வெங்கியை கேளுங்க!
மாணவர்களின் கேள்விகளுக்கு பதிலளிக்கிறார் த.வி. வெங்கடேஸ்வரன், மத்திய அரசு விஞ்ஞானி1. நீரில் நனைந்த பருத்தித் துணியைவிட, வெயிலில் காய்ந்த பருத்தித் துணி எளிதில் கிழிவது ஏன்?அ.கணேஷ்குமார், 10ஆம் வகுப்பு, தூய இருதய மத்தியப் பள்ளி, விழுப்புரம்.உலர்ந்த பருத்தியைவிட நீரில் நனைந்த பருத்தித் துணி சற்றே கூடுதல் வலுவோடு இருக்கும். சோதித்துப் பார்ப்போமா? ஒரே பருத்தி நூலை இரண்டு சம நீளமுள்ள துண்டுகளாக வெட்டுங்கள். ஒன்றை மட்டும் நீரில் ஊற வையுங்கள். இரண்டு நூலையும் ஏதாவது கம்பியில் செங்குத்தாகக் கட்டுங்கள். இரண்டு நூலின் முனையிலும் 10 கிராம், 20 கிராம் என எடையைக் கூட்டி சோதனை செய்யவும். உலர்ந்த நூல் தாங்கும் எடையைவிடக் கூடுதல் எடையை நீரில் நனைந்த நூல் தாங்கும். இதை நீட்சிச்சோதனை (Tensile test) என்கிறார்கள். முழுமையான அறிவியல் விளக்கமாக இதனை ஏற்கமுடியாத நிலையில், இதுகுறித்த யூகங்களை அறிவியலாளர்கள் முன்வைக்கின்றனர். நூல் இழையைச் சற்றே வலுவோடு இரண்டு பக்கமும் பிடித்து இழுத்தால் அறுந்துவிடும். ஆனால், இரண்டு மூன்று இழைகளைத் திரித்து இழுத்தால் எளிதில் அறுபடாது. ஏனெனில் இழைகளுக்கு இடையே உள்ள உராய்வு விசை காரணமாகக் கூடுதல் வலிமை கிடைக்கிறது. உருப்பெருக்கி கொண்டு பருத்தி இழையைப் பார்த்தால், செல்லுலோஸ் நுண் இழைகளை ஒன்றுடன் ஒன்று திரித்தே பருத்தி இழைகள் உருவாக்கப்பட்டுள்ளன என்பது தெரியும். திரிக்கப்பட்ட நூல்களினால் பருத்தி ஆடை நெசவு செய்வதாலேயே அது எளிதில் கிழிவதில்லை. மேலும் அந்த நூல் நனையும்போது நீரினால் மேலும் உராய்வு விசை கூடும். எனவே, நீரில் நனைந்த பருத்தித் துணி எளிதில் கிழியாது என்கிறார்கள்.2. மனிதர்களைப் போல் விலங்குகள், பறவைகளுக்கும் பல்வேறு வகையான இரத்த வகைகள் உள்ளனவா?வீ.என்.ரஞ்சனி, 11ஆம் வகுப்பு, அண்ணா ஜெம் அறிவியல் பூங்கா பள்ளி, சென்னை.மனித இரத்த அணுக்களில் ஏ,பி (A, B,) மற்றும் ஓ (O) என மூன்று வகை வெளிப்புரதங்கள் (ஆன்டிஜென்ஸ் - Antigens) உள்ளன. அதே போல Rh (Rhesus) காரணி இருப்பவர்கள் மற்றும் இல்லாதவர்கள் என இரண்டு வகையினர் உள்ளனர். எனவே, A, B, AB, O பிரிவுகளில் பாசிடிவ் மற்றும் நெகடிவ் என எட்டு மனித இரத்த வகைகள் உள்ளன. நாய்களில், DEA 1.1, 1.2, 3, 4, 5, 6, 7 என வெளிப்புரதங்கள் உள்ளன. இங்கும் Rh காரணி பாசிடிவ், நெகடிவ் என்று உள்ளது. எனினும் குறிப்பிட்ட நாய் ஜாதியில் எல்லா நாய்களுக்கும் ஒரே வகை இரத்தமே இருக்கும். பூனைகளுக்கு இரண்டு இரத்த வகைகள். இதனையும் A, B வெளிப்புரதங்கள் என குறிப்பிட்டாலும் இவை மனிதனுடைய A, B வெளிப்புரதங்கள் போல் இல்லை. சுமார் 90 சதவீத பூனைகள் A வகை இரத்தம் கொண்டுள்ளன. B வகை அரிது. AB சாத்தியம் என்றாலும் மிகமிக அரிது.பசுக்களில், A, B, C, F, J, L, M, R, S, T மற்றும் Z எனும் 11 முக்கிய இரத்த வகைகள் இருக்கின்றன. இதில் B வகை இரத்தத்தில் மட்டுமே 60 வெவ்வேறு வகை வெளிப்புரதங்கள் உள்ளன. இதனால், பசுக்களுக்கு இரத்த மாற்று செய்வது கடினம்.3. பிளாஸ்டிக் மூலம் எரிபொருள் தயாரிக்கலாம் என்பது உண்மையா?கா.ச.பிரக்யா, 10ஆம் வகுப்பு, வேலம்மாள் போதி வளாகம், தேனி.பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு போன்ற எரிபொருட்கள் எல்லாம் ஹைட்ரோகார்பன்களே. பிளாஸ்டிக் என்பது ஒருவகை ஆர்கானிக் பாலிமர் எனப்படும் கரிம கூட்டுத் தொகுப்பான கரிமப் பலபடி ஆகும். கார்பன் அணுவுடன் ஆக்சிஜன், கந்தகம், நைட்ரஜன் முதலிய அணுக்கள் பிணைந்து உருவான ஒருவகைப் பலபடி பாலிமர்தான் பிளாஸ்டிக்.இந்தப் பிளாஸ்டிக் பொருளை ஆக்சிஜன் இல்லாத இடத்தில் வெப்பச் சிதைவு செய்தால், இவை மீத்தேன் போன்ற சிறுசிறு ஹைட்ரோகார்பன் மூலக்கூறுகளாக மாறும். இவற்றை எரிபொருளாகப் பயன்படுத்தலாம். ஆனால், ஒரு சிக்கல் உள்ளது. இவ்வாறு வெப்பச் சிதைவை நிகழ்த்தும்போது, சில நச்சு வாயுக்கள் உருவாகும் என்பதால், அதையும் கவனத்துடன் கையாள வேண்டும்.4. கண்ணாடி தயாரிப்பதற்கான மூலப்பொருட்கள் என்னென்ன?ஆர்.வி.சாய் அரவிந்த், 8ஆம் வகுப்பு, செய்யது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.கண்ணாடி உற்பத்தி செய்வதற்கான அடிப்படைப் பொருள், மண். மாசற்ற தூய வெள்ளை நிறத்தில் கண்ணாடி வேண்டுமெனில், சிலிக்கா எனும் சிறப்பு மண்ணைப் பயன்படுத்த வேண்டும். சுண்ணாம்புக்கல் மற்றும் சோடா சாம்பலும் கண்ணாடி தயாரிப்புக்குத் தேவையான முக்கிய மூலப்பொருட்கள் ஆகும். பல்வேறு உலோக ஆக்சைடுகளைச் சிறிதளவு கலந்தால் பல்வேறு வண்ணக் கண்ணாடிகளை உருவாக்கலாம்.