சரித்திரம் பழகு: நேரம் காட்டும் கல்
வேலூரிலிருந்து பதினைந்து கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது, விரிஞ்சிபுரம் என்னும் ஊர். இருஞ்சுரம், விரிஞ்சுரம், கரபுரம், பிரம்மாஸ்திபுரி, மரகதபுரி என்னும் பெயர்களும் இவ்வூருக்கு உண்டு. இந்த ஊர் வழித்துணைநாதர் (மார்க்கபந்தீஸ்வரர்) கோயில் பிரகாரத்தில் மணி காட்டும் கல் ஒன்று உள்ளது. இந்தக் கல்லில் ஒன்று முதல் பன்னிரண்டு வரையிலான எண்கள் செதுக்கப்பட்டுள்ளன. எண்கள் இரண்டு பகுதிகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. இடது பக்கம் ஆறு முதல் பன்னிரண்டு வரையிலான எண்களும், வலது புறம் ஒன்று முதல் ஆறு வரையிலான எண்களும் எழுதப்பட்டுள்ளன. ஒரு பாகம் முற்பகலையும், மற்றொரு பாகம் பிற்பகலையும் காட்டுகின்றன. மணி காட்டும் கல்லின் மேற்பகுதியில் சிறிய குழி ஒன்று இருக்கிறது. அதன் மேல், சிறு குச்சியை வைத்தால், சூரிய ஒளியின் திசைக்கு ஏற்றவாறு, குச்சியின் நிழல் எண்களில் விழுகிறது. குச்சியின் நிழல் எந்த எண் மீது விழுகிறதோ, அதுதான் அப்போதைய மணி என்று அறிந்து கொள்ளலாம். படத்தில் ஒன்று காலை (8.50) நேரத்தையும், மற்றொன்று மதிய நேரத்தையும் (1.50) காட்டுகிறது.எந்த மன்னர்கள் காலத்தில் இந்த மணி காட்டும் கல் வைக்கப்பட்டது என்ற விவரம் தெரியவில்லை. கல்லில் உள்ள எழுத்துப் பொறிப்புகளை, அதன் அருமை புரியாமல் பெயின்ட் அடித்து மறைத்து இருக்கிறார்கள்.விரிஞ்சிபுரம், சம்புவராய மன்னர்களின் முக்கிய நகரங்களில் ஒன்றாக இருந்தது. பொ.யு. 1365ஆம் ஆண்டு விஜய நகர மன்னர், குமார கம்பணர் படையுடன் தமிழகத்தை நோக்கி வந்தார். பாலாற்றைக் கடந்து, விரிஞ்சிபுரம், படைவீடு ஆகிய பகுதிகளை முற்றுகையிட்டார். சம்புவராயர்கள் இந்த இரண்டு ஊர்களிலும் குமார கம்பணரை எதிர்த்துப் போரிட்டனர்.1646ஆம் ஆண்டு, ஸ்ரீரங்கர் என்ற விஜயநகர மன்னரின் ஆட்சி தமிழகத்தில் இருந்தது. பீஜப்பூர் சுல்தான் படை, அவரை விரிஞ்சிபுரத்தில் தோற்கடித்தது. பாலாற்றங்கரையில் விரிஞ்சிபுரம் இருப்பதால், அது வடக்கில் இருந்து வரும் படையெடுப்பாளர்களுக்கு, வாயிலாக அமைந்து, பல போர்களைச் சந்தித்து உள்ளது.