உள்ளூர் செய்திகள்

பறக்கும் பூச்சி ரோபோ ஆய்வாளர்கள் அசத்தல்!

வயர் இணைப்பின்றி பறக்கும் பூச்சி ரோபோ ஒன்றை விஞ்ஞானிகள் உருவாக்கி சாதனை படைத்துள்ளனர். மிகச்சிறியது முதல் ராட்சத அளவிலான ரோபோக்களை வெவ்வேறு பயன்பாடுகளுக்காக விஞ்ஞானிகள் உருவாக்கி வருகின்றனர். பெரிய டிரோன்களால் அணுக முடியாத இடத்தை, மிகச்சிறிய பறக்கும் ரோேபாக்களால் எளிதில் அணுக முடியும். எனவே, இவற்றை உருவாக்குவதில், விஞ்ஞானிகள் அதிக கவனம் செலுத்தி வருகின்றனர். சுமார் 100 மில்லி கிராம் எடைகொண்ட பறக்கும் பூச்சி ரோபோ ஒன்றை, வாஷிங்டன் பல்கலைக்கழக விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். இதன் சிறப்பம்சமே, இதற்கு வயர் இணைப்புக் கிடையாது என்பதுதான்.இதுதொடர்பாக, ஆய்வாளர் குழு உறுப்பினர் விக்ரம் கூறியதாவது: இறக்கைகளை அடிப்பது என்பது நிறைய மின்ஆற்றலை கோரக்கூடிய செயல். இதனால், புற மின்இணைப்பற்ற பறக்கும் ரோபோ என்பது இதுவரை கற்பனையான ஒன்றாகவே இருந்தது. தற்போது அது சாத்தியமாகியுள்ளது. இந்தப் பூச்சி ரோபோ லேசர் கற்றை உதவியுடன் இயங்குகிறது. லேசர் கற்றையை மின் ஆற்றலாக இந்த ரோபோ மாற்றிக்கொள்ளும். இதனால், எந்த வயர் இணைப்பும் தேவையில்லை.மைக்ரோ கன்ட்ரோலர் ஒன்றையும் பூச்சி ரோபோவுக்குள் பொருத்தியுள்ளோம். இதனால் ரோபோவால் சுயமாக இறக்கை அசைவுகள் குறித்து முடிவுசெய்ய முடியும். மைக்ரோ கன்ட்ரோலர், உயிருள்ள பூச்சியின் மூளையைப் போல் செயற்படும். இந்த ரோபோவால் ஏராளமான பயன்கள் உள்ளன. பரந்த வயல்வெளிகளில் உள்ள பயிர்களின் வளர்ச்சி அளவை, எளிதாகக் கண்காணிக்க முடியும். அதேபோல், இந்தப் பூச்சியைப் பறக்கவிட்டால், எங்கேனும் மீத்தேன் வாயுக்கசிவு உள்ளதா என்பதையும் கண்டுபிடித்துவிடும். இதற்கு 'ரோபோஃபிளை' (RoboFly) என்று பெயர் வைத்துள்ளோம். குறைந்த செலவில் இந்த ரோபோ உருவாக்கப்பட்டுள்ளது. இவ்வாறு விக்ரம் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !