உள்ளூர் செய்திகள்

இதன் பெருமையை கத்தி சொல்வோம்!

மனிதர்களுடைய கண்டுபிடிப்புகளில் எது முக்கியமானது? சக்கரம், நீராவி இயந்திரம், கணினி என அடுக்கிக் கொண்டே போகலாம். ஆனாலும், இந்த வரிசையில் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பை நாம் மறந்துவிடுகிறோம். இக்கருவி இல்லாது போனால், நாம் பிழைத்திருக்கவே முடியாது என்று சொல்லுமளவுக்கு முக்கியமான கண்டுபிடிப்பாக அமைந்ததுதான் கத்தி.ஆதி மனிதன் தான் உயிர் வாழ, வேட்டையாட வேண்டிய கட்டாயத்தில் இருந்தான். அதற்காக கத்தி போன்ற வெட்டுக் கருவிகளைக் கண்டுபிடித்தான். அதனால் உணவுச் சங்கிலியின் உச்சியை அடைய முடிந்தது. கத்திகள் இல்லாமல் இருந்திருந்தால், வேட்டையாடவோ, மீன் பிடிக்கவோ, உணவு சேகரிக்கவோ முடிந்திருக்காது. அதேபோல், இந்தக் கூர்மையான முனைகள்தான் அவர்களைத் தற்காத்துக் கொள்ள உதவியிருக்கின்றன. அதனால்தான் மனித நாகரிக வளர்ச்சியின் முக்கிய பொருளாக இன்றும் பார்க்கப்படுகிறது.கத்தி, 26 லட்சம் ஆண்டுகள் பழமையானது என தொல்லியல் ஆய்வாளர்கள் சொல்கின்றனர். 'ஹோமோ சேப்பியன்ஸ்' (Homo sapiens) காலத்துக்கு முன்னரே இக்கருவி, புழக்கத்தில் இருந்துள்ளது.கற்காலத்தில், கற்களின் முனையைக் கூர்மையாக்கி பல்வேறு வடிவங்களில், அளவுகளில் கத்திகளைத் தயாரித்துள்ளனர். மரக் கட்டைகள், எலும்புகளாலும் கத்திகள் செய்யப்பட்டன. புதிய கற்காலத்தில் உலோகங்களின் கண்டுபிடிப்புக்குப் பிறகு தாமிரம், பித்தளை, இரும்பு, ஸ்டீல், செராமிக் மற்றும் டைட்டானியம் போன்றவற்றால் கத்திகள் செய்யப்பட்டன.சமையலறையில் பயன்படும் கத்திகளுக்கு அவற்றின் பயன்பாட்டுக்கு ஏற்ப சமையல்காரரின் கத்தி, ரொட்டிக் கத்தி, வெண்ணெய்க் கத்தி, கசாப்புக் கத்தி என, பல பெயர்கள் உண்டு. பொருட்களின் கடினத்தன்மைக்கு ஏற்றவாறு அவற்றின் கூர்மை இருக்கும்.கத்தி பயன்படுத்தத் தடை!கத்திகளில், மேஜை கத்தி என்ற வகை பிரான்ஸ் நாட்டில் பிரபலம். ஆனால், இந்த கத்தி மிகவும் கூர்மையாக இருந்ததால், பலருக்கும் காயங்கள் ஏற்பட்டன. ஆகவே, 1669ஆம் ஆண்டு 14ஆம் லூயி மன்னர் மேஜைகளில் கூர்மையான கத்திகள் பயன்படுத்தத் தடை விதித்தார். அவற்றுக்கு மாற்றாக பட்டையான, கூர் மழுங்கிய கத்திகள் புழக்கத்துக்கு வந்தன. அதேபோல், 20ஆம் நூற்றாண்டில்தான் துருப்பிடிக்காத எஃகு கத்திகள் உருவாயின.- மாதப்பன்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !