மனிதப் பல் மீன்
மனிதர்களுக்கு இருப்பதைப்போல பல் அமைப்பு உடைய ஆச்சரிய மீன் 'ஷீப்ஸ்ஹெட்' (Sheepshead). இதன் உயிரியல் பெயர் 'அர்கோசர்கஸ் புரோபாடோசெபாலஸ்' (Archosargus Probatocephalus). 'ஸ்பாரிடே' உயிரியல் குடும்பத்தைச் சேர்ந்தது. வட அமெரிக்கா கடல் பகுதிகளில் பரவலாகக் காணப்படுகிறது. நீள்வட்ட வடிவத்தில் தட்டையான உடலமைப்பு உடையது. கருப்பு, வெள்ளை வடிவத்தில் உடலில் கோடுகள் இருக்கும். செதில் பகுதி பசுமை கலந்த மஞ்சள் நிறத்தில் இருக்கும். சுமார் 2.5 அடி நீளம் வரை வளரும். எடை 10 கிலோ வரை இருக்கும். அனைத்துண்ணியான இது, சிறிய மீன்கள், கடல்வாழ் மிதவை உயிரினங்கள், பாசி போன்றவற்றை உண்ணும். மனிதர்களைப் போலவே இதற்கு பற்கள் இருப்பது ஆச்சரியமான விஷயம். வாயின் மேல் தாடை, கீழ் தாடைப் பகுதிகளில் தட்டையான பற்கள் போல வரிசையாக அமைந்திருக்கும். இதன் ஆயுட்காலம் 20 ஆண்டுகள். ஜனவரி முதல் மே மாதம் வரை இதன் இனப்பெருக்க காலம். ஒரே தடவையில் 1,000 முதல் 2,50,000 முட்டைகள் வரை இடக்கூடியது. பிறக்கும்போது குஞ்சுகள் 2.5 செ.மீ. அளவில் இருக்கும். ஆழம் குறைவான கடற்பகுதி, கழிமுகப் பகுதி, மாங்குரோவ் காடுகள் உள்ள பகுதி ஆகிய இடங்களில் இவற்றைக் காணலாம். கண்ணாடித் தொட்டிகளிலும் அழகுக்காக வளர்க்கப்படுகிறது. இறால் பிடிக்கும் வலைகளில் சிக்கிக்கொள்ளும் இவை உணவாகவும் பயன்படுத்தப்படுகிறது. பெரிய மீன்களாலும், சுறாக்களாலும் இவை வேட்டையாடப்படுகின்றன.- கி.சாந்தா