மாவுப் பூச்சி!
மாவு டப்பாவை ரொம்ப நாள் கவனிக்கமால் விட்டால், மாவில் பூச்சி வரும். நாமே முயன்று அந்த மாவிலேயே ஒரு கம்பளிப்பூச்சி செய்யலாம், வாங்க! இதைச் செய்யத் தேவையான மற்ற பொருட்களும் கூட சமையல் அறையிலேயே கிடைக்கும்! இந்தப் பொம்மை உங்கள் கற்பனைத் திறனுக்கு சவால் விடும். கை விரல்களையும் வேலை வாங்கும். நம் பார்வையோடு கைகள், விரல்களின் நுட்பமான அசைவுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் திறனை (Fine Motor Skills) வளர்ப்பதே இந்தப் பயிற்சியின் நோக்கம். இது போன்ற பயிற்சிகளால் தசைகள் வலுவடைவதோடு மூளையும் உடலசைவுகளும் ஒருங்கிணைந்து செயல்படும் திறனும் வளர்கிறது. அது மட்டுமல்ல, வெவ்வேறு வடிவங்களைப் பற்றியும், அளவுகளைப் பற்றியும், அமைப்பு முறைகளைப் பற்றியும் நாம் அறிந்துகொள்ள முடியும். இப்பயிற்சிகள், மேலும் மேலும் பரிசோதனை முயற்சிகளைச் செய்துபார்க்கத் தூண்டும். தேவையான பொருட்கள்:1. கோதுமை மாவு2. கூக்ளி கண்கள்3. காகித மொட்டுகள்4. மெல்லிய கம்பி5. வண்ணங்கள்6. தூரிகைகள்6. வார்னிஷ்* கோதுமை மாவை நீருடன் கலந்து பிசைந்து கொள்ளவும். * மென்மையான மாவைக் கொண்டு சிறு சிறு பந்துகளை உருட்டிக் கொள்ளுங்கள். * இந்தப் பந்துகளை கம்பியில் தொடுக்கவும். * மாவு காய்ந்து இறுகும் முன்னரே கூக்ளி கண்களையும், ஆன்டெனா போன்ற காகித மொட்டுகளையும் ஒட்டி விடவும். * பிறகு மூன்று நாட்களுக்கு இயல்பான வெப்பத்தில் உலர விடுங்கள். * முழுவதும் உலர்ந்த பிறகு அதில் விருப்பமான வண்ணங்களைத் தீட்டுங்கள். * அதன் மேல் ஒரு வார்னிஷ் பூச்சை அடித்து முடித்து விடுங்கள். அழகிய கம்பளிப்பூச்சி தயார்!-வர்ணா