எங்கு அழைத்தாலும் விளையாடுவேன்!
டென்னிஸ் உலகில் நீண்ட காலம் பயணம் செய்த பயஸ், 2020இல் தான் ஓய்வு பெற உள்ளதாக அறிவித்துள்ளார். என்றாவது ஒரு நாள் அவர் ஓய்வு பெறுவார் என்பது புரிந்தாலும், விடைபெறும் நாள் தெரியும்போது கொஞ்சம் வருத்தமாகவே இருக்கும்.1990களில் இந்திய இளைஞர்களை வசப்படுத்தியவர்களில் பயஸும் ஒருவர். 16 வயதில் ஜப்பானுக்கு எதிரான டேவிஸ் கோப்பையில் இடம்பெற்று, கடினமான இரட்டையர் ஆட்டத்தில் வென்று அசத்தினார். இரட்டையர் ஆட்டங்களின் ஜாம்பவான் என்று இன்றைக்கு அடையாளம் காணப்படும் பயஸ், ஆரம்பத்தில் சிறந்த ஒற்றை வீரராகத்தான் டென்னிஸ் உலகுக்கு அறிமுகமானார். 1990இல் ஜூனியர் விம்பிள்டன் பட்டம் வென்றார். 17 வயதில் உலகின் நம்பர் 1 ஜூனியர் வீரர் ஆனார். 1996இல் அட்லாண்டா ஒலிம்பிக்ஸில் வெண்கலம் வென்றபோது சிலிர்த்துப் போனார்கள் இந்திய ரசிகர்கள். 44 ஆண்டுகளுக்குப் பிறகு, ஒலிம்பிக்ஸில் தனிநபர் பதக்கத்தைப் பெற்றது இந்தியா. இன்று வரை பயஸைத் தவிர வேறு எந்த டென்னிஸ் வீரராலும் ஒலிம்பிக்ஸில் பதக்கம் வென்று தர முடியவில்லை. அதுதான் பயஸுக்கும் இதர இந்திய டென்னிஸ் வீரர்களுக்கும் உள்ள வித்தியாசம்.சமீபத்தில் இந்திய வீரர்கள் பாகிஸ்தானுக்குச் சென்று, டேவிஸ் போட்டியில் விளையாட முடியாது என்று பின்வாங்கியபோது, “எங்கு அழைத்தாலும் சென்று விளையாடுவேன்” என்றார் பயஸ். இந்தியாவுக்காக டேவிஸ் போட்டியில் விளையாடும் வாய்ப்பை, யாருக்காகவும் எதற்காகவும் விட்டுக்கொடுக்க அவர் தயாராக இல்லை. அதனால் தான், டேவிஸ் கோப்பை வரலாற்றில் அதிக இரட்டையர் ஆட்டங்களில் வென்ற வீரர் (44) என்கிற உலக சாதனையைப் படைத்துள்ளார். மகேஷ் பூபதியுடன் இணைந்து விளையாடிய 27 டேவிஸ் கோப்பை இரட்டையர் ஆட்டங்களில் 25இல் வெற்றி கிடைத்தது.18 இரட்டையர் கிராண்ட் ஸ்லாம் பட்டங்களை வென்றுள்ளார் 46 வயது பயஸ். பயஸின் பெற்றோரும் இந்திய அணிக்காக விளையாடியவர்கள். இதனால் நாட்டுக்காக விளையாட வேண்டும் என்கிற கனவு அவருக்கு இயல்பாவே இருந்தது.ஓய்வுக்குப் பிறகும், அகாதெமி ஆரம்பித்து அடுத்த தலைமுறை வீரர்களை உருவாக்க வேண்டும் என்று சொல்லி, நம் மனத்தில் நீங்கா இடம் பிடிக்கிறார் லியாண்டர் பயஸ்.