உள்ளூர் செய்திகள்

ஞாநி எழுதும் மாலுவின் டயரி (15) - மார்கோனியின் மர்ம நகரம்

பாலு ஒரு புதிய கொசுவலை கொண்டு வந்திருந்தான். உலக மலேரியா தினத்தையொட்டி இனிமேல் கொசுவலை கட்டிக் கொண்டுதான் படுப்பேன் என்று அறிவித்தான். முசிறியிலிருந்து ரமேஷ்பாபு மாமா கொசுவலையை அனுப்பியிருக்கிறார். கொசுவைக்கொல்ல மருந்து பூசப்பட்ட கொசுவலையாம். இந்த மாதிரி கொசுவலைகளை ஆப்ரிக்கா முழுவதும் உலக சுகாதார நிறுவனம் விநியோகித்து வருகிறது. இதன் மூலம், பல லட்சக்கணக்கான குழந்தைகளுக்கு மலேரியா வராமல் தடுக்க முடிந்திருக்கிறதாம்!“நான் சயின்ட்டிஸ்ட் ஆனதும் மலேரியா கொசு உற்பத்தி ஆகாமலே தடுக்க ஏதாவது வழியைக் கண்டுபிடித்தே தீருவேன்” என்றான் பாலு. அவன் இப்படி ஆராய்ச்சி செய்து தீர்க்கவேண்டிய லிஸ்ட் நாளுக்கு நாள் பெரிதாகிக் கொண்டே போகிறது. “ஆனால் நிம்மதியாக கொசுத்தொல்லை இல்லாமல் ஆராய்ச்சி செய்ய முதலில் ஒரு இடம் வேண்டும். ஹிட்லர், பிரபாகரன் எல்லாரும் பூமிக்கடியில் ரகசிய இடம் வைத்திருந்த மாதிரி நானும் ஒன்றை முதலில் கட்டவேண்டும்” என்றான் பாலு.''மார்கோனியின் ரகசிய நகரம் மாதிரியா'' என்று கேட்டார் ஞாநி மாமா. ''மார்கோனியை எனக்கு ரேடியோவைக் கண்டுபிடித்த விஞ்ஞானி என்று மட்டும்தான் தெரியும். ரகசிய நகரம் பற்றி தெரியாதே'' என்றேன்.“கம்பியில்லாமல் அலைகள் மூலம் சிக்னல் அனுப்புவதைக் கண்டுபிடிப்பதை ஏறத்தாழ ஒரே சமயத்தில் உலகத்தில் பல பேர் கண்டுபிடித்தார்கள். இந்தியாவின் ஜகதீஷ் சந்திர போஸ் 1894லிலேயே நுண்ணலையைப் பயன்படுத்தி ரிமோட்டாக ஒரு மணியை அடிக்கச் செய்து காட்டியிருக்கிறார். ஆனால், மார்கோனிதான் தகவல் தொடர்புக்குக் கம்பியில்லாமல் மின் காந்த அலையைப் பயன்படுத்துவதை நடைமுறைக்குக் கொண்டு வந்தவர். அதனால்தான் அவருக்கு 35 வயதிலேயே நோபல் பரிசு கிடைத்தது.” என்றார் மாமா.மார்கோனி இத்தாலிக்காரர். ஆனால் அவரது கண்டுபிடிப்புகளை முதலில் ஊக்குவித்தது பிரிட்டன்தான். அங்கே தபால் தந்தி துறையும் பி.பி.சி. வானொலியும் அவரது சாதனங்களை நடைமுறைக்குக் கொண்டு வந்துவிட்டார்கள். டைட்டானிக் கப்பல் மூழ்கியபோது அதில் இருந்த 700 பயணிகளையும் உடனடியாகக் காப்பாற்ற முடிந்ததற்குக் காரணம் மார்கோனியின் சாதனங்கள்தான். அவற்றின் மூலம்தான் மீதி கப்பல்களுக்கு செய்தி அனுப்பி உதவி பெற முடிந்திருக்கிறது. விபத்துக்குள்ளான அந்த டைட்டானிக் கப்பலில் மார்கோனியும் பயணம் செய்திருக்க வேண்டியவர். ஆனால், வேறு வேலை இருந்ததால் மூன்று நாள் முன்னதாக வேறு கப்பலில் போய்விட்டார்.பெரும் பணக்காரரான மார்கோனி தானே சொந்தமாக ஒரு கப்பல் வைத்திருந்திருக்கிறார். 'எலெக்ட்ரா' என்று அதற்குப் பெயர். அது சொகுசுக் கப்பல் இல்லை. ஆராய்ச்சிக் கப்பல். உலகத்தின் ஏழு பெரிய கடல்களுக்கும் சென்று வெவ்வேறு இடங்களில் எப்படி 'ரேடியோ வேவ்ஸ்' செயல்படுகின்றன என்று ஆராய்ச்சி செய்ய அதைப் பயன்படுத்தியிருக்கிறார்.ரகசிய நகரம் எப்போது கட்டினார்?