சிங்கம் பல் தேய்க்குதா?
“நாம் ஏன் பல் தேய்க்க வேண்டும்? ஏன் குளிக்க வேண்டும்? சிங்கம் பல் தேய்க்கிறதா? ஒட்டகச் சிவிங்கி குளிக்கிறதா?” என்றான் பாலு. அப்பப்ப பாலு இந்த மாதிரி கேள்விகள் கேட்பான். முதல் பார்வையில் ரொம்ப லாஜிகலாகத் தெரியும். கொஞ்சம் அலசி ஆராய்ந்தால் நொறுங்கிப் போய்விடும். ஆனால், மனசில் எவ்வளவு முட்டாள்தனமான கேள்வி தோன்றினாலும், அதை அலசி ஆராய்ந்து பதில் கண்டுபிடித்துக் கொள்வது அவசியம் என்று ஞாநி மாமா சொல்லிக் கொண்டே இருப்பார்.விலங்குகள் நம்மை மாதிரி சாப்பிடுகின்றனவா என்று மாமா கேட்டார். நிச்சயம் இல்லை. இட்லி தோசை, சாம்பார் வடை, பாஸ்தா, பீட்சா, ஃபிரைட் சிக்கன் எல்லாம் அவை சாப்பிடுவதில்லை. “நமக்கும் விலங்குகளுக்கும் உள்ள முதல் வித்தியாசம், அவை சமைத்துச் சாப்பிடுவதில்லை. நாம் பெரும்பாலான உணவைச் சமைத்துச் சாப்பிடுகிறோம். நம் உணவில் நிறைய சர்க்கரைப் பொருட்கள் இருக்கின்றன. அவை பற்களை மழுங்கச் செய்யக் கூடியவை. நம் உணவுகளில் இருக்கக்கூடிய அமிலங்கள் பல், ஈறு எல்லாவற்றையும் பாதிக்கும். அதனால் பற்களில் தொற்று ஏற்படாமல் பாதுகாக்க, நாம் பற்களைத் தேய்க்க வேண்டியிருக்கிறது.” என்றார் மாமா.புலி, சிங்கம், மாடு போன்ற விலங்குகள் உணவை நீண்ட நேரம் கடித்து மென்று சாப்பிடுகின்றன. அதிலேயே அவற்றின் பற்கள் சுத்தமாகிவிடுகின்றன. வாயில் சுரக்கும் உமிழ்நீரே (சலைவா) வாயை சுத்தப்படுத்திவிடுகிறது. உமிழ்நீருக்குப் பல நுண்ணுயிரிகளைக் கொல்லும் சக்தி இருக்கிறது. விலங்குகள் காயம் பட்டால் அந்தக் காயத்தை நாக்கால் நக்கி சுத்தப்படுத்தும் பழக்கம் உடையவை. அவற்றின் உமிழ் நீர் பல பாக்டீரியாக்களுக்கு எதிரான ஆற்றல் உடையது. “நம்முடைய உமிழ்நீர்தான் நம் வாயையும் நிறைய நோய்கள் வராமல் பாதுகாக்கிறது.” என்று மாமா சொன்னதும், பாலு சொன்னான். “கீழே விழுந்து சின்னதா கீறல் ஏற்பட்டா, நான் உடனே எச்சிலை எடுத்து அது மேல வைப்பேன். அது ஒரு நல்ல ட்ரீட்மெண்டுன்னு இப்ப தெரியுது”. உடனே மாமா “ அதை விட நல்ல ட்ரீட்மெண்ட் டாக்டர் கிட்ட போய் காட்டி மருந்து போடறதுதான்.” என்றார்.விலங்குகள் பல் தேய்க்கத் தேவை இல்லாததற்கு இன்னொரு காரணமும் சொன்னார் மாமா. அவற்றின் ஆயுட்காலம் பற்களின் ஆயுட்காலத்தை விடக் குறைவு. அது தவிர ஒரு வாழ்நாளில் நாம் எத்தனை தடவை பற்களை மாற்றுகிறோம்? அல்லது புதுப் பல் முளைக்கிறது? பல விலங்குகளுக்கு அடிக்கடி புதுப் பல் முளைக்குமாம். குறிப்பாக, நிறைய பற்களைக் கடிக்கப் பயன்படுத்தும் முதலைகள், சுறாக்கள் ஆகியவற்றுக்கு அடிக்கடி புதுப் பல் முளைக்குமாம். கார்கார்ஹினாஃபோர்ம்ஸ் என்ற சுறா மீனுக்கு அதன் ஆயுட்காலத்தில் மொத்தமாக 35 ஆயிரம் பற்கள் முளைத்து விழுந்திருக்கும் என்றது வாலு.முதலைகளுக்கு வாழ்நாளில் மொத்தம் 40 முறை பற்கள் மாறியிருக்குமாம். எலிகளுக்கெல்லாம் பல் தேயத் தேய வளர்ந்துகொண்டே இருக்குமாம்.