நான் இப்படித்தான்!
குஷ்வந்த் சிங்காலம்: 2.2.1915 - 20.3.2014பிறந்த இடம்: ஹதாலி (தற்போது பாகிஸ்தான்)ஆளுமை: உலகப் புகழ்பெற்ற பத்திரிகையாளர், நாவலாசிரியர்அவர் தன்னுடைய முதல் நாவலை, 'மனோ மஜ்ரா' என்ற பெயரில் எழுதி முடித்த பிறகும், சில காரணங்களால் வெளி வராமல் இருந்தது. பின்னர் அதை 'இந்திய நாவலுக்கான போட்டி'க்கு அனுப்பி, முதல் பரிசை வென்றார். அந்த நாவலின் பெயரை 'பாகிஸ்தான் போகும் ரயில்' (Train to Pakistan) என மாற்றி வெளியிட்டார். இன்றும் அந்த நாவல் உலக அளவில் போற்றத்தக்க ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தியா - பாகிஸ்தான் பிரிவினையின்போது, எல்லையில் உள்ள ஒரு கிராமத்தில் முஸ்லிம்களும், இந்துக்களும், சீக்கியர்களும் எப்படிப் பழகுகிறார்கள் என்பதை அழகாக வடிவமைத்து இருப்பார் குஷ்வந்த சிங்.தன்னுடைய பள்ளிப் படிப்பை, புது டில்லி மாடர்ன் பள்ளியில் முடித்து, இளங்கலைப் படிப்பை லாகூர் அரசு கல்லூரியில் நிறைவு செய்தார். பிறகு லண்டன் கிங் கல்லூரியில் சட்டம் பயின்று, 1947ல் லாகூர் உயர் நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியை தொடங்கினார் குஷ்வந்த் சிங்.இந்தியாவின் அடித்தட்டு மக்கள், சமூகப் பொருளாதார விழிப்புணர்வு பெறுவதற்காக 1957ல் 'யோஜனா' (திட்டம்) என்ற மாத இதழைத் தொடங்கினார். தற்போது தமிழ், ஆங்கிலம் என பத்துக்கும் மேற்பட்ட மொழிகளில் வெளியாகிறது. அகில இந்திய வானொலியில் சிறிது காலம் பணியாற்றிய பிறகு, இல்லஸ்ட்ரேட்டட் வீக்லி, இந்துஸ்தான் டைம்ஸ், நேஷனல் ஹெரால்டு ஆகிய பத்திரிகைகளில் ஆசிரியராகப் பணியாற்றினார். இந்துஸ்தான் டைம்ஸ் பத்திரிகையில் இவரது 'வித் மாலிஸ் டுவார்ட்ஸ் ஒன் அண்ட் ஆல்' (With Malice towards One and All) கட்டுரைத் தொடர் மிகவும் பிரபலம். மாநிலங்களவை உறுப்பினராகவும் (1980 -- 1986) இருந்தார். தன் படைப்புகளின் வழியாக சமூகம், மதம், அரசியல் என, அனைத்து விஷயங்களிலும் வெளிப்படையான கருத்துகளை துணிச்சலாகவும் நகைச்சுவையாகவும் சொன்னார்.ஓர் எழுத்தாளராகவும், பத்திரிகையாளராகவும் மட்டுமல்லாமல், நகைச்சுவையாளராகவும் எல்லாரது கவனத்தையும் ஈர்த்தார். வாழ்வில் பல நெருக்கடியான சூழ்நிலைகளையும் புன்னகையால் வென்றார். விருதுகள்:1974 பத்ம பூஷன்2006 பஞ்சாப் ரத்தன்2007 பத்ம விபூஷன்2010 சாகித்ய அகாதமி விருது