ஒராங்குட்டானைக் காப்பாற்றுவோம்!
ஆகஸ்ட் 19ஆம் தேதி, உலக ஒராங்குட்டான் தினம். மனிதக் குரங்கு இனங்களில் ஒன்று ஒராங்குட்டான். ஆசியாவைத் தாயகமாகக் கொண்டது. இந்தோனேஷியா, மலேசியா ஆகிய இடங்களில் தோன்றியது. எனினும் தற்போது இந்தோனேஷியாவின் சுமத்திரா மற்றும் போர்னியா ஆகிய இரண்டு தீவுப்பகுதிகளில் மட்டுமே காணப்படுகிறது. ஒராங்குட்டான் வெப்ப மண்டலக்காடுகளில் வாழும். தற்போது, பணப்பயிர்களுக்காகவும், அணை கட்டுவதற்காகவும், வேறு சில வளர்ச்சிப் பணிகளுக்காகவும் காடுகள் அழிக்கப்பட்டு வருகின்றன. ஆகையால், ஒராங்குட்டான் வாழிடம் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி வருகிறது. ஏனெனில், மரங்களை மட்டுமே நம்பி வாழும் இனம் இது. ஒராங்குட்டான் அழிந்துவரும் உயிரினங்களின் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ளது. பலர், ஒராங்குட்டானின் புத்திசாலித்தனத்தால் ஈர்க்கப்பட்டு அதை செல்லப்பிராணிகளாக வளர்க்க விரும்புகின்றனர். அதற்காக காடுகளில் இருந்து சட்டவிரோதமாக ஒராங்குட்டான்களை கடத்தி விற்பனை செய்கின்றனர். இதனைத் தடுக்கவும், அழிந்துவரும் இனத்தைப் பாதுகாக்கவும், இதற்கான விழிப்புணர்வு நாள் கொண்டுவர வேண்டும் என உலக வனவிலங்கு அமைப்புகள் கோரிக்கை விடுத்தன.ஒராங்குட்டான் இனத்தைக் காப்பாற்ற உலக அளவில் பல முயற்சிகள் எடுக்கப்பட்டு வருகின்றன.இந்த விழிப்புணர்வு நாளில், ஒராங்குட்டான் பற்றிய குறும்படங்கள், அவற்றின் வாழ்க்கை முறையை அறிவது, வனவிலங்கு சரணாலயங்களில் ஒராங்குட்டான்களைப் பார்வையிடுவது போன்றவற்றை மாணவர்கள் ஆசிரியர்களின் உதவியோடு செய்யலாம்.