“நாம் பல் தேய்ப்பதிலிருந்து தப்பிக்க முடியாது. தேய்க்காவிட்டால் பற்கள் சொத்தையாகி பெரும் கஷ்டம் ஏற்படும். இதை மனிதர்கள் பல ஆயிரம் வருடங்கள் முன்னரே உணர்ந்துவிட்டார்கள். அதனால்தான் டூத் பிரஷ்ஷும், பற்பொடியும் சுமார் 5 ஆயிரம் வருடங்கள் முன்னரே வந்துவிட்டன.”என்றார் மாமா.“முதல் பிரஷ் எப்படி இருந்திருக்கும் ?” என்றான் பாலு. “முதல் பிரஷ் இன்றைக்கும் இருக்கிறது. வேப்பங்குச்சியும் ஆலங்குச்சியும்தான் முதல் பிரஷ். நவீன பிஷ்ஷை சீனர்கள்தான் சுமார் 4 ஆயிரம் வருடங்கள் முன்னால் உருவாக்கினார்கள். கைப்பிடிக்கு சின்ன எலும்புத்துண்டு, அதில் பன்றி ரோமங்களை இணைத்து பல் தேய்த்தார்கள். ஆனால் இவை பரவலான உபயோகத்துக்கு வரவில்லை. உப்பையோ கரியையோ ஒரு துணியில் தொட்டு அந்தத் துணியால் பல் துலக்கும் பழக்கம்தான் பரவலாக இருந்தது. சுமார் 250 வருடங்கள் முன்னால் இருந்துதான் இப்போது நாம் பார்க்கும் பிரஷ் முறை பரவலாயிற்று.”பற்பசை எப்போது வந்தது? “அதுவும் கூடவே வந்துவிட்டது. முதலில் அது பசை அல்ல. பொடிதான். கரி, சாம்பல், உப்புத்தூள் இவற்றிலிருந்துதான் பற்பொடி தயாரித்தார்கள். சுமார் 200 வருடத்துக்குள்தான் நாம் இப்போது உபயோகப்படுத்தும் பசைகள் உருவாக்கப்பட்டன.” என்றார் மாமா.பல் தேய்ப்பதைக் கொண்டாடக் கூட ஓர் உலக தினம் இருக்கிறது. நவம்பர் 1. அன்று இரு வேளை இரண்டு நிமிடம் முறையாகப் பல் தேய்க்கக் கற்றுக் கொடுப்பதை எல்லாரும் செய்ய வேண்டுமாம். “முறையாகத் தேய்ப்பது என்றால் என்ன?”“பெரும்பாலானவர்கள் தப்பாகத்தான் தேய்க்கிறோம். பற்களின் குறுக்காக தேய்க்கிறோம். நெடுக்காக தேய்ப்பதுதான் முறை. அப்போதுதான் சரியாக சுத்தமாகும். பல்லும் பாதிக்கப்படாது.” என்றார் மாமா.“எது எதுவோ மாணவர்களுக்கு இலவசமா கொடுக்கறாங்களே. ஆறு மாசத்துக்கு ஒரு தரம் ஒரு டூத் பிரஷ் கொடுக்கலாமே.” என்றான் பாலு. “அப்பறம் நீ பேஸ்ட்டும் இலவசமா கேப்பே. அரசாங்கம் திவாலாயிடும்”என்றார் மாமா.“நான் பெரியவளாகி அரசியலுக்கு வரும்போது ஒரு வீட்டுக்கு வேண்டிய எல்லாவற்றையும் இலவசமாகக் கொடுத்துவிடுவேன். அதே மாதிரி எல்லாரும் இலவசமாக நாட்டுக்கு வேலை செய்ய வேண்டும். சம்பளமே கிடையாது.” என்றேன். “இதைச் சொன்னா நீ தேர்தல்ல ஜெயிக்கற வாய்ப்பே இருக்காது” என்று சிரித்தார் மாமா. எல்லாரும் சிரித்தோம். வாலுபீடியா 1: பிரஷ்ஷுக்கு கைப்பிடி எதற்கு? ஆள்காட்டி விரல் முனையிலேயே செருகிக் கொண்டு பல் தேய்க்கிற மாதிரி தயாரித்தால் என்ன? என்று நூறு வருடங்களுக்கு முன்னர் யோசித்திருக்கிறார்கள். விரலில் செருகிக் கொள்வது போல ரப்பரில் பிரஷ் தயாரித்திருக்கிறார்கள்.வாலுபீடியா 2: டூத் பேஸ்டை டியூப்களில் அடைத்து விற்கலாம் என்ற ஐடியா, வண்ணங்களை டியூபில் அடைத்து விற்பதைப் பார்த்து உருவாக்கப்பட்டது. கிரேக்க மொழியில் கோல்யோ நோசஸ் என்றால் நோய் தடுப்பு என்று அர்த்தம். அதிலிருந்துதான் கோலினாஸ் என்று டூத் பேஸ்டுக்கு பெயர் வைக்கப்பட்டது.