கணித மேதை மரியம்
மரியமிற்கு இரண்டு சகோதரர்கள். சிறு வயதில், மரியமின் பெரிய அண்ணன், அறிவியல் பாடங்களைப் பற்றி வீட்டில் பேசுவார். இதனால், அவருக்கு அறிவியல் பிடித்துப்போனது. ஈரான் அரசாங்கம், தனிப்பெரும் திறன் படைத்த மாணவர்களைத் தேர்ந்தெடுத்து, அவர்களுக்குச் சிறந்த அடிப்படைக் கல்வி புகட்டுவதற்காக, ஃபர்ஸானேகான் பள்ளிகள் (Farzanegan) என்ற சிறப்புப் பள்ளிகளை நடத்துகிறது. ஆரம்பக் கல்விக்குப் பிறகு நுழைவுத் தேர்வு எழுதி, அந்தப் பள்ளியில் உயர்நிலை வகுப்பு வரை முன்னேறினார், மரியம். தொடக்கத்தில், அவருக்கு இலக்கியம் மீதுதான் ஆர்வம். அவரது கணித ஆசிரியர், மரியத்திற்குக் கணிதத் திறன்கள் இல்லை என்று வேறு குறிப்பிட்டார். அடுத்த ஆண்டு, வேறொரு கணித ஆசிரியர் நடத்திய வகுப்புகள் மரியத்திற்கு சுவாரசியமாகத் தெரிந்தன. கணிதத்தின் மீது கவனம் செலுத்தினார். ரோயா பெகஷ்டி (Roya Beheshti) என்ற வகுப்புத் தோழியுடன் இணைந்து, கணிதத்தைத் திறம்படக் கற்கத் தொடங்கினார். சர்வதேச கணித ஒலிம்பியாட் போட்டிகளில் கேட்கப்பட்ட பழைய கேள்விகள் இவை. 6 கேள்விகளில் எங்களால் மூன்றுக்கு விடை கண்டறிய முடிந்தது.இந்த ஆண்டு சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில் நானும், ரோயாவும் பங்கேற்க விரும்புகிறோம். அதற்கான தேசிய தகுதித் தேர்வில் கலந்துகொள்ள உதவுங்கள்.வெரி குட்! நமது நாட்டைப் பொறுத்தவரை ஆண்கள்தானே கலந்துக்க முடியும். ஏதாவது செய்ய முடியுமா பார்க்கிறேன்.மரியமும், ரோயாவும், தேசிய அளவிலான ஒலிம்பியாட் போட்டியில் பங்குபெற, அவர்களது தலைமை ஆசிரியர் ஒலிம்பியாட் போட்டி அமைப்பாளர்களிடம் முறையிட்டு ஆவன செய்தார். மேலும், தனது மாணவிகள் இருவரும் போட்டியில் வெற்றிபெற, அவர்களுக்கு சிறப்புப் பயிற்சிகளுக்கும் ஏற்பாடு செய்தார். விளைவாக, மரியமும், அவரது தோழி ரோயாவும் போட்டியில் சிறப்பாகப் பங்கேற்று, 1994ம் ஆண்டின், ஈரான் ஒலிம்பியாட் குழுவில் இடம்பிடித்தனர். அந்த ஆண்டு ஹாங்காங்கில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டியில், மரியம் 41/42 மதிப்பெண் பெற்று, தங்கம் வென்றார். ரோயாவுக்கு வெள்ளிப் பதக்கம் கிடைத்தது. அடுத்த ஆண்டு கனடாவில் நடைபெற்ற சர்வதேச ஒலிம்பியாட் போட்டியிலும் மரியம் கலந்துகொண்டு, 42/42 வாங்கி தங்கம் வென்றார்.ஈரானின் முக்கிய கல்வி நிறுவனமான ஷரீஃப் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில், கணிதத்தில் இளங்கலைப் படிப்பை முடித்தார், மரியம். தொடர்ந்து ஆய்வுப் படிப்பை, அமெரிக்காவின் ஹார்வார்டு பல்கலைக்கழகத்தில் படித்தார். அங்கு அவரது ஆய்வு நெறியாளர் கர்டிஸ் மேக்முல்லன் (Curtis McMullen). 'கணிதத்தின் நோபல் பரிசு' என்று போற்றப்படும் ஃபீல்ட்ஸ் பதக்கத்தை (Field's Medal) 1998ல் பெற்றவர் இவர். நான்கு ஆண்டுகளுக்கு ஒரு முறை நடக்கக்கூடிய சர்வதேச கணித மாநாட்டில், நாற்பது வயதுக்குள் கணிதத்தில் சாதிப்பவர்களுக்கு இந்தப் பரிசு வழங்கப்படுகிறது. 1936 தொடங்கி 2010ம் ஆண்டுவரை, ஒரு பெண்கூட அந்தப் பதக்கத்தைப் பெற்றதில்லை. பிரபஞ்சத்தில், ஒளி, துகள்கள், பொருட்கள், வாயுக்கள் எல்லாம் நகர்ந்து பரவுவதை, கணித சூத்திரங்களில் அடக்க முடியுமா? முடியும் என, மரியம் தனது ஆய்வுகள் வாயிலாக நிரூபித்தார். கணிதத்தில், ஹைபர்போலிக் ஜியாமெட்ரி (Hyperbolic Geometry) என்ற இந்தப் பிரிவு, இயற்பியல் உட்பட பல்வேறு துறைகளில் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஆராய்ச்சிகளுக்காக, 2014ம் ஆண்டின் ஃபீல்ட்ஸ் மெடல் பரிசு மரியம் மிர்ஸகானிக்கு வழங்கப்பட்டது. இந்தப் பரிசைப் பெற்ற முதல் பெண் என்ற பெருமையைப் பெற்றார் மரியம். தனது 40வது வயதில் சமீபத்தில் காலமானார். பெண்களுக்கு வாய்ப்புகள் குறைவாக இருக்கும் இந்த உலகில், சாதிக்கத் துடிக்கும் பெண்களுக்கு மரியம் ஒரு வழிகாட்டி! மரியம் மிர்ஸகானி (Maryam Mirzakhani)பிறப்பு: மே 3, 1977.மறைவு: ஜூலை 14, 2017.தந்தை: அஹமத் மிர்ஸகானி (Ahmad Mirzakhani), மின் பொறியாளர். தாயார்: ஸாரா ஹகீகீ (Zahra Haghighi). பிறப்பிடம்: டெஹ்ரான், ஈரான் தலைநகரம்.-இரா. செங்கோதை, ஆசிரியர், பை கணித மன்றம்