும். குழுக்களாக வசிக்கும். பெரும்பாலும் நிலப்பகுதியிலேயே நடமாடும். 100 மீட்டர் தூரத்துக்கு மேல் பறக்காது. மிக வேகமாக ஓடும் திறன் பெற்றவை. அபாயம் ஏற்பட்டாலும், ஓடி ஒளிந்தே தப்ப முயலும்; வேறு வழியில்லை என்றால் மட்டுமே பறக்கும். மனிதர்களைக் கண்டால் பயத்தில் ஓடி ஒளியும். அதிக உயரத்தில் பறக்காது. பறக்கும்போது, புறாக்களைப் போல படபடவென இறக்கைகள் அடிக்கும் சத்தம் கேட்கும். விதை, தானியம், பூச்சி, கரையான், வண்டு, புழு, எறும்புகள் போன்றவற்றை உண்ணும் அனைத்துண்ணி. 6 முதல் 8 முட்டைகள் இட்டு அடைகாக்கும். இரவில் கருவேல மரங்களில் ஓய்வெடுக்கும். கழுத்துப் பகுதிகளில் உள்ள வளையம் போன்ற அமைப்பு மற்றும் காலில் உள்ள கொம்பு போன்ற உறுப்பின் மூலம், ஆண், பெண் பறவைகளைப் பிரித்து அறிய முடியும். பிரத்யேக ஒலி சமிக்ஞைகள் மூலம், ஒன்றுடன் ஒன்று தொடர்புகொள்ளும். அடர்ந்த காட்டுப்பகுதியை இப்பறவைகள் விரும்புவதில்லை. அதேசமயம் மக்கள் அடர்த்தி குறைந்த பகுதிகளில், சிறு சிறு குழுக்களாக வசிக்கும். தமிழகத்தில் மதுரை, ராமநாதபுரம், விருதுநகர், சிவகங்கை, திருநெல்வேலி போன்ற மாவட்டங்களில் பரவலாகக் காணப்படுகின்றன. இவை, இறைச்சிக்காக அதிக அளவில் வேட்டையாடப்படுகின்றன. விவசாயத்தில் பூச்சிக்கொல்லி மருந்துகளின் உபயோகம், நகர மயமாக்கல் போன்றவற்றால் இது, அழிந்துவரும் பறவைகள் இனப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது.உயரம்: 34 செ.மீ.எடை: 350 கிராம்கவுதாரி (Grey Francolin - கிரே ஃபிரான்கோலின்)உயிரியல் பெயர்: ஃபிரான்கோலினஸ் ஃபிரான்கோலினஸ் (Francolinus Francolinus)- கி.சாந்தா