“மார்கோனி 1937ல் காலமானார். ஆனால் உண்மையில் அவர் அப்போது சாகவில்லை என்றும் செத்ததாகப் பொய்யாகப் பாவனை செய்து ஏமாற்றிவிட்டு ரகசியமாக தப்பிப் போய்விட்டதாகவும் சிலர் சொல்கிறார்கள். அவரும் அவரது விஞ்ஞானி நண்பர்களுமாக தென் அமெரிக்காவில் வெனிசுலாவில் ஒரு பழைய எரிமலைக்குக் கீழே பூமிக்கடியில் ஒரு குட்டி நகரத்தையேக் கட்டியிருந்தார்களாம். அங்கே போய் ஆராய்ச்சி செய்ய மார்கோனி போய்விட்டார் என்கிறார்கள்” என்றார் மாமா.என்ன ஆராய்ச்சி? “ஈர்ப்பு சக்திக்கு எதிராக இயங்கக்கூடிய விமானங்களைக் கண்டுபிடித்து அவற்றைப் பயன்படுத்தி செவ்வாய், சந்திரன் ஆகிய கிரகங்களுக்கு எல்லாம் போய் வருவது, சூரிய சக்தியைப் பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பது போன்ற ஆராய்ச்சிகளை அங்கே செய்தார்கள் என்று சொல்லப்பட்டது”இதற்கெல்லாம் ஏதாவது ஆதாரம் உண்டா? அந்த நகரத்தைக் கண்டுபிடித்தார்களா? “மார்கோனியின் மாணவராக இருந்த ஜெனோவிஸ் என்பவர் தான் அந்த நகரத்தில் சிறிது காலம் வசித்ததாகச் சொல்லி ஒரு புத்தகம் எழுதியிருக்கிறார். வேறு ஆதாரம் இல்லை. அந்த நகரத்தை யாரும் இதுவரை கண்டுபிடிக்கவும் இல்லை. அந்த நகரம் இருந்ததாக சொல்லப்படுகிற இடத்தில் மனிதர்களே நுழைய முடியாத அடர்ந்த காடுகளும் மலையும் இருக்கின்றன”என்றார் மாமா.கண்ணுக்குத் தெரியாத 'வைஃபை'யைக் கண்டுபிடித்தவரின் மர்ம நகரமும் நம் கண்ணுக்குத் தெரியாது போலிருக்கிறது! ஆனால் இந்தக் கதை சுவாரஸ்யமாகத்தான் இருக்கிறது.“மார்கோனியின் மர்ம நகரம் உண்மையோ பொய்யோ. ஆனால், அவர் கடைசி நாட்களில் வித்தியாசமான ரிமோட் ஆயுதத்தைக் கண்டுபிடித்ததற்கு ஆதாரம் இருக்கிறது. தெருவில் ஓடிக் கொண்டிருக்கும் எல்லா கார்களிலும் இருக்கும் மின் அலைகளை சில நிமிடம் நிறுத்தி வைக்கக்கூடிய ரிமோட் கருவியை அவர் கண்டுபிடித்து சர்வாதிகாரி முசோலினிக்குச் செய்து காட்டியிருக்கிறார்.” என்றார் மாமா.''முசோலினிக்கா?'' “ஆம். மார்கோனி முசோலினியின் கட்சியில்தான் இருந்தார். அவரது ஆதரவாளரும் கூட. மார்கோனி இறந்தபோது முசோலினியின் அரசாங்கம் அவருக்கு ராணுவ மரியாதை அளித்தது.” எப்படி ஒரு விஞ்ஞானி சர்வாதிகாரியின் ஆதரவாளராக இருக்க முடியும்?“நிறைய விஞ்ஞானிகள், மருத்துவர்கள் ஹிட்லருக்கு ஆதரவாக வேலை செய்திருக்கிறார்கள். பல நாடுகளில் விஞ்ஞானிகள் அந்த நாட்டுச் சர்வாதிகாரிகளுக்கு ஆதரவாக இருந்திருக்கிறார்கள். சிலருக்குக் காரணம் பயம். சிலருக்குத் தங்கள் ஆராய்ச்சிக்கு போதுமான ஆதரவு கிடைத்தால் போதும் என்ற கருத்து. பலருக்குச் சர்வாதிகாரிகளின் தேசபக்தி மீது பக்தி”“கொசுவை ஒழிக்க எனக்கு யார் உதவி செய்தாலும் அந்த சர்வாதிகாரியை ஆதரிப்பேன்” என்று அறிவித்திருக்கிறான் இளம் விஞ்ஞானி பாலு!“ஹிட்லர் போன்ற சர்வாதிகாரிகள் மலேரியா கொசுவை வளர்த்து எதிரி நாட்டு மக்கள் மீது அனுப்பமுடியுமா என்றுதான் ஆராய்ச்சி செய்திருக்கிறார்கள். கொசுவை ஒழிப்பதற்கு அல்ல!” என்கிறார் ஞாநி மாமா.வாலுபீடியா 1: மலேரியா என்றால் 'கெட்ட காற்று' என்று அர்த்தம். இன்னும் மலேரியாவுக்கு எந்தத் தடுப்பூசியும் கண்டுபிடிக்கப்படவில்லை.வாலுபீடியா 2: மார்கோனி இறந்தபோது உலகம் முழுவதும் எல்லா கப்பல்களிலும் ரேடியோக்களை இரண்டு நிமிடம் நிறுத்தி அஞ்சலி செலுத்தினார்கள். பி.பி.சி. வானொலி ஒலிபரப்பும் இரண்டு நிமிடம் நிறுத்தப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !