உள்ளூர் செய்திகள்

சரித்திரம் பழகு: மாமல்லபுரத்தில் பல்லவ மன்னர்களின் சிற்பங்கள்

மாமல்லபுரத்தில் பொதுப்பணித் துறை சாலையில், பழமையான ஆதிவராகர் பெருமாள் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில், பல்லவ மன்னர் சிம்மவிஷ்ணு, அவர் மகன் மகேந்திரவர்மனின் புடைப்புச் சிற்பங்கள் உள்ளன. சிம்ம விஷ்ணு அமர்ந்த நிலையில், இரண்டு மனைவியருடன் உள்ளார். மகேந்திரவர்மன் நின்ற நிலையில் தம் மனைவியருடன் உள்ளார். அதிக ஆபரணங்கள் இல்லாமல், இரு மன்னர்களின் சிலைகளும் உள்ளன. அரசிகளின் கால்களில் சிலம்புகள் இருக்கின்றன. அரசர்களும், ராணிகளும் தலையில் கிரீடங்கள் அணிந்திருக்கிறார்கள்.பிரிட்டிஷ் காலத்தில் நில அளவியலாளராக (சர்வேயர்) இருந்த காலின் மெகன்சி (Colin Mackenzie), 1803இல் மாமல்லபுரம் சென்றார். மணல் மேடாகவும், புதர்களுக்குள்ளும் மறைந்துக் கிடந்த கட்டடங்கள், சிற்பங்களை அவர் கண்டறிந்தார். 'அக்கவுண்ட் ஆஃப் த ரூயின்ஸ் ஸ்கல்ப்சர்ஸ் அட் மகாவெலிபுரம் (Account of the Ruins & Sculptures at Mahavellypooram) என்னும் தலைப்பில், அங்குள்ள கோயில்கள், சிற்பங்களை ஓவியங்களாக வரைந்து, நூலாக்கினார். ஆதி வராகர் கோயிலில் இருக்கும் சிலைகள் மன்னர்களுடையது என்று அவர்தான் கண்டறிந்தார். இந்தக் கோயிலில் உள்ள கல்வெட்டுகளும் அதற்கு ஆதாரமாக இருந்துள்ளன. 1800களில் மாமல்லபுரம் மரங்கள் நிறைந்த, சிறு கிராமமாக இருந்துள்ளது. பனை ஓலையால் வேயப்பட்ட குடிசைகள் மட்டுமே அங்கு இருந்துள்ளன. 'இரண்டு ஓட்டு வீடுகளைத் தவிர, மற்ற வீடுகள் அனைத்தும் குடிசைகளாக இருந்தன' என்று மெகன்சியின் குறிப்புகள் தெரிவிக்கின்றன. மாமல்லபுரத்திற்குப் பெயர் வரக் காரணமாக இருந்த, மாமல்லன் என்ற நரசிம்ம வர்ம பல்லவனின் சிற்பம், பஞ்ச பாண்டவர் ரதங்கள் உள்ள, தர்ம ராசா மண்டபத்தில் இடம் பெற்றுள்ளது.அந்தச் சிலைக்கு மேலாக அவரின் பட்டப்பெயர்கள், பல்லவ கிரந்த எழுத்துகளில் ஸ்ரீமேகா, திரிலோக வர்த்தனா என்று குறிப்பிடப்பட்டுள்ளன. ஐந்து ரதங்களை அமைத்தவர் நரசிம்ம பல்லவன் தான். மாமல்லபுரத்தில் உள்ள சிற்பங்கள், கோயில்கள் ஏழு, எட்டாம் நூற்றாண்டுகளைச் சேர்ந்தவை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !