ஓயாமல் விளையாடு
'வீதிக்குப் போகாத' என்று குழந்தைகளைப் பெற்றோர் கடிந்து கொண்ட காலம்போய், 'கொஞ்ச நேரமாவது வெளியில போய் விளையாடிட்டு வா' என்று கெஞ்ச வேண்டியதாக இருக்கிறது. அந்த அளவுக்கு, வீடியோ கேம், 'டிவி'களில் குழந்தைகள் முடங்கிப் போய்க் கிடக்கிறார்கள். வீடியோ கேம்களுக்கு அடிமையாகவே ஆகி விட்டவர்களும் உண்டு. ஓடியாடி விளையாடுவது குறைந்து விட்டது.சென்ற தலைமுறைக் குழந்தைகள் விளையாடிய பல விளையாட்டுகளின் பெயர்கள்கூட, இப்போதைய தலைமுறைக்குத் தெரிவதில்லை. சமயோசிதம், உடல் திறன், விட்டுக்கொடுக்கும் பாங்கு, குழு மனப்பான்மை, தலைமைப் பண்பு என பல்வேறு திறன்களை வளர்க்கும் பழங்கால விளையாட்டுகள் வழக்கொழிந்து வருகின்றன. அவற்றை, வரும் தலைமுறைக்காக ஒரு சிலர் ஆவணப்படுத்தி வருகின்றனர். அவர்களுள் புதுச்சேரியைச் சேர்ந்த வெங்கடேசனும் ஒருவர். கிராமப்புற விளையாட்டுகள் குறித்த தகவல்களையும், அது சார்ந்த புகைப்படங்களையும் பிளிக்கர் இணையதளத்தில் பதிவிட்டு வருகிறார் வெங்கடேசன். www.flickr.com/photos/vengatsiva/ என்ற இணைய முகவரியில், ஆடுகளம் என்ற பெயரில், கிராமப்புற விளையாட்டுகளைத் தொகுத்துள்ளார்.இந்தத் தளத்திலிருந்து சில விளையாட்டுகள்.நேர் பழம்இருவர் விளையாடலாம். தலா மூன்று வெவ்வேறு காய்கள் வைத்துக் கொள்ளலாம். ஒருவர், ஒரு காயை முதலில் வைக்க, மற்றவர் தனது காயை வைக்கலாம். மூன்று காய்களையும் வைத்த பிறகு, ஆளுக்கொரு முறை நகர்த்தி, மூன்று காய்களையும் ஒரே நேர்கோட்டில் கொண்டு வர வேண்டும். யார் முதலில் நேர் கோட்டில் கொண்டு வருகிறார்களோ, அவர்களே வெற்றி பெற்றவர்கள்.காக்கா கம்புகுரங்கு குச்சி என்ற பெயரும் உண்டு. 5-7 பேர் வரை விளையாடலாம். சுமார் ஒன்றரை அடி நீள குச்சிகள் ஒவ்வொருவருக்கும் தேவை. முதலில் குரங்காக (அவுட்டானவர்) ஒருவரைத் தேர்வு செய்ய வேண்டும். குரங்காக இருப்பவர், இரு கைகளையும் தலைக்கு மேல் உயர்த்தி, குச்சியை அதில் படுக்கை வசத்தில் வைக்க வேண்டும். அதைப் பிடித்துக் கொள்ளக் கூடாது. பின்புறத்தில் இருந்து ஒருவர், அந்தக் குச்சியை, தனது குச்சியால் சுண்டி தூரமாக வீச வேண்டும். மற்றவர்கள், தங்கள் குச்சியால், குரங்கின் குச்சியைத் தள்ளி வெகுதூரம் கொண்டு செல்லலாம். மற்ற ஆட்டக்காரர்கள், தங்களது குச்சியை தரையில் வைக்காமல், கல், மண்பானை ஓடு, கான்கிரீட் தரை போன்றவற்றில் வைத்துக் கொள்ளலாம். அப்படி வைத்திருக்காதபோது, குரங்கு வந்து தொட்டுவிட்டால் அவர்கள் அவுட். குரங்கை ஏமாற்றி, போக்குக்காட்டி, குச்சியைத் தூரமாகத் தள்ளிச் செல்வதுதான் விளையாட்டு. குரங்கு கவனமாக இருந்து, குச்சியின் அருகிலேயே காவல் காத்து, குச்சியை கல்லில் வைக்காமல் இருப்பவர்களை அவுட் செய்ய வேண்டும். அவுட் ஆனவர்கள் மறுபடியும் முதலில் இருந்து விளையாட வேண்டும். குச்சி எவ்வளவு தூரம் கொண்டு செல்லப்பட்டதோ, குரங்கு அங்கிருந்து நொண்டி அடித்தபடி வர வேண்டும்.பொய்க்கால் நடை!ஜாலியான விளையாட்டு. இரு கொட்டாங்கச்சி (தேங்காய்த்தொட்டி). அவற்றில் சிறு துளையிட்டு, கயிற்றை நுழைத்து, முனையில் முடிச்சுப் போட வேண்டும். கயிற்றின் மற்றொரு முனையைக் கையில் பிடித்துக் கொண்டு, கால் பெருவிரலுக்கும் அடுத்த விரலுக்கும் இடையில் கயிறு வரும்வகையில் கொட்டாங்குச்சி மீது ஏறி நடக்க வேண்டும். பொய்க்கால் குதிரையைப் போல, டக் டக் என ஒலியெழுப்பியபடி நடப்பது தனி சந்தோஷம்.கிட்டிப்புல்இந்த விளையாட்டுகள் தவிர, சில்லு விளையாட்டு, ஊதுமுத்து, காற்றாடி, கரணப்பந்து, காக்கா குஞ்சு, கெந்து கயிறு, இழுவண்டி, கிச்சுக் கிச்சு தாம்பலம் என ஏராளமான விளையாட்டுகள் இந்தத் தளத்தில் தொகுக்கப்பட்டுள்ளன. எப்படி விளையாடுவது என படித்துப் பார்த்து, விளையாடி ரசியுங்கள்.